‘வழிப்பறியில் ஈடுபடுகிறார்களா திருநங்கைகள்?’- கிரேஸ் பானு முன்வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகள்!

திருநங்கை சமூகத்தினர் மீதான பணப் பறிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் ஒழிய வேண்டுமென்றால், அவர்களுக்கான உரிமைகளையும் வேலைவாய்ப்பையும் விரிவுபடுத்தவேண்டும்.
Grace banu on transgenders
Grace banu on transgendersFile image

சென்னையில் ஓடும் ரயிலில் திருநங்கைகள் பணம் பறிப்பதாகவும் மிரட்டல் விடுப்பதாகவும் புகார் எழுந்ததையடுத்து, ரயில்வே கண்காணிப்பாளர் பொன்ராமு, திருநங்கைகள் நலனுக்காகச் செயல்படும் அரசு சாரா நிறுவனப் பிரதிநிதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை முடிவில் “ 'புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளிடம் இருந்து திருநங்கைகள் வலுக்கட்டாயமாக பணத்தை பறிக்கின்றனர். பணம் தர மறுக்கும் பயணிகளிடம் துஷ்பிரயோகம் செய்கின்றனர்' என ஜிஆர்பி ஹெல்ப்லைனில் பல புகார்கள் வந்துள்ளன.

இப்படியான விஷயங்களை ஏற்க முடியாது என்பதால், திருநங்கை ஆர்வலர்களிடையே பேசினோம். சகோதரன் அமைப்பு பிரதிநிதிகளிடமும் பேசினோம். இனி இதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது” என்றார் பொன்ராமு.

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் பெரம்பூர் மற்றும் வியாசர்பாடியில் திருநங்கைகளிடம் 15,000 ரூபாயை பயணிகள் இழந்த இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்குப்பின் சகோதரன் அமைப்பின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய திருநங்கை சுதா அன்றைய செய்தியாளர்களிடையே கூறுகையில், “வேலைவாய்ப்பின்மையை ஒழிக்க, திருநர் சமூகத்துக்கு வேலைகளை கண்டுபிடித்து கூறுவதே எங்கள் பணி. அதற்காகவே நாங்கள் பணியாற்றி வருகிறோம். முன்பை விட இப்போது, யாசகம் கேட்கும் திருநங்கைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் இன்னும் அது முன்னேற வேண்டும். திருநங்கைகள் யாசகம் கேட்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதற்கு அவர்களை ஊக்கப்படுத்துவோம்.

திருநங்கை
திருநங்கை

குற்றச்செயல்களில் ஈடுபடும் திருநங்கைகளை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று போலீசாரிடம் இன்று தெரிவித்துள்ளோம். காவல்துறை தங்கள் கடமையை செய்ய, எங்களால் எந்தவித இடையூறும் வராது என அதிகாரிகளிடம் உறுதியளித்துள்ளோம்” என்றார்.

இச்சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திருநங்கை மற்றும் சமூக ஆர்வலர் கிரேஸ் பானுவிடம் நாம் பேசினோம்.

அவர் நம்மிடையே பேசுகையில், “சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் திருநர்கள், பொதுமக்களிடம் வற்புறுத்தி பணம் கேட்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. அப்படியான சம்பவங்கள் நடக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. அதேநேரம், அதன் பின்னணியை நாம் அறிய வேண்டும். அச்சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசும் அரசாங்கம் இங்கு இல்லை. அதுவே சிக்கல்களுக்கு காரணம். அரசு தரும் மானியம் மற்றும் பிற உதவிகள் யாவும், உரிமை சார்ந்த ஒன்றாக மட்டுமே உள்ளது. நலம் சார்ந்த நிலைக்கு அச்சமூகத்தினர் இன்னும் கஷ்டப்படுகின்றனர். அதனாலேயே இப்படியான சிக்கல்கள் எழுகின்றன.

Grace Banu
Grace Banu

இவை தடுக்கப்பட வேண்டுமெனில்...

அரசிடம் எங்களுக்கு சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அதன்படி, அடிப்படை உரிமைகளான கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, அரசியலில் பங்குபெறும் உரிமை, இட ஒதுக்கீடு உரிமை போன்றவை திருநர் சமூகத்துக்கு கிடைக்கவில்லை. இந்த அடிப்படை உரிமைகள், ஒரு சிலருக்கு மட்டுமே, அதிலும் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே கிடைக்கிறது. எனில் அது எப்படி சம உரிமையாகும்? எங்களுக்கும் அந்த உரிமைகள்யாவும் வேண்டும்.

2013 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதக்கூட எங்களுக்கு உரிமை இல்லை என்றது அரசு. பின் நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி தேர்வு எழுதும் உரிமை பெற்று எழுத வேண்டியதாயிற்று. அப்படி போராடி எழுதி, அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒருசிலர்தான். ஆனால் அவர்கள் அனைவருக்குமும் வேலை கிடைகவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஒருவர் 300 மதிப்பெண்களுக்கு 210 மதிப்பெண்கள் எடுத்தும் ‘வகுப்பு வாரியாக பார்க்கையில் அவர் தேர்ச்சி பெறவில்லை’ என்று அரசு கூறியது மிக அவர்ச்சியாக இருந்தது.

70 ஆண்டுகளாக அடிப்படை உரிமை கிடைக்காத எங்கள் தோழமைகள், வேலைவாய்ப்பும் இல்லாததால் பிச்சை எடுத்தும், பாலியல் தொழில் செய்தும் பணம் ஈட்டுகின்றனர். அதில் வரும் பணத்தில் இருந்து வரி எதிர்பார்ப்பது நியாயமா?

பெண்களும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடி தான் இன்று படிப்படியாக உரிமைகளை பெற்று வருகின்றனர். அதைப் போன்று தான் எங்களுக்கும் உரிமைகளில் மாற்றங்கள் வேண்டும் என்று கூறுகிறோம். எங்கள் விஷயத்தில் நாங்கள் மட்டும் ஏன் பிச்சை எடுத்து, பாலியல் தொழில் செய்து பிழைக்க வேண்டும்? ஏன் பிற பாலினத்தவர்களெல்லாம் அதை செய்ய முடியாதா? எங்களுக்கு வேலைவாய்ப்பும் சமூக அந்தஸ்தும் கிடைக்கையி நிச்சயம் நிலைமை மாறும்” என பல மறுக்கமுடியாத கேள்விகளை எழுப்பி அழுத்தமாக பேசினார்.

திருநங்கை
திருநங்கை

மேலும் அவர் பேசுகையில், “திருநர் சமூகத்துக்கு கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை உட்பட அனைத்து சம உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசு வழங்க வேண்டும். ஆண் பெண் இருபாலரும் பங்கு பெறும் அனைத்து இடங்களிலும் எங்களுக்கும் உரிமைகள் வேண்டும். எங்களுக்கான உரிமைகளை கொடுக்கும் முன், அது எங்களுக்கு எந்தளவு பயன்படும் என்பதையும், எங்களுக்கு வேறென்ன உரிமைகள் தேவை என்பதையும் எங்களிடம் அரசு கேட்க வேண்டும். எங்களுடைய உரிமையை எங்களுக்கு கொடுத்தால், நாங்கள் ஏன் எங்களுடைய சுய கெளரவத்தை விட்டு யாசகம் கேட்கப்போகிறோம்?” என்றார் அழுத்தம்திருத்தமாக.

உண்மையில் கிரேஸ் பானு சொல்வதுபோல, திருநர் சமூகத்தினர் மீதான பண பறிப்பு, பாலியல் குற்றச்சாட்டுகளெல்லாம் ஒழிய, அவர்களுக்கான உரிமைகளும் வேலைவாய்ப்பும் விரிவுபடுத்தப்படவேண்டும். அந்த பாதையை நோக்கி அரசு செயல்பட வேண்டும் என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

- சிவ பாரதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com