எளியோரின் வலிமைக் கதைகள் 5 - "இப்போ கம்மியான செய்கூலிதான் வருது; சேதாரம் தர்றதே இல்லை!"

எளியோரின் வலிமைக் கதைகள் 5 - "இப்போ கம்மியான செய்கூலிதான் வருது; சேதாரம் தர்றதே இல்லை!"
எளியோரின் வலிமைக் கதைகள் 5 - "இப்போ கம்மியான செய்கூலிதான் வருது; சேதாரம் தர்றதே இல்லை!"

தங்கம்... நம் சமூகத்தில் எக்காலத்திலும் தவிர்க்க முடியாத ஒன்றாகத் திகழ்கிறது. தங்க நகைகள் அணிவதில் ஆர்வம் மிகுந்தவர்கள் வாழும் சமூகம் நம்முடையது. தங்கத்துக்கும் நமக்குமான பிணைப்பை, இதோ இப்போது கீழடி அகழாய்வில் கிடைத்திருக்கும் ஆபரணம் கூட சொல்லும்.

"காதுல ஒரு குண்டுமணி அளவு கூட ஒரு நகையை காணோம்" - இது தங்க நகை அணியாதவர்களைப் பார்த்து கேட்கப்படும் சாதாரண கேள்விதான். 'குண்டுமணி அளவுக்காவது நகை இருக்கணும்' என்ற வாக்கியத்தை இப்போதுகூட கேட்க முடிகிறது. பெரும்பாலும் நம் சமூகத்தில் பெண்கள் தங்க நகைகள் அணியும் கலாசாரம் உண்டு. ஏழைப் பெற்றோர் கூட தங்கள் பிள்ளைகளுக்கு கால் பவுன் நகையாவது வாங்க ஆசைப்படுவர். சிறுக சிறுக சேர்த்து வைத்து அந்த ஆசையை நிறைவேற்றவும் செய்வர்.

இன்னொரு பக்கம், ஆதிகாலம் தொட்டு கொரோனா காலம் வரையில் நம் மக்களின் 'எமர்ஜென்சி ஃபண்ட்'டுக்கு உறுதுணையாக இருக்கின்றன தங்க நகைகள். சரி, இப்படி பலச் சிறப்புமிக்க தங்க நகைகளைச் செய்கின்ற தொழிலாளர்களின் இன்றைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?

வாருங்கள்... விடை தேடுவோம்.

காலை ஏழு மணி. விழுப்புரத்தில் ஒரு குறிப்பிட்ட தெரு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சில இளைஞர்கள் வீட்டுக்கு வெளியே மசாலா அரைக்கிற மாதிரி ஏதோ அரைத்துக் கொண்டிருந்தனர். "என்ன பண்றீங்க?" என்று ஒருவரிடம் கேட்டதற்கு, "பட்டறை தேய்க்கிறோம்" என்றார். 'பட்டறை தேய்க்கிறது' - இது வட தமிழ்நாடு; 'பட்டறை விளக்குவது' - இது தமிழ்நாட்டு வழக்கு.

நாம் அணியும் தங்க நகைகளை முதலில் உருவெடுக்கும் இடம்தான் இந்தப் பட்டறை. இங்கு வைத்து சுத்தியலால் தட்டி தகடாக்கியோ அல்லது கம்பியாக்கியோ தங்கத்தை நமக்குக் கொடுக்கிறார்கள். அத்தகைய பட்டறையை மணல் போட்டு சமமாக தேய்த்துப் பயன்படுத்துவார்கள். "நகை வேலை செய்யணும்னா, முதல்ல பட்டறை தேய்க்க கத்துக்கணும். அதேபோல மற்ற உபகரணங்களையும் சுத்தமா சரியாக வச்சிருக்கணும்" என்கிறார் 70 வயது சூரியமூர்த்தி. என்னிடம் அவர் விரிவாகப் பேசத் தொடங்கினார்.

"கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை தாங்க எங்க பூர்விகம். 13 வயசுல எங்க அப்பாவுக்கு துணையா இந்த வேலைக்கு வந்தேன். ஐந்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அதுக்கு மேல படிக்கலை. அப்புறம் பட்டறை தேய்க்கிறது, உமியோடு தயார் பண்றது, உமி கொட்டி குமிட்டி தயார் செய்யறதுன்னு கொஞ்சம் கொஞ்சமா வேலை கத்துக்கிட்டு தீர்மானமா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேங்க" என்றவரிடம்,
"அது என்ன தீர்மானம்?" என்று கேட்டேன்.

"தீர்மானம்னா, இந்த பட்டறை தேய்க்கிறது தொடங்கி நகை முழுசா பத்த வச்சி பாலீஷ் போடுற வரைக்கும் எல்லா வேலையும் ஒரே ஆளா செய்வதற்கு பேருதாங்க தீர்மானம். புதுப்பேட்டையில் வேலை கத்துகிட்டு உளுந்தூர்பேட்டையில் வேலை செஞ்சேன். அப்புறம் சொந்தமா பட்டறை வச்சிட்டேன்.

நான் பட்டறை வைக்கிற காலத்துல ஒரு பவுன் 35 ரூபாய். ஒரு நாளைக்கு குறைஞ்சது 4 முதல் 8 மோதிரங்கள் செய்வேன். அப்ப எனக்கு கூலி 70 ரூபாய் கிடைக்கும். மோதிரம், ஒட்டியாணம், கம்மல், மூக்குத்தி, நெக்லஸ்ன்னு விதவிதமாக உருப்படி செய்வேன். அப்ப எல்லாம் தங்க நகை வாங்க எங்ககிட்டதான் மக்கள் வருவாங்க. இப்ப எல்லாம் எங்க வர்றாங்க... நேரா விளம்பரத்தைப் பார்த்து கடைகளுக்கு போயிடுறாங்க. எங்ககிட்ட வந்தாங்கன்னா இந்த டிசைன்னு காட்டினா செஞ்சு கொடுப்போம். ஆனா கடையில காட்டுற டிசைனைதான் வாங்கிட்டுப் போகணும். அப்ப எல்லாம் கல்லு வச்ச உருப்படி செய்ய நிறைய ஆளுங்க இருந்தாங்க. இப்போ இந்த ஊர்ல கல்லு வச்சி நகை செய்யற கடைசி ஆள், நானாதான் இருக்கும். கூலி குறைவா இருக்கு. அதனால நிறைய பேர் இந்த வேலை விட்டுட்டாங்க.

கல்யாணத்துக்கு தாலி செய்வதை அப்போவெல்லாம் வீட்ல நடக்கிற விழாபோல கொண்டாடுவாங்க. தாலி செய்ய தங்கம் கொடுக்க வீட்டிலுள்ள பெரியவங்க புடைசூழ வருவாங்க. தேங்காய் பூ, பழம் கொடுத்து தாலி செய்ய தங்கம் காசு தருவாங்க. மதுரை பக்கம் எல்லாம் 'பொன்னுருக்கும் விழா'-ன்னு பேரு. அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறிப் போச்சு.

அப்போ தங்கம் கொடுத்து உருப்படி செய்து வாங்கும்போது செய்கூலி, சேதாரம் எல்லாம் வேலை செய்யுற எங்களுக்கு கொடுப்பாங்க. இப்போ எங்கே... கூலி எல்லாம் கிடையாதுங்க. டச்சு கணக்குதான். சொற்பக் கூலிக்கு வேலை செய்றோம். ஒரு பவுன் மோதிரம் செய்து கொடுத்தா 1200 ரூபாய் கிடைக்கும். ஆனால், ஒரு பவுன் மோதிரம் விற்கும்போது செய்கூலி அது இதுன்னு ஐந்து மடங்கு வசூலிப்பாங்க. செய்கூலி, சேதாரம் அப்படின்னு சொன்னவுடனே நகை வாங்குறவங்க எங்களைத்தான் நினைச்சுக்குவாங்க, நாங்க ஏதோ வாங்குகிற மாதிரி.

இப்ப இந்த வேலை செய்ய ஆள் அதிகமா இருக்காங்க. ஆனா, கூலிதான் குறைவா கொடுக்குறாங்க. இப்போ சாதாரணமா ஒரு மூக்குத்தி கடையில விக்கிற விலை 600 ரூபாய்... ஒரு கிராம்ல 10 மூக்குத்தி செய்வோம். ஒரு மூக்குத்தி செய்ய 16 ரூபாய்தான் கூலி. நான் முடியாதுன்னு சொல்லிட்டா செய்வதற்கு வேறு ஆள் இருக்காங்க. என்ன செய்யறது வேற வேலை தெரியாததால் அவங்க கொடுக்கிற சொற்ப கூலிக்கு வேலை செய்ய வேண்டியதாப் போச்சு.

என் வயசு ஆளுங்க பாதிபேர் இப்போ உயிரோட இல்லை. மீதி பேர் உயிரோடு இருந்தாலும் வேலை செய்ற உடல்நிலை, மனநிலையில இல்லை. அப்போ எல்லாம் வேலை பார்ப்பாங்க... கூலியை பார்க்கமாட்டாங்க. இப்போ யார் இந்த வேலையை பார்க்கிறாங்க... கூலிதான் பெருசா தெரியுது. அதுவும் இப்ப எல்லாம் இந்த வேலையை செய்வதற்கு மெஷின் வந்துடுச்சு. அதிலேயும் வேலை செய்யறதுக்கு வேறு மாநிலத்திலிருந்து ஆளு வந்துட்டாங்க. நாங்க என்னமோ குமட்டி வச்சிக்கிட்டு ஊதாங்குழல்ல ஊதிக்கொண்டே இருக்கிறோம். எங்களை யார் கவனிக்கிறார்கள்?

எங்களை போல வேலை செய்றவங்க கடை வச்சு, நம்ம வேலை கூலி எல்லாம் கவனத்தில் வச்சு வியாபாரம் செய்தாங்கன்னா, ஏதாவது எங்களுக்கு நல்ல கூலி கிடைக்கும். நிறைய பேர் பணம் வச்சி இருக்காங்க. அதனால முதலீடு போட்டு உருப்படி வாங்கி கடை வச்சிக்கிறாங்க. அவர்களுக்கு லாபம் ஒண்ணுதான் குறிக்கோள். ஆமா, என்ன செய்றது... அங்க இப்ப தங்கம் முதலீட்டுக்கான குறியீட மாறிப்போச்சு. விக்கிறவங்களும் வாங்குபவர்களும் இப்போ முதலாளி ஆயிட்டாங்க... செய்றவங்க இன்னுமும் கூலியாக இருக்காங்க" என்று வேதனைப்பட்டுக் கொண்டார்.

அதோடு நிறுத்தாமல், "குறைந்த கூலியால வீட்ல நடக்கிற சுக துக்க நிகழ்வுக்கு கூட கடன் வாங்க வேண்டியிருக்கு. அப்படி வாங்குற கடனை அடைக்க முடியாம அப்பா, தாத்தா சம்பாதித்து வெச்ச பூர்விக சொத்தை விற்க வேண்டியிருக்கு. அதுவும் முடியாதவங்க நிலைமைதான் ரொம்ப மோசம்.

கூலி குறைவ கிடைச்சாலும் நாங்க செய்கிற செலவு எல்லாரும் போலதான் சமமா இருக்கு. ஏதோ எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. அதனால தெம்பா இருக்கிறேன். இன்னும் பட்டறை தேய்க்கிறது, நகை உருக்கிறது, காய்ச்சுவது மின்னுதல்னு போய்கிட்டே இருக்கு. எவ்வளவோ நாளோ தெரியல" என்றார் சத்தியமூர்த்தி, மின்னுகிற தங்கத்துக்கு மத்தியில் இறுக்கமான முகத்தோடு.

தங்க நகை வாங்கும் நமக்கெல்லாம், அவற்றைச் செய்யும் தொழிலாளர்கள் பற்றி பெரிதாகத் தெரியாது. நம்மில் பலரும் நேரடியாக ஜுவல்லரி கடைகளுக்குச் சென்று நகைகளை வாங்குகிறோம். ஆனால், ஜுவல்லரி நிறுவனங்களின் நெருக்கடியால் குறைந்த கூலியை வாங்கிக் கொண்டு நகைகளைச் செய்து தருவதாகச் சொல்கிறார்கள் இந்த நகை செய்யும் தொழிலாளிகள்.

அடுத்து என்னிடம் பேசிய உமாபதி ஒரு பட்டதாரி இளைஞர். தலைமுறை தலைமுறையாக தங்க நகை செய்யும் குடும்பம் இவருடையது. படிக்கும்போதே அப்பாவுடன் சேர்ந்து நகை செய்யும் தொழிலைக் கற்றுக் கொண்டார். இப்போது நகைத் தொழில்தான் எல்லாம்.

என்னிடம் அவர் சொன்னது இன்னமும் அதிர்ச்சிகரமாக இருந்தது. "1984, 85 வாக்குல அப்பாகிட்ட உதவியா வேலைக்கு சேர்ந்தேன். படிச்சுட்டே வேலை செஞ்சுகிட்டு இருந்தேன். அப்ப எல்லாம் அப்பா கல்லு வெச்ச நகைதான் அதிகமா செய்வார். கொஞ்சம் கொஞ்சமா கல்லு வெச்ச நகைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு, அதுக்கப்புறம் மூக்குத்திதான் பிரபலம். உடனே மூக்குத்தி செய்யத் தொடங்கிட்டோம். 100 கிராம் மூக்குத்தி செய்தா, பத்து சதவிகிதம் சேதாரம் தங்கம் கொடுப்பாங்க. அதாவது, 90 கிராம் நம்மகிட்ட எடை போட்டு திரும்பி வாங்கிக்குவாங்க. ஒரு மூக்குத்திக்கு 15 ரூபாய் கூலி. அப்ப இருந்த விலைவாசிக்கு அது போதுமானதாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமா காலங்கள் மாற மாற 2005 வாக்கல 100 கிராம் மூக்குத்தி செய்ய 6% சேதாரம் கொடுத்தாங்க. 100 கிராம் நகையோட மதிப்பு 2 லட்ச ரூபாய்னா, சேதாரம் 6 சதவீதம் 12,500 ரூபா கொடுப்பாங்க. 'பரவாயில்லையே பெரிய அளவுதான் கூலி கிடைக்குதே' அப்படின்னு நீங்க நினைக்கலாம். 100 மில்லி கிராம் தங்கத்தில் மூக்குத்தின்னா 100 கிராம்ல 1,000 மூக்குத்திகள் செய்யணும். ஒரு மூக்குத்தி செஞ்சா 15 ரூபாய்தான் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒருத்தர் 50-லிருந்து 100 மூக்குத்தி வரைக்கும்தான் செய்ய முடியும். அதுவும் இதே வேலையா இருந்தாதான் முடியும்.

இப்போ சேதாரம் சுத்தமாக கொடுக்கிறது இல்லை. நேரடியாக கூலிதான். அந்தக் கூலியை வெச்சு குடும்பம் நடத்துறது ரொம்ப சிரமம். இப்ப அந்த வேலைக்கும் வடநாட்டில் இருந்து ஏராளமான ஆளுங்க வந்துட்டாங்க. அதனால எங்க பொழப்பு ரொம்பவும் கவலைக்கிடமாதான் இருக்கு. அதுவும் இல்லாம இப்ப நகை வேலை செய்வதற்கு எல்லாத்துக்கும் மிஷின் வந்துருச்சு. எதிர்காலத்தில் மெஷினை இயக்குறவங்கதான் நெக்லஸ், வளையல் செய்ய முடியும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா எங்களுடைய வேலை முழுக்க காணாமல் போய்விடும்னும் சொல்லலாம். இதற்கு ஒரே வழி அரசாங்கம் கூலியை நிர்ணயிக்கணும். முதலாளி கிட்டே இருந்து முறையான கூலியை வாங்கித் தரணும். நகைக் கடைகளை கண்காணிக்கணும். இப்படி இருந்தா நல்லா இருக்கும்; நகைத் தொழிலாளர்களும் நல்லா இருப்பாங்க" என்றார் உமாபதி.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com