'ஆப்' இன்றி அமையா உலகு 19: ‘கூகுள் ஆர்ட்ஸ்&கல்சர்’ கலை உலகை விர்சுவல் உலா வர உதவும் செயலி!

'ஆப்' இன்றி அமையா உலகு 19: ‘கூகுள் ஆர்ட்ஸ்&கல்சர்’ கலை உலகை விர்சுவல் உலா வர உதவும் செயலி!
'ஆப்' இன்றி அமையா உலகு 19: ‘கூகுள் ஆர்ட்ஸ்&கல்சர்’ கலை உலகை விர்சுவல் உலா வர உதவும் செயலி!

கிளிமஞ்சாரோ உச்சியில் ஏறவும், எகிப்து பிரமிடுகளை பார்க்கவும், கடலுக்கு அடியில் உள்ள கடற்பரப்பை பார்க்கவும், வெர்செய்ல்ஸ் அரண்மனை தோட்டத்தை சுற்றி பார்க்கவும், அமேசான் காடுகளில் பயணிக்கவும் உதவுகிறது கூகுள் நிறுவனத்தின் ‘ஆர்ட்ஸ் & கல்சர்’ என்ற செயலி. இந்த செயலியின் மூலம் அவரவர் இருந்த இடத்தில் இருந்தபடியே விர்ச்சுவலாக அனைத்தையும் செய்யலாம் என்ற சாத்தியத்தை உருவாக்கி உள்ளது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி.  

உள்ளங்கையில் பரந்து விரிந்த பூவுலகின் சிறப்புமிக்க கலைகள், கலைஞர்களின் படைப்புகள், நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியங்கள் என விதவிதமான இடங்களை 3டி வடிவில் இதன் ஊடாக எக்ஸ்ப்ளோர் செய்யலாம். 

கூகுள் ஆர்ட்ஸ் & கல்சரின் நோக்கம் என்ன?

உலக நாடுகளின் கலை மற்றும் கலாச்சாரத்தை இணைய இணைப்பு வசதி கொண்ட டிஜிட்டல் சாதனத்தை கொண்டுள்ள யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் அக்செஸ் செய்யக்கூடிய வகையிலான பணியை செய்வதுதான் ஆர்ட்ஸ் & கல்சரின் நோக்கம். இதன் மூலம் கலாச்சார புகழை பறைசாற்றும் அந்த கலைப்படைப்பை ஆன்லைனில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. லாப நோக்கமின்றி இந்த முயற்சியை கூகுள் மேற்கொண்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள கலாச்சார நிறுவனங்கள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்து கூகுள் பணியாற்றி வருகிறது. 

இதன் சிறப்பம்சங்கள்!

>கூகுள் ஆர்ட்ஸ் & கல்சரை இலவசமாக கணினி, ஆண்டராய்ட் மற்றும் ஆப்பிள் iOS இயங்குதளம் கொண்ட போன்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களில் இலவசமாக பயன்படுத்தலாம். இதற்கு இணைய இணைப்பு மட்டுமே தேவைப்படுகிறது. 

>டென்மார்க், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கனடா, இலங்கை, ஈரான், துருக்கி, மெக்சிக்கோ, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, இத்தாலி, பெல்ஜியம், தாய்லாந்து, தென் கொரியா, போலந்து, நார்வே, சிங்கப்பூர், உக்ரைன், எகிப்து, பாகிஸ்தான் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளின் எண்ணில் அடங்கா கலை பொக்கிஷங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. உலகின் அனைத்து கண்டங்களில் உள்ள நாடுகளும் இதில் இடம் பெற்றுள்ளது சிறப்பு. 

>அதுவும் ஓவியம், இசை, சிற்பம், கட்டுமானம் என வெவ்வேறு கலை வடிவங்களை உள்ளடக்கி உள்ளது இதன் ஸ்பெஷல்.

>இந்தியாவில் சென்னை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள சில கலைத்துவமிக்க இடங்களையும் இதில் அக்செஸ் செய்யலாம். 

>அருங்காட்சியங்கள், கண்காட்சி கூடங்கள், உயிரியல் பூங்கா மாதிரியானவற்றை ஸ்ட்ரீட் வியூவில் இந்த செயலி மூலம் அக்செஸ் செய்யலாம். 

>ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ்மியூசியம் (Rijksmuseum), லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம், பிரான்ஸ் நாட்டில் உள்ள மியூஸி டி'ஓர்சே, பெர்லினில் உள்ள பெர்கமோன் அருங்காட்சியகம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால், ரோமில் உள்ள கொலோசியம், எகிப்து நாட்டின் எல் கிசாவில் உள்ள கிசாவின் பெரிய பிரமிட், மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும் உலகின் பிரசித்தி பெற்ற கலை அரங்கங்கள், பாரம்பரிய தளங்கள், சர்வதேச விண்வெளி நிலையம் என பல்வேறு இடங்களை இதில் சுற்றிப்பார்க்கலாம். பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் Zoom செய்து பார்க்கும் வசதியும் உள்ளது. 

>அதுமட்டுமல்லாது டிஜிட்டல் ஸ்டோரேஜ் மீடியாவின் வரலாறு. இதில் பன்ச் கார்டுகள் தொடங்கி கிளவுட் ஸ்டோரேஜ் வரையிலான வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல சுவாரஸ்யமிக்க கட்டுரைகளும் இதில் உள்ளன.  

>இதில் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புமிக்க இடங்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியங்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

>உலகின் தொன்மையான ஆர்ட் கேலரி, உலகம் முழுவதுமுள்ள கலைஞர்களின் படைப்புகளும் உள்ளன. இதில் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது. நீலகிரி மலை ரயிலின் கதை மற்றும் அதன் ஸ்ட்ரீட் வியூவை கூட இதில் அக்செஸ் செய்யலாம். 

>இது தவிர இதில் கலை சார்ந்த விளையாட்டுகளும் உள்ளன. கிராஸ்வேர்டு, Puzzle, ஆர்ட் கலரிங் புக் மாதிரியானவை உள்ளன. அதே போல பழங்கால கலை படைப்புகளின் தீமில் செல்ஃபி எடுத்தும் விளையாடலாம். மொத்தத்தில் இந்த செயலி கலையை நேசிப்பவர்களுக்கும், உலகை ஒரு ரவுண்டு அடிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com