மிஸ் யூ ஏபி டிவில்லியர்ஸ்! மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனின் சாதனைகளும், ஆட்ட அணுகுமுறையும்!

மிஸ் யூ ஏபி டிவில்லியர்ஸ்! மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனின் சாதனைகளும், ஆட்ட அணுகுமுறையும்!
மிஸ் யூ ஏபி டிவில்லியர்ஸ்! மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனின் சாதனைகளும், ஆட்ட அணுகுமுறையும்!

இனி மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸை கிரிக்கெட் களத்தில் ஒரு வீரராக விளையாடுவதை பார்க்க முடியாது. அனைத்து பார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் என அவரே சொல்லி உள்ளது தான் அதற்கு காரணம். 

டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடியது என்னவோ தென்னாப்பிரிக்க அணிக்காக தான். ஆனால், அவர் வென்றது பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த ரசிகர்களின் மனங்களை. 2018 உடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் ‘குட்-பை’ சொல்லி இருந்தாலும் உலகம் முழுவதும் நடைபெறும் கிரிக்கெட் லீக்குகளில் விளையாடி வந்தார். இப்போது அதற்கும் தனது ஓய்வு அறிவிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

தற்போது உலகமே ‘ஏபிடி’-க்கு பிரியமுடன் பிரியா விடை கொடுத்து வருகிறது. அதற்கு சான்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் போஸ்ட்கள் தான். ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த டிவில்லியர்ஸின் இன்னிங்ஸை போற்றி பாடி வருகின்றனர். 

அதில் சில சிறப்பான இன்னிங்ஸை இங்கு மீள் பதிவு செய்வோம். அதற்கு முன்னதாக அவரது சாதனைகள் குறித்து பார்க்கலாம். 

ஏபிடி தொடக்கம்!

வழக்கமாக பால்ய பருவங்களில் எல்லா குழந்தைகளும் விளையாட்டு பிள்ளையாக தான் இருப்பார்கள். அங்கும் இங்கும் ஓடி அதகளம் செய்வார்கள். ஆனால் ஏபிடி-யின் பால்ய காலம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துள்ளது. 

இன்று அவர் உலகம் அறியும் கிரிக்கெட் வீரர். இருந்தாலும் கிரிக்கெட் உடன் ரக்பி, கால்ப், டென்னிஸ் மாதிரியான விளையாட்டுகளில் தேசிய அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார். இறுதியில் தனது கெரியராக கிரிக்கெட் விளையாட்டை ‘டிக்’ செய்துள்ளார். 

தென் ஆப்பிரிக்க அணிக்காக அண்டர்-19 கிரிக்கெட் அணியில் அசத்தலாக விளையாடி சீனியர் அணியில் இடம் பிடித்தவர். அவரது முதல் தர கிரிக்கெட் ரெக்கார்டும் அசத்தலாக உள்ளது. 

2004-இல் இருபது வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். மாடர்ன் டே கிரிக்கெட்டின் சூப்பர்மேனாக இருந்தவர் ஏபிடி. களத்தில் ஒற்றை ஆளாக நின்று ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் வல்லமை படைத்தவர். அதனால் தான் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஓய்வு பெற்ற போதும் கூட தேசிய அணிக்காக அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். 

இருந்தாலும் ஏபிடி அறிமுகமானது என்னவோ கிரிக்கெட்டின் அசல் வடிவம் என போற்றப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான். தனது முதல் இன்னிங்ஸில் 28 ரன்களை எடுத்தார். பாக்சிங் டே டெஸ்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அப்போது தொடங்கிய ஏபிடி-யின் ரன் வேட்டை அப்படியே காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.  

டெஸ்ட், ஒருநாள், டி20 என தன் நாட்டுக்காக 20,014 ரன்களை எடுத்துள்ளார் அவர். 

அதோடு உலக அளவில் நடைபெறும் டி20 லீக் தொடர்களிலும் டிவில்லியர்ஸ் விளையாடி உள்ளார். மொத்தம் 340 டி20 போட்டிகளில் 9424 ரன்களை எடுத்துள்ளார். இதில் 59 அரை சதங்கள் மற்றும் 4 சதங்கள் அடங்கும். 

ஆர்சிபியும் ஏபிடியும்!

டிவில்லியர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிக்காக விளையாடி உள்ளார். 2011 சீசன் முதல் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார். மொத்தம் 4,491 ரன்களை பெங்களூர் அணிக்காக அடித்துக் கொடுத்துள்ளார். அதே போல அதிக ரன்கள் (5162), அதிக சிக்சர்கள் (251), ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த வீரர் (133*), அதிக ஸ்ட்ரைக் ரேட் (151.68), அதிக அரை சதம் (40), அதிக சதம் (3), அதிக பவுண்டரிகள் (413), அதிவேக சதம் (43 பந்துகள்) என பல ஐபிஎல் சாதனைகளை படைத்துள்ளார் ஏபிடி. இப்படி ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆல்-டைம் புள்ளி விவரத்தின் அனைத்து பாக்ஸிலும் டாப் 10 வரிசையில் உள்ள பேட்ஸ்மேன். 

ஏபிடி சாதனை துளிகள்!

>அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரரான ஏபிடி, 2012 ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 220 பந்துகளை சந்தித்து 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்த தொடரின் அடுத்த போட்டியில் 169 ரன்களை சேர்த்து அணியை வெற்றி பெற செய்தார். அந்த போட்டியில் கிடைத்த வெற்றி தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடரையும் வெல்ல உதவியது.  

>2015 50-ஓவர் உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 30-வது ஓவரில் களம் இறங்கிய ஏபிடி, 66 பந்துகளில் 162* ரன்களை குவித்தார். அந்த போட்டியில் தென்னாப்ரிக்க அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டனாக முன்னின்று விளையாடி அசத்தினார் டிவில்லியர்ஸ். இருந்தும் 2015 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. 

>தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் பதிவு செய்து உள்ளவர் டிவில்லியர்ஸ். 

>ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்ததும் டிவில்லியர்ஸ் தான். மொத்தம் 11 கேட்ச். 

>தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிக்கான இன்னிங்ஸில் சதம் பதிவு செய்துள்ளார். 

>ஒருநாள் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 16 சிக்ஸர்கள் விளாசி உள்ளார். 

>205 இன்னிங்ஸில் 9000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளார். 

>டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து போட்டிகளையும் சேர்த்து 14 முறை 90 ரன்களில் (90’s) அவுட்டாகி உள்ளார். 

இப்படி பல சாதனைகளை தன்னகத்தே தாங்கி நிற்கிறார் ஏபிடி. அவர் கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் பொன்னான தருணமாகும். அவர் கோப்பைகளை வென்றது இல்லை என்றாலும் ரசிகர்களின் மனங்களை வென்ற வீரர். 

ஏபிடியின் வேற லெவல் அணுகுமுறை!

களத்தில் ஏபிடி வெளிப்படுத்தும் அணுகுமுறை பார்ப்பதற்கே படு ஜோராக இருக்கும். பீல்ட் செய்யும் போது துடிப்புடன் அங்கும் இங்கும் ஓடுவது தொடங்கி சக வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்துக் கொண்டே இருப்பது வரை அதை பட்டியலிட்டு சொல்லலாம். 

கடினமான கேட்ச்களையும் சுலபமானது போல முகத்தில் எந்தவித டென்ஷனும் காட்டாமல் லாவகமாக பிடித்து அசத்துவார். எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் அவர் வெற்றி பெற்றாலும், தோல்வி பெற்றாலும் அதிகம் ரியாக்ட் செய்ய மாட்டார். விக்கெட்டுகள் விழுந்தால் கூட அணியினருடன் சியர் செய்துவிட்டு நகர்வார். அவர் தனது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் வெளிப்படுத்தியது 2015 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தின் தோல்வியின் போது மட்டும் தான். அன்று களத்திலேயே கண்ணீர் சிந்தி இருந்தார். 

பேட்டிங்கிலும் Innovative கிரிக்கெட் ஷாட்களை விளையாடி அசத்துவார். அதனால் தான் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அவரை ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். அவருக்கு எதிராக எந்தவொரு கேப்டனாலும் பீல்ட் செட் செய்ய முடியாது. இனி அவர்களுக்கு அந்த சிக்கல் இருக்காது. ஏனெனில் அவர் ஓய்வு பெற்றுவிட்டார். 

இப்படி சகலகலா வல்லவரான ஏபி டிவில்லியர்ஸை கிரிக்கெட் உலகமும், அதன் ரசிகர்களும் நிச்சயம் மிஸ் செய்வார்கள். 

மிஸ் யூ ஏபிடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com