பாஜக பிடியில் ஓபிஎஸ்-இபிஎஸ்: உறுதி செய்கிறது கே.சி.பழனிசாமி நீக்கம்

பாஜக பிடியில் ஓபிஎஸ்-இபிஎஸ்: உறுதி செய்கிறது கே.சி.பழனிசாமி நீக்கம்

பாஜக பிடியில் ஓபிஎஸ்-இபிஎஸ்: உறுதி செய்கிறது கே.சி.பழனிசாமி நீக்கம்
Published on

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுள்ளது, பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேபோல், தங்களது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்குமாறு மற்ற கட்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது. மக்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு மெஜாரிட்டி இருந்த போது, ஒரு அரசியல் நடவடிக்கைக்காக அக்கட்சிகள் இதனை மேற்கொள்கின்றன என்றே பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் இருந்தே விலகி விட்டது. தங்களுக்கு பாதிப்பு இல்லையென்றாலும் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் தற்போது இதுபோன்ற நிலை ஏற்படுவது பாஜகவுக்கு சற்றே தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தங்களது கட்சி நிச்சயம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் என்று அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த கே.சி.பழனிசாமி இன்று காலை கூறியிருந்தார். இந்தக் கருத்தை கூறியதற்காக கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கருத்து கூறி 12  மணி நேரம் கூட முடியாத நிலையில், ஒபிஎஸ்-இபிஎஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

அதாவது பாஜகவுக்கு எதிரான கருத்தினை தெரிவித்தால்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையிலான உறவு அரசியல் நோக்கர்கள் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மோடிக்கும் ஓபிஎஸ்-இபிஎஸுக்கும் இடையிலான உறவு. அதிமுகவை பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது என குற்றச்சாட்டினை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்களின் பேச்சும் இருந்து வருகின்றன. 

இதனை சமீபத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக உறுதியும் செய்தார். பிரதமர் மோடி கூறியதால்தான் அமைச்சரவையில் இடம்பெற்றேன் என்று வெளிப்படையாக பேசினார். “அணிகள் இணைவதற்கு முன், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தேன். இப்போது இருக்கும் சூழலில் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். மேலும், எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று கூறினேன். ஆனால், நான் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று மோடி கூறினார்” என்று பல நாள் விமர்சனத்தை ஆமோதிக்கும் வகையில் தெளிவாக பேசினார்.

இந்தப் பின்னணியில், கே.சி.பழனிசாமி மீதான நடவடிக்கையும் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தை பொறுத்தவரை 50 எம்.பி.களுடன் மிகவும் வலுவான கட்சியாக அதிமுக இருக்கிறது. அதனால், கே.சி.பழனிசாமியின் கருத்து நிச்சயம் பாஜகவுக்கு கோபத்தை உண்டாக்கியிருக்கும். மேலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸுக்கு அழுத்தம் வந்திருக்கும். அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியாகவே அதிமுக இருப்பதை இது உறுதி செய்கிறது. 

கே.சி.பழனிசாமி கூறிய கருத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. திமுக சார்பில் நாடாளுமன்ற எம்.பி.க்களை ராஜினாமா செய்ய தயார் என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், நேற்றைய சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக அறிவித்தது.  திமுக ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் போது அதனை விட வலுவான நிலைப்பாட்டை எடுப்பதுதான் அதிமுகவின் அரசியல். காவிரி விவகாரத்தில் முதலில் திமுகதான் அனைக்கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தது. அதன் பிறகுதான் திமுக பலனை அடைந்துவிடக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக அனைக்கட்சி கூட்டத்தை கூட்டியது. அந்த வகையில் கே.சி.பழனிசாமியின் நிலைப்பாடு சரியானது. 

ஆந்திராவின் அரசியலை உற்று கவனித்தால் தெரியும் இதுநன்றாக புரியும். ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்து வரும் அழுத்தம் காரணமாகதான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்கும் நிலைக்கு சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் யார் மக்களின் நலனில் அக்கறையோடு செயல்படுகிறார்கள் என்பதற்கு இருதரப்பினரும் போட்டி போட்டு செயல்படுகிறார்கள். காவிரி மேலாண்மை விவகாரத்தில் கர்நாடக ஆளும் கட்சி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தங்களது கட்சி நிச்சயம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் என்று கூறிய ஒரு கருத்திற்காக கட்சியில் இருந்தே கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு கூறிய கருத்தையும் ஓபிஎஸ்-இபிஎஸ் உறுதிசெய்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் சர்ச்சையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மோடி அரசியல் செய்தார், அதுபோல் ஆந்திராவில் நடக்காது என்று சந்திரபாபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com