ஈட்டும் வருவாயில் 24% வரி கேட்கும் கூகுள்... யூடியூபர்கள் கவனத்துக்கு!
சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் உலகம் முழுவதும் பலர் வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், இனி ஒவ்வொரு யூடியூப் கிரியேட்டரும் வீடியோ மூலம் தாங்கள் ஈட்டும் 100 அமெரிக்க டாலர்களுக்கு, 24 அமெரிக்க டாலர்கள் வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.
இதனை வரும் ஜூன் 2021 முதல் நடைமுறைக்கு கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளதாம். இந்த வரி விதிப்பு அமெரிக்கா நீங்கலாக இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் யூடியூபர்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பார்வையாளர்கள் பார்ப்பதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த கிரியேட்டர்கள் ஈட்டுகின்ற வருவாயில் இருந்துதான் ராயல்டி கேட்கிறோம் என கூகுள் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
“AdSense மூலமாக உங்களது வரி சம்மந்தமான விவரங்களை சமர்பிக்க வேண்டி இருக்கும். பயனர்களுக்கு வரி பிடித்தம் பொருந்தினால் அதற்கேற்றபடி வரியில் பிடித்தம் இருக்கும். இந்த தகவல்களை மே 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டியிருக்கும். தவறும் பட்சத்தில் மொத்த வருவாயில் 24 சதவிகிதம் வரை வரியாக செலுத்த வேண்டி இருக்கும்” என கூகுள் கிரியேட்டர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளதாம்.
இந்தியாவில் இயங்கும் யூடியூப் சேனல்களில் 1700-க்கும் மேற்பட்ட சேனல்கள் தலா 10 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது. அவர்கள் இந்த வரி விதிப்பினால் பாதிக்கப்படலாம்.
மே 31 ஆம் தேதிக்குள் வரி சம்பந்தமான விவரங்களை சமார்பித்த கிரியேட்டர்களிடம் இருந்து 15 சதவிகிதம் வரி மட்டுமே பிடித்தம் செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. அதனால், யூடியூப் கிரியேட்டர்கள் அனைவரும் உடனடியாக சம்மந்தப்பட்ட விவரங்களை சமர்பிக்க கூகுள் வேண்டுகோள் விடுத்துள்ளது.