நாகாலாந்து தேர்தலில் இளைஞர்கள் புது புரட்சி..!

நாகாலாந்து தேர்தலில் இளைஞர்கள் புது புரட்சி..!

நாகாலாந்து தேர்தலில் இளைஞர்கள் புது புரட்சி..!
Published on

நாகாலாந்து மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இளைஞர்கள் சிலர் மேற்கொண்ட முயற்சி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 

இந்தியாவை பொறுத்தவரை தேர்தல்களின் போது, வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது என்பது கண்கூடு. இது ஒளிவு மறைவில்லாத உண்மை. தேர்தல் ஆணையமும் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வாக்களர்களுக்கு பணத்தை வழங்கிவிடுகிறார்கள். அதற்கு சில பார்முலாக்கள் என்று பெயர் வைக்கிறார்கள். இதில் எந்த மாநிலமும் விதிவிலக்கல்ல. பிரதான கட்சிகளில் சில சொற்பமான கட்சிகளை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுக்கும் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளன. இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தேர்தல் ஆணையமும் ஒவ்வொரு தேர்தலின் போதும்  பல்வேறு வழிமுறைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. 

தற்போதும் தேர்தல் சீசன்தான். திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களை சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 

நாகாலாந்து மாநிலத்தில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், ‘தூய்மையான தேர்தல்’ என்ற முழக்கத்துடன் இளைஞர்கள் சிலர் மேற்கொண்ட முயற்சிதான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு கிரியேட்டிவான முயற்சிதான் அது. வாக்குக்கு பணம் வாங்கக் கூடாது என்ற கருத்தை அடிப்படையாக வைத்து மூன்று வீடியோவை திரைத்துறையைச் சேர்ந்த இளைஞர்கள் தயாரித்து சில வாரங்களுக்கு முன் யூடியூப்-ல் வெளியிட்டனர். சிலர் இளைஞர் அதில் நடித்துள்ளனர்.

இதில் முதல் வீடியோ (5.53 நிமிடங்கள்) அரசியல்வாதிகளை பயங்கரமாக கிண்டல் செய்து எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஓர் அரசியல்வாதி வெளிப்படையாக வாக்குக்கு காசு கொடுப்பது பற்றியும், உங்களுக்கு எதனையும் செய்யமாட்டேன் என்பது பற்றியும் நகைச்சுவையாக பேசுகிறார். அதனை சிலர் கைதட்டி வரவேற்று உற்சாகப்படுத்துகிறார்கள். 

இரண்டாவது வீடியோவில்(6.42 நிமிடங்கள்), தற்போது இளைஞர்கள் மனதில் தேர்தல்கள் குறித்தும் வாக்களிப்பது பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து பேசப்படுகிறது. இதில், சில இளைஞர்கள் வாக்களிப்பது பணம் கொடுக்கக்கூடாது என்றும், சில இளைஞர்கள் நாம் சிலர் திருந்தி வாக்களிப்பதால் என்ன நடக்கப்போகிறது என்றும் வெளிப்படையாக தங்களது கருத்துக்களை கூறுகின்றனர். சில பெண்கள், தங்களுக்கு பெண் தலைவர்கள் வேண்டும் என்று ஆக்ரோஷமாக கூறுகின்றனர். ஏன் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று சில இளைஞர்கள் கருத்துக்களை முன் வைக்கின்றனர். 

மூன்றாவதாக, தேர்தல் கீதம் என்ற ஒரு பாடலையும்(2.42 நிமிடம்) உருவாக்கியுள்ளார்கள். இதுமட்டுமல்லாமல் தேர்தல் ஆணையத்திற்காக குறும்படம்(1.47 நிமிடம்) ஒன்றினையும் அந்த இளைஞர்கள் எடுத்து அளித்திருக்கிறார்கள். அதில், தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு சிலர் வீடு வீடாக சென்று பணம் வழங்கி வருகிறார்கள். அதில், ஒரு வீட்டின் கதனை தட்டுகிறார்கள். அவரிடம் உங்கள் வீட்டில் எத்தனை வாக்குகள் உள்ளது என்று கேட்கிறார்கள். அவர் 5 வாக்குகள் என்று கூறுகிறார். அதற்கு ஏற்றார் போல், ஒரு பணக்கட்டை எடுத்து சில தாள்களை கொடுக்கிறார்கள். அவரும் முதலில் வாங்கிக் கொள்கிறார், அவர்கள் திரும்பி செல்ல முயலும் போது நிற்கச் சொல்கிறார். அவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு நாங்கள் தூய்மையான தேர்தல்’ பிரச்சாரத்தில் உள்ளோம் என்கிறார். அத்துடன் குறும்படம் முடிகிறது. 

இந்த மூன்று வீடியோக்களை யூடியூப்பில் 3 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நாகாலாந்து மக்கள் மத்தியிலும் இந்த வீடியோவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. நகரின் முக்கிய இடங்களில் வீடியோ ஸ்கீரின் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இந்த வீடியோக்களை தாண்டி நாகாலாந்து தேர்தல் பிரச்சாரத்திலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெறுவது போல் வேட்பாளர்கள் ஒரே மேடையில் தோன்றி தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com