வங்காள ஓவியரை கெளரவித்தது கூகுள் டூடுல்

வங்காள ஓவியரை கெளரவித்தது கூகுள் டூடுல்

வங்காள ஓவியரை கெளரவித்தது கூகுள் டூடுல்
Published on

உலகப் புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்த ஜமினிராயின் பிறந்தநாளை கூகுள் நிறுவனம், முகப்பில் வைத்து கெளரவப்படுத்தி உள்ளது. 1955-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்ற ஜமினிராய், கலை அனைத்து மக்களுக்குமானது என்பதை தனது கலைப்பயணம் முழுவதும் வலியுறுத்தியவர்.

ஜமினிராய் குறித்து அவர் மகன் மோனிராய் கூறும்போது, 1943ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கண்காட்சியில், அப்பாவின் ஒரு ஓவியத்தை வாங்க வெளிநாட்டினர் ஏழு பேர், ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தனர். அந்த ஏழு பேருக்கும் அதே ஓவியத்தை, ஒவ்வொருவருக்கும் சற்றே வித்தியாசமாக வரைந்தளித்து வந்தவர்களை ஆச்சர்யத்தில் திளைக்கச் செய்தார். ஓவியத்தில் உண்மையான ரசனை உள்ளவர்களே, தன் ஓவியங்களை வாங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்தக் காரணத்தால் எத்தனையோ முறை, வெறும் ஆடம்பரப் பிரியத்துக்காகவே தன் ஓவியங்களை வாங்கவிழைந்த பலருக்கு அவர் விற்காமல் இருந்திருக்கிறார். விற்றுவிட்ட தன் ஓவியங்களை தக்க முறையில் பராமரிக்கவில்லை என்ற காரணத்தால் அவர் அதை திரும்பி வாங்கிய நிகழ்வுகளும் உண்டு’ என்று நினைவு கூர்ந்தார்.

1950-களில் ஜமினிராய், ஓவியங்கள் வரையப்படும் பொருட்களில், பல முறைகளைச் சோதிக்க ஆரம்பித்தார். உதாரணமாக பனையோலையால் வேயப்பட்ட தடுக்குகளில், தன் ஓவியங்களை வரைந்தார். கண்ணாடிப் பாத்திரங்களிலும் கோப்பைகளிலும் வரைந்தார். நோய் வாய்ப்பட்டதன் காரணமாக, 1960க்குப் பிறகு, அவரது ஓவியங்களின் எண்ணிக்கை குறைந்தாலும், இக்காலத்தில் மொசைக் வகை ஓவியங்களை வரைந்து வந்தார். ஜமினிராய், தன் ஓவியங்கள் பொதுமக்களைச் சென்றடைய வேண்டும் என்றும், சில ஓவியக் காட்சியகங்களில் மட்டும் சிறைபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தை உடையவராகவும் விளங்கினார். மிக எளியவர்களும் வாங்கும் வகையில் குறைந்த விலையில் தன் சித்திரங்களை விற்றார்.

ஒரு நாளில் பத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரையும் திறமை கொண்ட அவர், எந்த ஒரு ஓவியத்தையும் 350 ரூபாய்க்கு மேலாக விற்றதில்லை. சில நேரங்களில் தன் படைப்புகளை, ஐம்பதுக்கும் மேலான நகல்களை வரைந்து விற்றார். அவர் ஓவியங்க்ளில் அமைந்த எளிமை, எளியவர்களையும், கலை வல்லுநர்களையும் ஒருசேரக் கவர்ந்தது எனலாம். அவருடைய சில ஓவியங்கள் அமெரிக்காவில் சமீபத்தில் பத்தாயிரம் டாலருக்கு விற்கப்பட்டன. அவர் நினைத்திருந்தால், தன் ஓவியங்களை அதிக விலையில் விற்று மிகப்பெரும் செல்வந்தராக ஆகியிருக்கலாம்.

தன் ஓவியங்கள் எளியவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதிலேயே அதிக ஆர்வம் உடையவராக விளங்கினார். அவருக்கு அரசு விருது அளிக்க விரும்பிய அந்நாளைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் அழைப்பையும் ஜமனிராய் ஏற்க மறுத்தார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com