ஞாநி; காலம் தப்பி வாழ்ந்த மனிதர் : எழுத்தாளர் ரவிக்குமார்

ஞாநி; காலம் தப்பி வாழ்ந்த மனிதர் : எழுத்தாளர் ரவிக்குமார்
ஞாநி; காலம் தப்பி வாழ்ந்த மனிதர் : எழுத்தாளர் ரவிக்குமார்

ஞாநி இறந்துவிட்டார் என்ற செய்தி அவரது உடல்நிலையை அறிந்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாகவே இருந்திருக்கும். சிறுநீரகம் பழுதடைந்து வாரம் இரண்டுமுறை டயாலிசிஸ் செய்துகொள்ளும் ஒருவரது ஆயுள் அத்தனை கெட்டியானதல்ல எனத் தெரிந்திருந்தாலும் அவரது மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் ஞாநியை போல தமிழ்நாட்டில் இன்னொருவர் இல்லை. ஞாநியைவிட நாடகத்தை நன்றாக அறிந்தவர்கள் தமிழில் உண்டு, ஆனால் அவரளவுக்கு நாடகத்தை மக்களுக்காகப் பயன்படுத்தியவர் வேறெவரும் இல்லை; ஞாநியைவிட இதழியல் தெரிந்தவர்கள் பலர் தமிழில் இருக்கின்றனர், ஆனால் அவரைப்போல சமரசமில்லாத இதழியலாளராக வாழ்கிறவர்கள் அரிது; ஞாநியைவிட எழுத்துத் திறமை கொண்டவர்கள் தமிழில் உள்ளனர், ஆனால் அவரைப்போல அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் எழுத்தாளர்கள் குறைவு. 

பத்திரிகையாளர் என்ற முன்னொட்டோடு அவர் அறியப்பட்டாலும் அதை வெறும் தொழிலாக மேற்கொண்டவரல்ல அவர். ஊடகத்துறையில் பல முயற்சிகளுக்கு அவர் முன்னோடி. இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தியவர். தமிழில் இப்போதும் பிரபலமாகாத ’டாப்லாய்ட்’வகைப் பத்திரிகையாக தமிழில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஜூனியர் போஸ்ட்’ இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக மாற்றிக் காட்டியவர். தொலைக்காட்சிக்கான முதல் இதழ், சென்னை நகரத்துக்கான முதல் இதழ் ஆகியவை இவரது முயற்சிகள். அணில் மாமா வாண்டுமாமா என்று பழமையில் ஊறிக்கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார். 2016ல் தமிழில் மாணவர்களுக்கான முதல் இதழாகத் தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வந்தார். 

பத்திரிகைத் துறையில் இவ்வளவு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவரென வேறு எவரையும் நாம் சொல்லமுடியாது. 
1954  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி செங்கற்பட்டில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். பூர்வீகமாக சொத்து ஏதும் இல்லாத நிலையில் கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய இவரது தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் தனது தந்தையின் அடியொற்றி ஞாநி அதில் ஈடுபட்டார். 

மாணவராக இருந்தபோது சோஷலிச அரசியல் ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபட்ட ஞாநி, . நெருக்கடி நிலை காலத்தில் அதைக் கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ்  ஆங்கில இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக  எழுபதுக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டார். மேதா பட்கர், ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸ், நிகில் சக்ரவர்த்தி, வி.ஆர். கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தவர். 

2016 தேர்தலுக்கு முன்னதாக மக்கள்நலக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நேரம். சென்னை தியாகராய நகர் தொகுதியை விசிகவுக்கு எடுத்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று எமது கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விரும்பினார். நானும் அவருமாகப் பலரது பெயர்களைப் பரிசீலித்தோம்.  ஞாநி ஒப்புக்கொண்டால் அவரை நிறுத்தலாம் என நான் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு அவரது ஒப்புதலைக் கேட்கச் சொன்னார். 

எமது விருப்பத்தை ஞாநியிடம் தெரிவித்தேன். "போட்டியிடுவதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் எனது உடல்நிலை தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உகந்ததாக இல்லை" என அன்புடன் மறுத்துவிட்டார். "கல்கி இதழில் நான் எழுதியிருக்கும் கட்டுரையைப் படியுங்கள். இந்த அணிக்கு வாக்களிக்க வேண்டியதன் நியாயத்தை அதில் விளக்கியிருக்கிறேன்" என்றார். ஞாநி ஒப்புக்கொள்ளாததால் தி நகரில் போட்டியிடும் எண்ணத்தைக்  கைவிட்டோம். 

அரசியல் நாடக இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படும் பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978ல் ‘பரீக்‌ஷா’ என்ற நாடகக்குழுவை உருவாக்கி அதன்மூலம் ஏராளமன நாடகங்களை நிகழ்த்தினார். 

தமிழ்நாட்டில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடியாக அவரையே சொல்லமுடியும். அச்சு ஊடகத்தோடு நின்று விடாமல் காட்சி ஊடகத்திலும் அவர் தனது முத்திரையைப் பதித்தார். பெரியார் வாழ்க்கை பற்றிய திரைப் படத்தை ‘அய்யா’ என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கினார்.

ஈழத்து எழுத்தாளர் கே.டானியலின் கானல் என்ற நாவல் வே.மு.பொதியவெற்பனின் தோழமை பதிப்பகத்தின் மூலம் 1986ல் வெளியானது. அப்போது டானியலும் தமிழகம் வந்திருந்தார். அந்த நாவல் குறித்த கருத்தரங்கு ஒன்றைப் பாண்டிச்சேரியில் புதுவை ஞானம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேசுவதற்காகப் பாண்டிச்சேரிக்கு வந்திருந்தபோதுதான் ஞாநியை முதலில் சந்தித்தேன். அந்த ஆண்டுதான் ரஷ்யாவில் செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது.

அதையொட்டி அணு ஆபத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஞாநியும், பத்திரிகையாளர் நாகார்ஜூனனும் ஈடுபட்டனர். கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அந்தப் பிரச்சாரம் அதற்கு கூடங்குளம் அணு உலைத் திட்டத்துக்கு எதிரான பிரச்சாரமாக விரிவடைந்தது. ஆண்டன் கோம்ஸ் முதலானவர்களோடு நானும் பாண்டிச்சேரியில் இருந்த மதியழகன், அபிமன்னன்,முத்துக்கண்னு,இலக்கியன் உள்ளிட்ட சில தோழர்களும் அதில் இணைந்தோம். அணு ஆபத்து தடுப்பு இயக்கம் என்ற பெயரில் பிரச்சாரங்களை முன்னெடுத்தோம். 1980 களில் அவரோடு தொடங்கிய எனது நட்பு கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பழுதின்றி நீடித்தது. 

ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தக் காலத்தில் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருந்தப் போராளிகள் பலருக்குத் தனது வீட்டில் அடைக்கலம் அளித்தவர் ஞாநி. தனது பதின்பருவம் முதற்கொண்டு  மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்பு முதலான கொள்கைகளை முன்வைத்து செயல்படும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வந்தவர் ஞாநி. 1990 களில் வகுப்புவாதத்தின் முதல் அலை எழுந்தபோதே அதன் ஆபத்தைச் சரியாக அடையாளம்கண்டு வகுப்புவாத எதிர்ப்பில் சமரசமில்லாமல் பேசியும் எழுதியும் வந்தவர். 

பள்ளிகளில் நிலவும் சாதிய பாகுபாடுகளை நோக்கி கவனம் ஈர்ப்பதற்கென நான் நடத்திவரும் மணற்கேணி ஆய்விதழின் சார்பில் ‘நிகரி’ என்ற விருதை உருவாக்கி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ஆசிரியர்களுக்கு  அளித்து வருகிறேன். அந்த முயற்சியை ஞாநி வெகுவாகப் பாராட்டினார். பள்ளிகளில் பாகுபாடு என்ற தலைப்பில் நான் வெளியிட்ட நூலுக்கு அவர்தான் முன்னுரை அளித்தார். சமுதாயத்தின் கோளாறுகளைக் களையும் ஆற்றலும் பார்வையும் பெற்ற எதிர்காலப் பிரஜைகளை உருவாக்கி அனுப்பவேண்டிய மாற்றத்துக்கான மலர்ச்சிப் பட்டறையாக இருக்க வேண்டிய பள்ளி, அதே கோளாறுகளைத் தொடர்ந்து வளர்த்துக் கெட்டிப்படுத்தும், உடந்தையாக இருக்கும், ஏற்று செயல்படும் எதிர்காலப் பிரஜைகளை உருவாக்கும்  சூழ்ச்சிக் கூடமாக மாறிவருவதைப் பற்றிய தனது கவலையை அதில் வெளிப்படுத்தியிருந்தார்.

ஊடகத்துறையில் ஆங்கிலம் தமிழ் என இருமொழி ஆற்றல் பெற்றவராக விளங்கினாலும் வட இந்திய காட்சி ஊடகங்கள் சோவுக்கு அளித்த அங்கீகாரத்தை ஞாநிக்கு அளிக்கவில்லை. அதற்குக் காரணம் அவரது அழுத்தமான வகுப்புவாத எதிர்ப்பு நிலைபாடுதான். அண்மையில் அவர் ஆரம்பித்த ஓபக்கங்கள் என்னும் யூடியூப் சேனலில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அவர் தெரிவித்திருந்த கருத்துகளும், இறுதியாக அவர் இட்ட முகநூல் பதிவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பற்றி முன்வைத்திருந்த விமர்சனமும் அவர் எந்த அளவுக்கு தனது அரசியல் நிலைபாட்டில் தெளிவும் உறுதியும் கொண்டிருந்தார் என்பதற்குச் சான்றுகள். 

ஞாநி மட்டும் தனது நிலைபாட்டில் சமரசம் செய்திருந்தால் ஏதேனும் ஒரு ஊடக நிறுவனத்துக்குத் திறமையான தலைவர் கிடைத்திருக்கலாம், ஆனால் நாம் இப்போது நினைவுகூரும் பொதுநிலை அறிவுஜீவியாக ஞாநி இருந்திருக்கமாட்டார். இந்திய ஜனநாயகத்தின் மீது தாராளமயத்தோடு கைகோர்த்துக்கொண்டு வகுப்புவாதம் மிகப்பெரும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பொதுநிலை அறிவுஜீவிகளின் பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 

ஃ ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர் பியர் பூர்தியூவின் வார்த்தைகளைப் பயன்படுத்திச் சொன்னால் ‘பொதுநிலை அறிவுஜீவி  என்பவர் ஒரு தீர்க்கதரிசியோ குருவோ அல்ல. அவர் புதிதாக ஒரு பாத்திரத்தைக் கண்டுபிடிக்கவேண்டும், அது மிகவும் கடினமானது. புதிய தாராளவாதக் கொள்கைகளை எதிர்ப்பதென்பதைத் தமது நோக்கமாகக் கொண்டிருக்கிற அமைப்புகள் - அவை மிகவும் பலவீனமான தொழிற்சங்கங்கள் போன்ற அமைப்புகளாக இருந்தாலும்கூட - எவையென்று பார்த்து அவற்றுக்கு உதவிசெய்யவேண்டும். போராடுவதற்கான கருவிகளை அவற்றுக்கு வழங்கவேண்டும்.குறிப்பாக, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களால் அமர்த்தப்பட்டிருக்கும் 'நிபுணர்கள்' எனப்படுவோரின் குறியீட்டு ரீதியான தாக்குதலுக்கு எதிரான உபகரணங்களை அவர்களுக்கு வழங்கவேண்டும். அவற்றின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தவேண்டும்’. ஞாநி அதைத்தான் செய்தார். ஞாநி - தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் காலம் தப்பி வாழ்ந்தவர், அகாலமாக விடைபெற்றுவிட்டார். அவரைப் பாராட்டுவது எளிய செயல், அவரைப்போல வாழ்வதுதான் சவால். அந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதே அவருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி.   

(முனைவர் ரவிக்குமார், எழுத்தாளர், மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்.தொடர்புக்கு writerravikumar@gmail.com ) 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com