வானூர்தி விபத்தில் உயிரிழந்த பிரபலங்கள் : சஞ்சய் காந்தி முதல் பிபின் ராவத் வரை!
தமிழ்நாட்டின் குன்னூரில் இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த அவரது மனைவியும் மற்றும் 11 ராணுவ அதிகாரிகளும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் வானூர்தி விபத்தில் உயிரிழந்த பிரபலங்களின் துயரம் மிக்க முடிவு குறித்து பார்க்கலாம்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கடந்த 1945-இல் தைவானில் வானூர்தி விபத்தில் உயிரிழந்தார். இருப்பினும் அவரது இறப்பு குறித்த சர்ச்சை நிலவி வருகிறது.
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி!
கடந்த 2009-இல் ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் அவர் மரணம் அடைந்தார். பெல் 430 ரக ஹெலிகாப்டரில் சித்தூர் மாவட்டத்திற்கு பயணித்த போது அவர் விபத்தில் சிக்கினார். காட்டுப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. அவரது உடல் சுமார் 27 மணி நேர தேடுதலுக்கு பிறகே அடையாளம் காணப்பட்டது. இவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது ஆந்திர மாநில முதல்வராக உள்ளார்.
சஞ்சய் காந்தி!
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, பிரதமராக பதவியில் இருந்த போது அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார். 1980-இல் கிளைடரில் பயணம் செய்த அவர் விபத்தில் சிக்கினார். டெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையமருகே இந்த விபத்து நடைபெற்றது. கிளைடர் டேக்-ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
மாதவ்ராவ் சிந்தியா!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாதவ்ராவ் சிந்தியா கடந்த 2001-இல் தனி விமானத்தில் பயணித்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மாதவ்ராவ் சிந்தியா உட்பட அந்த விமானத்தில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். அதில் 4 பேர் பத்திரிகையாளர்கள், 2 பேர் விமானிகள், ஒருவர் மாதவ்ராவ் சிந்தியாவின் உதவியாளர் என அனைவரும் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த விபத்து நடைபெற்றது. அவர் பேரணி கூட்டம் ஒன்றில் பங்கேற்க கான்பூர் சென்ற போது விபத்து ஏற்பட்டது.
ஜி.எம்.சி. பாலயோகி!
முன்னாள் மக்களவை தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்தவருமான ஜி.எம்.சி. பாலயோகி கடந்த 2002-இல் ஆந்திர பிரதேசத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பெல் 206 ரக ஹெலிகாப்டரில் அவர் பயணம் செய்திருந்தார். இந்த விபத்து ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் நடைபெற்றது.
ஓம் பிரகாஷ் ஜிண்டால்!
கடந்த 2005-இல் ஹரியானா மாநில மின்சார துறை அமைச்சராக இருந்த ஓம் பிரகாஷ் ஜிண்டால் மற்றும் அப்போதைய ஹரியானா மாநில விவசாய துறை அமைச்சராக இருந்த சுரேந்திர சிங் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
சுரேந்திரா நாத்!
கடந்த 1994-இல் அப்போதைய பஞ்சாப் மாநில ஆளுநராக பதவியில் இருந்த சுரேந்திரா நாத், தனது குடும்பத்துடன் அரசாங்கத்தின் சூப்பர் கிங் விமானத்தில் பயணித்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது அவர் இமாச்சல் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் இருந்தார். இந்த விபத்தில் அவரது குடும்பத்தினர் 9 பேர் உயிரிழந்தனர்.
டோர்சி கண்டு!
அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் டோர்சி கண்டு பயணித்த Eurocopter B8 ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர் சென்ற விமானம் விபத்தில் சிக்கிய இடம் அடையாளம் காணப்பட்டது. பதவியில் இருந்த போதே அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்க காரணம் மோசமான வானிலை என சொல்லப்பட்டது. சீன நாட்டின் எல்லை அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.