நாடாளுமன்ற கட்டிடம் முதல் அணை வரை - ஆப்கன் மக்களுக்கான இந்திய உதவிகளும் சில கேள்விகளும்

நாடாளுமன்ற கட்டிடம் முதல் அணை வரை - ஆப்கன் மக்களுக்கான இந்திய உதவிகளும் சில கேள்விகளும்
நாடாளுமன்ற கட்டிடம் முதல் அணை வரை - ஆப்கன் மக்களுக்கான இந்திய உதவிகளும் சில கேள்விகளும்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நிர்மாணிக்க கோடிக்கணக்கில் உதவியது முதல் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு இந்திய அரசு இதுவரை கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் செலவில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உறுதுணைபுரிந்துள்ளது. இந்த உதவிகளைப் பட்டியலிட்டு நினைவுகூரும் அதேவேளையில், இந்த நலத்திட்ட உதவிகளை தலிபான்கள் எப்படி அணுகப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்காக, இந்திய அரசு கிட்டத்தட்ட 400 நலத்திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது. கடந்த 20 வருடங்களில் இந்திய அரசு கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை ஆப்கானிஸ்தான் மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தி உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.

நீர்வளத்துக்காக அணை கட்டுவது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பது போன்ற பல்வேறு திட்டங்கள் இந்திய நிதி உதவியுடன் ஆப்கானிஸ்தான் நாட்டிலே செயல்படுத்தப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கு இந்திய அரசு முக்கியப் பங்களிப்புகளை ஆப்கானிஸ்தான் நாட்டிலே இந்தியா வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் செய்து கொடுத்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சியுடன் ஆப்கானிஸ்தான் நாட்டிலே கடந்த 20 வருடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திட்டங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது சல்மா அணைத்திட்டம். தண்ணீர் பற்றாக்குறையை குறைத்துள்ளது தவிர, இந்த அணையின் மூலம் உருவாக்கப்படும் 42 மெகாவாட் மின்சாரம் ஹீரட் நகருக்கு அருகே உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மின்சார வசதியை உண்டாக்கி கொடுத்துள்ளது. தலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தப் பகுதியில் செல்வாக்குடன் இருந்து வந்த தலைவரான இஸ்மாயில் கான் என்பவரை கைது செய்ததுடன், சமீபத்தில் 2000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சல்மா அணையையும் தாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த சேதத்துடன் தப்பிப்பிழைத்த இந்த அணை தற்போது தலிபான் கட்டுப்பாட்டில் உள்ளது. 2014-ஆம் வருடத்திலேயே இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கியது.

ஆப்கன் நாட்டிலே ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடம் நிர்மாணிக்க உதவியது. கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த வளாகம் 2015-ஆம் வருடத்திலே திறந்துவக்கப்பட்டது. இந்த வளாகத்தின் ஒரு பகுதிக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷரஞ்-டெலரம் நெடுஞ்சாலை இந்திய உதவியுடன் ஆப்கன் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள இன்னொரு முக்கியத் திட்டமாகும். கிட்டத்தட்ட 218 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலை, ஈரான் எல்லையில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளை இணைக்கிறது. இதைத் தவிர, இந்திய உதவியுடன் பல்வேறு மேம்பாலங்களும் ஆப்கன் நாட்டிலே கட்டப்பட்டுள்ளன.

கல்வித் துறை ஆப்கானிஸ்தான் நாட்டிலே வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும், அந்த நாட்டு மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு கல்விக் கூடங்களை அமைக்க இந்திய அரசு உதவி செய்துள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் பாடத்திட்டங்களை தொகுத்து அளிப்பது போன்ற பல்வேறு விதமான உதவிகளை இந்திய அரசு ஆப்கன் கல்வித் துறைக்காக செய்துள்ளது. இதைத் தவிர இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டிலே சேதமடைந்த நிலையில் இருந்த பல்வேறு மருத்துவமனைகளை இந்திய அரசு புனரமைத்து அந்த நாட்டு மக்களுக்கு சுகாதார வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் சுகாதார மையங்கள் அமைக்கவும் இந்திய அரசு உதவி செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கவும், அங்குள்ள மருத்துவமனைகளை சிறப்பான முறையில் செயல்படுத்தவும் இந்தியாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கே பணியாற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசு 10 ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு நன்கொடையாக அளித்தது.

இப்படி பல்வேறு திட்டங்கள் இந்திய உதவியுடன் ஆப்கானிஸ்தான் மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கும் தலிபான் அமைப்பு இந்த திட்டங்கள் தொடர அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மின்சார வழித்தடங்களை அமைத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் இந்திய அரசு நல்ல திட்டங்கள் வாயிலாக ஆப்கானிஸ்தான் நாட்டிலே செயல்படுத்தி உள்ளது. உட்கட்டமைப்பு துறையிலே வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையிலே ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு 400 பேருந்துகள் மற்றும் 200 சிறியரக பேருந்துகளையும் இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது. நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் பயன்படுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களையும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது.

பாதுகாப்பு துறையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை செய்ததடன் இந்திய அரசு 7 ஹெலிகாப்டர்களை நன்கொடையாக அளித்தது குறிப்பிடத்தக்கது. நான்கு எம்.ஐ.-24 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் மூன்று சீட்டா ரக ஹெலிகாப்டர்கள் ஆகியவை இந்திய அரசு உதவி மூலமாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கிடைத்த உதவிகள் ஆகும். இந்த ஹெலிகாப்டர்களை தலிபான் குழுக்கள் கைப்பற்றியுளளதாக தகவல்கள் கிட்டி உள்ளன.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com