மீன் குழம்பு.. முட்டைப்பணியாரம்.. - கலைஞரின் நினைவுகளை பகிர்ந்த சமையல் பணியாளர் பிரகாஷ் !

மீன் குழம்பு.. முட்டைப்பணியாரம்.. - கலைஞரின் நினைவுகளை பகிர்ந்த சமையல் பணியாளர் பிரகாஷ் !
மீன் குழம்பு.. முட்டைப்பணியாரம்.. - கலைஞரின் நினைவுகளை பகிர்ந்த சமையல் பணியாளர் பிரகாஷ் !

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலைஞருக்கு சமையல் பணியை செய்துவந்த  முத்துச்செல்வம் பிரகாசம் நம்முடன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

 “எங்க அம்மா சித்ரா, 22 வருஷமா செல்வி அக்கா வீட்டுல சமையல்வேலை பார்த்துக்கிட்டிருக்காங்க. அவங்க மூலமா தலைவர் வீட்டுல சமையல் வேலைக்கு சேர்ந்துட்டேன். தலைவருக்கு நான் மட்டும்தான் சமைச்சிக்கொடுத்தேன். நான் லீவுல போயிட்டா செல்வி அக்காவே வந்து பார்த்துக்குவாங்க. என் குடும்பமே தி.மு.க குடும்பம்தான். 17 வருடத்துக்கு முன்னாடி மதுரைக்கு தலைவர் ஒரு மீட்டிங் வந்திருந்தபோது, அரை கிலோமீட்டர் தூரத்தில் பார்த்திருக்கிறேன். கிட்டத்துலப்போயி போயி பார்க்கணும்னு ஆசைப்பட்டும் முடியல. ஆனா, வாழ்க்கை முழுசும் பக்கத்துலேயே இருந்து தலைவருக்கு என்னை சமைத்துப்போட வைத்தது. இதைவிட எனக்கு என்ன பெருமை இருக்கு? நான் எட்டாவதுவரைதான் படிச்சிருக்கேன். குடும்ப வறுமையால, ஹோட்டல் வேலைக்குப்போய்ட்டேன். மதுரை ஆரியபவன், கும்பகோணம் ஹோட்டல் என பல இடங்களில் சமையல் வேலை பார்த்தேன். ரொம்ப நல்லா சமைக்கத் தெரிந்தாலும் தலைவருக்கு சமைக்கணும்னதும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. தமிழகமே போற்றும் தலைவருக்கு சமைக்கப்போகிறோம் என்றதும் சந்தோஷப்பட்டதோடு நன்கு சமைத்து தலைவரை அசத்தணும்னு நினைச்சேன்.

‘அப்பாவுக்கு மீன் குழம்புதான் ரொம்ப பிடிக்கும். அவருக்கு புடிச்சமாதிரி மீன் குழம்பு வெச்சுக்கொடுத்துட்டா அவருக்கு உன்னையும் புடிச்சுடும் உன் சமையலையும் புடிச்சுடும்’னு செல்வி அக்கா சொன்னாங்க. வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே வஞ்சிரம் மீன் வாங்கிட்டு வந்து குழம்பு வெச்சிக்கொடுத்தேன். தலைவர் சாப்பிட்டு பாராட்டுவாரா? முகம் சுளிப்பாரான்னு ஒரே படபடப்பு. 

     மதியம் மீன் குழம்பு வெச்சுக்கொடுத்தா அதுக்குப்புறம் அந்தக்குழம்பை தலைவர் சாப்பிடமாட்டார். ஆனா, நான் முதன் முதலில் செஞ்சுகொடுத்த வஞ்சிரம் மீன் குழம்பை, சாயந்திரம் தோசைக்கு ஊற்றி சாப்பிட்டதுமில்லாம இரவு உணவுக்கும் சாப்பிட்டது எல்லோருக்குமே ஆச்சர்யம். செல்வியக்கா, ‘அப்பாவோட பாராட்டை வாங்கிட்ட. சூப்பர்’ன்னு சொன்னதும் ஃப்ர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணினமாதிரி சந்தோஷம்.

என்னோட பேரு முத்துச்செல்வம், ஆனா, தயாளு அம்மா என்னைப்பார்த்து, ‘ஏம்பா என்னோட மாமனார் பேரு முத்து, மருமகன் பேரு செல்வம். அதனால, உன்னை முத்துன்னும் கூப்பிடமுடியாது செல்வம்னும் பேர் சொல்லி கூப்பிடமுடியாது. அதனால, நீயே ஒரு பேரு சொல்லுப்பா… உன்னை அப்படியே கூப்பிடுறோம்’னாங்க. என்னப்பேரு சொல்றது?ன்னு யோசிச்சேன். எங்கப்பா பேரு பிரகாசம்… அதைத்தான் என் பையனுக்கு பிரகாஷ்னு வெச்சிருக்கேன். அதனால, என்னையும் பிரகாஷ்ன்னே கூப்பிடுங்க. அப்போதான், எனக்கும் என்னைக் கூப்பிடுறமாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்னேன். அதிலிருந்து, பிரகாஷ்ன்னுதான் எல்லோரும் என்னை செல்லமா கூப்பிடுவாங்க.

அதுக்கப்புறம், காரைக்குடி ஸ்டைலில் முட்டைப்பணியாரம் செஞ்சு ஈவ்னிங் ஸ்னாக்ஸா கொடுத்தேன். உருண்டையா இருக்கிறதை கையில எடுத்துப் பார்த்த தலைவர், ‘என்னய்யா ஒரு மாதிரி இருக்கு? நம்பி சாப்பிடலாம்மா?’ன்னு சிரிச்சுக்கிட்டே கேட்டாரு. ‘காரைக்குடி ஸ்டைல் முட்டைப்பணியாரம் தலைவரே’ன்னு சொன்னதுக்கு, ‘சரி… சாப்ட்டு பார்க்குறேன்’ன்னு பெருமூச்சுவிட்டபடி சாப்பிட ஆரம்பித்தவரின் கண்களில் ஒருவித மகிழ்ச்சியை பார்த்தேன். அதிலிருந்து, ஈவ்னிங் ஆகிடுச்சுன்னா, அந்த முட்டைப்பணியாரம் எங்கய்யான்னு கேட்க ஆரம்பிச்சுடுவாரு. வாரத்துல நான்கு நாட்கள் முட்டைப்பணியாரம்தான் விரும்பி சாப்பிடுவாருன்னா பார்த்துக்கோங்களேன். இதைவிட, அவருக்கு ரொம்ப புடிச்சது நான் செஞ்சுக்கொடுக்கிற முந்திரியும் தேங்காயும் கலந்த கொழுக்கட்டைதான். இரவு நேரத்துல முட்டை மசாலா செஞ்சு கொடுப்பேன். அதை, தலைவர் முட்டை மசாலான்னு சொல்லமாட்டாரு.  ‘ஏய்யா… அந்த சாந்து எடுக்கிட்டு வாய்யா’ன்னுதான் சொல்லுவாரு”என்றவரிடம் கலைஞரின் தினசரி உணவுப்பழக்கவழக்கங்கள் என்ன? என்று நாம் கேட்டபோது,

 “தினமும் 5:30 மணிக்கு எழுந்துவிடுவார்ங்கிறது அனைவருக்கும் தெரிந்ததே. எழுந்ததும் ஒரு காஃபி குடிச்சுடுவார். பிறகு, அனைத்து செய்தித்தாள்களையும் படிச்சுடுவார். 8:30 மணிக்கு மருத்துவர்கள் வந்து அவரது உடல்நிலையை செக்-அப் செய்வார்கள். குளிச்சுட்டு வந்ததும் டிஃபன் கண்டிப்பா இட்லிதான் இருக்கணும். அதுதான், அவருக்கு ரொம்ப புடிச்சது. எப்போதாவது பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிடுவார். சாப்பிட்டு முடித்ததும் அறிவாலயம் கிளம்பிப் போய்டுவாரு. 11:30 மணிக்கு ஆப்பிள் ஜூஸ் போட்டுக் கொடுத்தனுப்பிடுவேன். வீட்டிலேயே இருந்தா இங்கேயே ஜூஸ் போட்டு கொடுத்துடுவேன். அறிவாலயம் போன தலைவர் அப்படியே சி.ஐ.டி. காலனிக்கு போயிட்டு 12:45 க்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவார். 1:30 மணிக்கு சாப்பாடு. மதிய உணவுன்னா அவருக்கு தயிர்சாதம் இருந்தே ஆகணும். அப்போதான், அவருக்கு சாப்பிட்டமாதிரியே இருக்கும். 

      வகை வகையா சாப்பிடணும்னு நினைக்கமாட்டாரு. சாப்பிடுறதுலேயும் அவர் ரொம்ப எளிமைதான். அதுவும், இன்னைக்கு என்ன சமைக்கணும்னு எந்தக்கட்டுப்பாடும் கிடையாது. நான் என்ன சமைச்சுக்கொடுக்கிறேனோ அதை ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாரு. நானும் அவர் என்ன விரும்புறாரோ அதுக்கேற்றமாதிரி சமைச்சுக் கொடுப்பேன். ஒருநாளைக்கு மதியம் சாம்பாருன்னு மறுநாள் வத்தக்கொழம்பு, இன்னொரு நாள் மீன் குழம்புன்னுதான் சாப்பிடுவாரு. சைடிஷ்ன்னு ஸ்பெஷலா எதுவும் சாப்பிடுறதில்ல. நாம எல்லோரும் சாப்பிடுறமாதிரி கேரட், உருளைக்கிழங்கு பொரியல்தான் சாப்பிடுவாரு. சாப்பிட்டு முடித்ததும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்பார். சில நேரங்களில் தூங்கிவிடுவார்.  நான்கு மணிக்கெல்லாம் எழுந்திருக்கும் தலைவருக்கு முட்டைப்பணியாரம், கேசரி, கொழுக்கட்டைன்னு செஞ்சுகொடுப்பேன். அதுமட்டுமில்ல, முறுகலான தோசை அவரது ஃபேவரைட்.

தோசை முருவலா இல்லைன்னா ’என்னய்யா இது தோசை? பேப்பர் மாதிரி இருக்கேய்யா..இதையா சாப்பிடுறது?’ன்னு கேட்டு செல்லமா கோபப்படுவார். அவருக்கு பயந்துக்கிட்டு அவர் முகத்துல முழிக்காம உணவு வகைகளை வெச்சுட்டு எஸ்கேப் ஆகிடுவேன். தலைவர்கிட்ட திட்டு வாங்குறதுதான் ரொம்ப பிடிக்கும். ஆனா, பக்கத்துல இருக்கிறவங்கக்கிட்ட, என்னய்யா நான் திட்டினதுல வருத்தப்பட்டுக்கிட்டிருக்கானா? ஆளு கண்ணுலேயே சிக்கமாட்டேங்குறான்’என்று சிரித்துக்கொண்டே சொல்ல, ஹப்பாடா கோபம் குறைஞ்சுடுச்சுன்னு பழையபடி நானும் நார்மல் ஆகிடுவேன். 

     இரவு நேரங்களிலும் பெரும்பாலும் இரண்டு இட்லிதான் விரும்பி சாப்பிடுவார்.  மதிய உணவு 50 கிராம் அளவுக்குத்தான் சாப்பிடுவார். கொஞ்சம் சாப்பிட்டாலும் அதை ரசிச்சு ருசிச்சு நொறுங்க சாப்பிடுவார். மற்றவங்க மாதிரி அது வேணும் இது வேணும்னு அடம்பிடிச்சு சாப்பிடமாட்டார். உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்வதில் ரொம்ப அக்கறை காட்டுவதால் அளவோடு சாப்பிடுவார். அவர், எங்கு வெளியில போனாலும் பச்சத்தண்ணிகூட வெளியில குடிக்கமாட்டாரு. உடல் ஆரோக்கியத்துக்காக வீட்டிலிருந்து எடுத்துட்டுப்போற தண்ணீயைத்தான் குடிப்பாரு. அதுவும், தேர்தல் பிரச்சாரத்துக்குப் போறார்ன்னா அவரோட உடல் ஆரோக்கியம் நல்லா இருக்கணும்னு என்னையும் கூடவே அனுப்பிடுவாங்க. 

      ஒருநாள் திருவாரூர் தேர்தல் பிரச்சாரத்துக்குப்போனபோது, ‘அவருக்கு உடம்புக்கு எதுவும் ஆகிடக்கூடாதுப்பா… நீ போயி சமைச்சுக்கொடுத்தான் ஆரோக்கியமா இருப்பாரு’ன்னு சொல்லி அனுப்பினாங்க. ஆனா, நான் வந்தது தலைவருக்கு தெரியாது.  மதியம் சாம்பாரு வெச்சுக்கொடுத்தேன். சாப்ட்டு பார்த்த தலைவர், ‘ம்… என்னய்யா கோபாலபுரத்து சமையல்காரனை இங்கேயும் கூட்டிக்கிட்டு வந்துட்டிங்களா?’ன்னு சிரிச்சிக்கிட்டே கேட்டு  என்னோட சமையலை வெச்சே கண்டுபுடிச்சுட்டாரு தலைவர். அதுக்கப்புறம், தஞ்சாவூர் பிரச்சாரத்துக்குப்போறாரு. அங்கு அவருக்கு இட்லி செஞ்சுக்கொடுத்தேன்.  கல்லு மாதிரி இருக்கிற இட்லியை கையில எடுத்து பார்த்த தலைவரு, ‘என்னய்யா இது… யாரு தலையிலாவது அடிச்சா மண்டை உடைஞ்சுடும் போலிருக்கு… எப்படிய்யா சாப்பிடுறது’ன்னு கேட்க, “அவன் என்னங்க பண்ணுவான்… மாவு கொஞ்சம் புளிச்சிப்போயிருந்ததால இப்படியாகிடுச்சுன்னு தயாளு அம்மா சொன்னதும் புரிஞ்சிக்கிட்டாரு. அவர்க்கிட்ட புடிச்ச விஷயமே… சொன்னதும் உடனே புரிஞ்சுக்குவார். 

     தஞ்சாவூரிலிருந்து விழுப்புரம் வந்ததும் பொன்முடி அண்ணன் வீட்டுக்கு வந்து நானே சமையல் பண்ணிக்கொடுத்தேன். பிறகு, அங்கிருந்து வீட்டுக்கு வந்தோம். கோபாலபுரமே அவருக்காக பரபரப்பா காத்துக்கிட்டிருக்கு.  கார்ல போயி இறங்கினதுமே அவ்வளவு பரபரப்பான சூழலிலும் லிஃப்ட்டுக்கிட்ட என்னை அழைச்ச தலைவர் ‘உடம்புக்கு எந்த தொந்தரவும் இல்லாம சமைச்சு கொடுத்து நல்லபடியா கொண்டுவந்துட்டய்யா’ன்னு சொல்லி 2,500 பணத்தையும் கொடுத்தாரு. எனக்கு விருது கிடைச்சமாதிரி இருந்தது.   

     வீட்டில் அவருக்கு, ஒரு உணவும் எங்களுக்கு தனி உணவு எல்லாம் கிடையாது. தலைவருக்கு என்ன சமைக்கிறோமோ அதைத்தான் நாங்களும் சாப்பிடுவோம். அவரு, பச்சரிசி சாதம் சாப்பிடுவாரு. பச்சரிசி சாதம் சாப்பிடமாட்டோம் என்பதால நாங்க எல்லோரும் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடுவோம். இது மட்டும்தான் வேறுபடும். அதேபோல, நாலு கொழுக்கட்டை வைக்கிறோம்னா ரெண்டு வெச்சுடுவாரு. நாம எது செஞ்சு கொடுத்தாலும் மற்றவங்க சாப்பிடணும்ங்கிறதுக்காக கொஞ்சமா சாப்ட்டுட்டு மீதியை வெச்சுடுவாரு. அந்தளவுக்கு எங்கள் மேல அக்கறை கொண்டவரு. வீட்டு பக்கத்துலேயே பெரிய முருங்கை மரம் இருக்கிறது. அந்த முருங்கை மரத்து காய்களைத்தான் தலைவர் விரும்பி சாப்பிடுவார். வர்தா புயல் வந்தபோது சென்னையில் மரங்கள் அனைத்தும் சாய்ந்தப்போது, தலைவர் வீட்டு முருங்கை மரம் விழவேயில்லை. எப்போதும் காய்கள் காய்ச்சிக்கிட்டே இருக்கும்.  

     நான் வந்த புதுசுல ரொம்ப குண்டா இருப்பேன். தலைவருக்காக சாப்பட்டை கொண்டுபோய் வெச்சுட்டு வரும்போது எனக்கு ரொம்ப  மூச்சிறைக்கும். அதைப்பார்த்து அதிர்ச்சியான தலைவர், செல்வி அக்காவை கூப்பிட்டு உடனடியா அவனுக்கு சிகிச்சைக்கொடுக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லி, அம்மா தயாளு அம்மாள் மட்டுமே போற கார்ல என்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் பண்ணி, இப்போ அந்த மூச்சுத்திணறலே இல்லாம பண்ணி என்னோட உடம்பை சரி பண்ணிட்டாரு. இங்க வேலை பார்க்கிறவங்க்கிட்ட தலைவர்ல இருந்து செல்வி அக்கா வரை எல்லோருமே எந்த பாகுபாடும் காட்டாம ரொம்ப அன்பா பழகுவாங்க. அதுதான் அவங்களோட இயல்பு” என்று நெகிழும் முத்துசெல்வம் பிரகாஷ், மேலும் தொடர்கிறார்.

     என்னோட சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள நகரத்தார்குறிச்சி. செல்வி அக்கா குடும்பத்தோடு இங்கேயே தங்கிடுப்பா… நாங்களே வீடு பார்த்து கொடுத்துடுறோம்னு சொன்னாங்க.  தலைவர் தான் என்னோட உயிர். அவரை பார்த்துக்கிறதை விட வேறு என்னவேலை இருக்குன்னு குடும்பத்தை சொந்த ஊரிலேயே இருக்க சொல்லிவிட்டேன். நான் மட்டும் 3 மாதங்களுக்கு ஒருமுறை சென்றுவருவேன். என் மனைவியும், மகனும் தலைவரை பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க. அதனால, அவங்களை ஊருலருந்து வரச்சொல்லியிருந்தேன். ஆனா, தலைவர் சாப்பிடுற நேரத்துல வந்துட்டாங்க. தலைவரோ,  ‘உன் குடும்பத்தினரை பார்த்தபிறகே சாப்பிடுறேன்’னு சொல்லிட்டு கூட்டிக்கிட்டு வரச்சொல்லிட்டாரு. என் பையன் பிரகாஷை பார்த்து, ‘என்னப்படிக்கிற? என்னவா ஆகணும்னு ஆசைப்படுற?ன்னு கேட்டதுக்கு, ‘நான் நல்லா படிச்சு போலீஸ் ஆகி… உங்களுக்கே பாதுகாப்பு வரணும்னும்ங்கய்யான்னு சொல்ல,  ‘உனக்கு என்ன வயசாகுது… நீ போலிஸாகி எனக்கு வரப்போறியா?ன்னு சிரிச்சுட்டாரு தலைவரு. 

    மறுநாள், சிந்தாதரிப்பேட்டையில் நடந்த கூட்டத்தில் பேசிய தலைவர், ‘உங்களை எல்லாம் பார்க்கும்போது இன்னும் ஐம்பது வருடங்கள் வாழவேண்டும்போல் இருக்கிறது’என்று சொல்ல, என் பையன் அதை, டிவியில் பார்த்துவிட்டு ‘இன்னும் அம்பது வருஷம் வாழப்போற தலைவருக்கு நான் போலீஸா வந்து பாதுகாப்பு கொடுக்கமுடியாதான்னு கேட்க என் கண்ணு கலங்கிடுச்சு. 

என் பையனோட படிப்புச்செலவுக்காக செல்வி அக்கா சொல்லி 1 லட்ச ரூபாய் உதவி செய்தார் தலைவர். என் குடும்பம், நண்பர்கள் என யார் வந்து தலைவரை சந்தித்தாலும் உன் நண்பனை எனக்கு ஒழுங்கா சமைச்சிப்போட சொல்லு… உன் அப்பனை ஒழுங்கா சமைச்சிப்போட சொல்லு என்று கிண்டலும் அடிப்பார்” என்று நினைவுகளை அடுக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com