ஸ்டார்ட் அப் இளவரசிகள் 12: 'சமூக ஊடக முன்னோடி' கேத்ரீனா ஃபேக் - அது ஒரு ஃபிளிக்கர் காலம்!

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 12: 'சமூக ஊடக முன்னோடி' கேத்ரீனா ஃபேக் - அது ஒரு ஃபிளிக்கர் காலம்!
ஸ்டார்ட் அப் இளவரசிகள் 12: 'சமூக ஊடக முன்னோடி' கேத்ரீனா ஃபேக் - அது ஒரு ஃபிளிக்கர் காலம்!

'இணையத்தை மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இணைய சமூகத்தை மிகவும் பிடித்திருந்தது' என்று பாட்காஸ்டிங் பேட்டி ஒன்றில் கேத்ரீனா ஃபேக் கூறியிருக்கிறார். கேத்ரீனாவுக்கு இணைய சமூகங்களில் இருந்த ஆர்வமே அவர் இணை நிறுவனராக உருவாக்கிய நிறுவனத்திலும் பிரதிபலித்தது எனலாம்.

உண்மையில் இணைய சமூகங்களில் அவருக்கு இருந்த ஆர்வமே, லட்சக்கணக்கானோர் தங்களுக்கான இணைய சமூகங்களை உருவாக்கிக் கொள்ள வழி செய்த மகத்தான சமூக வலைப்பின்னல் சேவையை உருவாக்க வைத்தது.

கேத்ரீனா ஃபேக் வேறு யாருமில்லை; இணையத்தின் முன்னோடி சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றான 'ஃபிளிக்கர்' சேவையை உருவாக்கிய இணை நிறுவனர்களில் ஒருவர். இணையத்தின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக அறியப்படும் கேத்ரீனா, ஃபிளிக்கருக்கு பிறகும் பல நிறுவனங்களை உருவாக்கிய தொடர் தொழில்முனைவோராக திகழ்கிறார். இணையம் தொடர்பான அவரது புரிதலும் ஆழமானதாகவே இருக்கிறது. இணைய வரலாறு பற்றியும், இணையத்தில் ஆவணமாக்கலின் முக்கியத்துவத்தையும் நன்கறிந்தவராகவும் இருக்கிறார். இவை அனைத்தும் அவர் உருவாக்கிய ஃபிளிக்கர் சேவையில் பிரதிபலித்தன.

ஃபிளிக்கர் காலம்: கேத்ரீனா பன்முகம் கொண்ட சாதனை பெண்ணாக விளங்கினாலும், ஃபிளிக்கர் சேவையே இன்று வரை அவரது முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஃபிளிக்கர் என்பது இன்றைய இணைய தலைமுறைக்கு அதிகம் பரிச்சயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஃபிளிக்கர் ஒரு காலத்தில் இணையத்தின் முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக இருந்தது மட்டும் அல்ல, சமூக வலைப்பின்னல் சேவைகளில் பரவலாக காணப்படும் பல அம்சங்கள் ஃபிளிக்கரில் அறிமுகமான புதுமைகள் என்றே சொல்லலாம்.

ஃபிளிக்கர் அப்படி என்ன செய்தது என்றால், இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் இணைய சமூகங்களை உருவாக்கிக் கொள்ள வழி செய்தது.

புகைப்பட பகிர்வு சேவை என்றவுடன், ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு இன்ஸ்டாகிராம் செயலிதான் நினைவுக்கு வரும் என்றாலும், இன்ஸ்டாவுக்கு பல ஆண்டுகள் முன்னரே அறிமுகமாகி, புகைப்பட பகிர்வு கருத்தாக்கத்தை பிரபலமாக்கிய சேவையாக ஃபிளிக்கரை கருதலாம். இன்னும் சொல்லப்போனால், இன்ஸ்டாகிராமை துணை நிறுவனமாக வைத்திருக்கும் ஃபேஸ்புக்கிற்கும் முன்பாக இணையத்தில் வெற்றிக்கொடி நாட்டிய சமூக வலைப்பின்னல் சேவை என ஃபிளிக்கரை வர்ணிக்கலாம்.

பிளிக்கரும், ஃபேஸ்புக்கும் ஒரே காலத்தில்தான் (2004) அறிமுகமாகின என்றாலும் கூட, ஃபேஸ்புக் பரவலாக அறியப்படுவதற்கு முன்னரே எல்லோரும் ஃபிளிக்கர் பற்றி பேசத் துவங்கிவிட்டனர். உண்மையில், ஃபேஸ்புக் அறிமுகமான ஆறு நாட்கள் கழித்துதான் ஃபிளிக்கர் உதயமானது. ஆனால், துவக்கத்தில் ஃபேஸ்புக் கல்லூரி மாணவர்களுக்கான பிரத்யேக சேவையாக இருந்தது. முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அறிமுகமாகி, அதன்பிறகு மற்ற அமெரிக்க கல்லூரிகளுக்கு விரிவாக ஃபேஸ்புக் பேசப்படும் சேவையாக வளர்வதற்குள் ஃபிளிக்கர் முன்னணி புகைப்பட பகிர்வு சேவையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருந்தது.

2.0 அலை: அது மட்டும் அல்ல, சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கான பல ஆதார அம்சங்களை கொண்டிருந்ததோடு, பயனாளிகள் பங்கேற்பிற்கு வழி செய்த வலை 2.0 போக்கின் நட்சத்திரக் குழந்தையாகவும் ஃபிளிக்கர் சேவை கொண்டாடப்படுகிறது. இணையத்தில் என்ன செய்வது எனும் கேள்விக்கு புகைப்படங்களை பகிரலாம் என பயனாளிகள் நோக்கில் ஃபிளிக்கர் பதில் சொல்ல வைத்தது. இத்தனைக்கும் ஃபிளிக்கர் ஒரு முதன்மை சேவையாக உருவாக்கப்படாமல், துணை சேவையாக தற்செயலாக உருவானது என்பதுதான் முரண்நகை.

அந்த வகையில் பாட்காஸ்டிங் நிறுவனத்தின் துணை சேவையாக உருவாகி பின்னர் குறும்பதிவு சேவையாக நிலைப்பெற்ற ட்விட்டர் கதையை போலவே ஃபிளிக்கரின் பாதை அமைந்திருந்தாலும், கேத்ரீனாவின் ஆதார நம்பிக்கைகள் ஃபிளிக்கரை இவ்விதமாக உருவாக்கியது என்றும் கொள்ளலாம்.

கேத்ரீனா அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். இணையத்தின் மூல விதையான அர்பாநெட் வலைப்பின்னல் நிறுவப்பட்ட அதே 1969-ம் ஆண்டில்தான் கேத்ரீனாவும் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் இலக்கியம், இசையில் ஆர்வம் கொண்டிருந்த கேத்ரீனா தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்கப்பவில்லை. நண்பர்கள் வட்டம் மூலம் அவருக்கு கம்ப்யூட்டரும், இணையமும் பின்னர் அறிமுகமானது.

கல்லூரி காலம்: கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தார் என்றாலும் அவருக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங்கில் ஆர்வமும், திறமையும் இருந்தது. இதன் பயனாக கல்லூரியை முடிதத்தும், அவருக்கு ஆர்கானிக் ஆன்லைன் எனும் நிறுவனத்தில் புரோகிராமராக வேலை கிடைத்தது. இந்நிறுவனத்தின் சார்பாக, நைக், லெவி, மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களின் இணையதளங்கள் உருவாக்கத்தில் அவர் பங்காற்றினார்.

மேலும், கல்லூரி காலத்திலேயே இணையம் அவருக்கு அறிமுகம் ஆகியிருந்தது. அவர் பயின்ற வாஸர் கல்லூரியில், மெயின்பிரேம் கம்ப்யூட்டர் வாயிலாக இணையத்தை அணுக முடிந்தது. இந்தக் காலத்தில் அவருக்கு இணைய இதழ்கள் மற்றும் இணைய தகவல் பலகைகள் அறிமுகமாகியிருந்தன.

இந்தக் காலகட்டத்தில் இன்டர்வல் ரிசர்ச் எனும் நிறுவனத்தில் ஆய்வு உதவியாளராக பணியாற்றினார். சலோன் டாட் காமில் கலை இயக்குனராக பணியாற்றி அதன் இணைய சமூகப் பகுதியை கவனித்துக்கொண்டார். 1997-ல் அவர் வலை வரலாற்றில் முன்னோடி பிரவுசர்களில் ஒன்றான நெட்ஸ்கேப்பில் பணியாற்றினார். இந்த அனுபவங்கள் அனைத்துமே பின்னாளில் ஃபிளிக்கர் உருவாக்கத்தில் கைகொடுத்தன.

இதனிடையே, ஸ்டூவர்டு பட்டர்ஃபீல்டு என்பவருடன் நட்பு ஏற்பட, இருவரும் இணைந்து 2002-ம் ஆண்டில் லூடிகார்ப் எனும் நிறுவனத்தை துவக்கினர். இந்நிறுவனம் சார்பாக, நெவர் எண்டிங் எனும் ஆன்லைன் கேம் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த கேம் ஆன்லைன் உலகமாக அமைந்திருந்தது. இந்த கேம் உலகிற்குள் பயனாளிகள் உருவாக்கம், பொருட்களை வாங்கி விற்பது போன்றவை மூலம் சமூகத் தொடர்பில் ஈடுபட வாய்ப்பிருந்தது.

ஆன்லைன் கேம்: பின்னாளில் இதே போன்ற ஆன்லைன் உலகமாக அமைந்த செகண்ட் லைஃப் போன்ற விளையாட்டுகள் இணையவாசிகள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றாலும் லூடிகார்ப் உருவாக்கிய ஆன்லைன் கேம் தடுமாறியது. அதோடு, இந்நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதும் கடினமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் டாட்காம் குமிழ் வெடித்துச் சிதறி இணைய நிறுவனங்கள் மீது பரவலான அவநம்பிக்க நிலவியதால், புதிய நிறுவனங்களுக்கு நிதி முதலீடு கிடைப்பது கடினமாக இருந்தது.

மேலும், நெவர் எண்டிங் விளையாட்டை முதலீட்டாளர்களுக்கு விளக்குவதும் கடினமாக இருந்தது. ஆன்லைன் விளையாட்டு என்பதை பலராலும் விளங்கி கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக, லூடிகார்ப் நிறுவனத்தில் இருந்தவர்கள் சம்பளம் இல்லாமலே பல மாதங்கள் பணியாற்றும் நிலையும் உண்டானது.

லூடிகார்ப் நிறுவனத்தை எந்த திசையில் கொண்டு செல்வது எனத் தெரியாமல் அதன் நிறுவனர்கள் குழும்பி தவித்த நிலையில், ஆன்லைன் கேமிற்காக அவர்கள் உருவாக்கியிருந்த துணை சேவை ஒன்று பயனாளிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்ததை கவனித்தனர். கேம் விளையாடுபவர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதற்கான அரட்டை சேவைதான் அது. அரட்டை வசதியோடு பயனாளிகள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் வழி இருந்தது.

ஆன்லைன் கேமை விட்டுவிட்டு, அதன் துணை சேவையான இணைய அரட்டை வசதியை தனி சேவையாக அறிமுகம் செய்வது என தீர்மானித்தனர். அந்தக் காலகட்டத்தில் இணையத்தில் அரட்டை சேவைகளும், உடனடி செய்தி சேவையும் பிரபலமாக இருந்தன. அவற்றோடு போட்டியிடும் அளவுக்கு லூடிகார்ப்பின் ஆன்லைன் அரட்டை சேவையில் அதிக அம்சங்கள் இருக்கவில்லை. ஆனால், புகைப்பட பகிர்வு வசதி புதுமையானதாக இருந்தது. எனவே புகைப்பட பகிர்வை அடிப்படையாக கொண்ட அரட்டை வசதி கொண்ட சேவையை அறிமுகம் செய்வது என முடிவெடுத்தனர்.

ஃபிளிக்கர் உதயம்: இப்படித்தான் பிளிக்கர் (Flickr) புகைப்பட பகிர்வு சேவை அறிமுகமானது. இந்தக் காலகட்டத்தில் இணையத்தில் புகைப்பட பகிரவு தளங்கள் இல்லாமல் இல்லை. போட்டோபக்கெட், ஷட்டர்பிளை, ஸ்னேப்பிஷ் உள்ளிட்ட தளங்கள் டிஜிட்டல் படங்களை இணையத்தில் பகிரும் வசதியை அளித்தன. ஆனால், இந்த சேவைகள் டிஜிட்டல் படங்களுக்கான சேமிப்பிடமாகவே விளங்கின. டிஜிட்டல் படங்களை அச்சிட்டு புகைப்படமாக அனுப்பி வைக்கும் வசதியை இவை வர்த்தக நோக்கில் வழங்கின. அதே நேரத்தில் பிரன்ஸ்டர், மைஸ்பேஸ் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் இருந்தாலும் அவற்றில் புகைப்பட பகிர்வு என்பது பிராதான அம்சமாக இருக்கவில்லை.

ஆனால், ஃபிளிக்கர் புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு உரையாடும் சமூக அம்சமே பிரதானமாக இருந்தது. அந்த வகையில் புதுமையான சேவையாக ஃபிளிக்கர் கவனத்தை ஈர்த்தது. இதன் விளைவாக புகைப்பட கலைஞர்களும், புகைப்படத்தில் ஆர்வம் கொண்டவர்களும் ஃபிளிக்கரை விரும்பி பயன்படுத்த துவங்கினர். குறிப்பாக, புகைப்படங்களை பதிவேற்றும் வசதிக்காக புகைப்பட கலைஞர்கள் இந்த சேவையை மிகவும் விரும்பினர். புகைப்படங்களுடன் பயனாளிகள் பரஸ்பரம் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

புகைப்படங்கள் வாயிலாக கருத்துகளை பகிரலாம் எனும் அம்சம் பயனாளிகளை கவர்ந்தது. ஃபிளிக்கர் சேவை மெள்ள பிரபலமான நிலையில், கேத்ரீனாவும், இன்னும் சில ஊழியர்களும் ஒவ்வொரு புதிய உறுப்பினரையும் தனிப்பட்ட முறையில் வரவேற்று அவர்களுடன் உரையாடினர். ஃபிளிக்கர் சேவை இலவசமானதாக இருந்தாலும், அதிக அளவிலான புகைப்பட சேமிப்பிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.

சமூக அம்சங்கள்: ஃபிளிக்கர் புகைப்பட பகிர்வு சேவையாக மட்டும் இருக்கவில்லை. பயனாளிகள் மற்றவர்களின் புகைப்படங்களை பார்த்து கருத்து தெரிவிக்க முடிந்தது. மேலும், புகைப்படங்களை அவற்றின் தன்மைக்கேற்ப பல்வேறு தொடர்புடைய குறிச்சொற்களால் அடையாளப்படுத்த முடிந்தது. டேகிங் என்றழைக்கபட்ட இந்த வசதி புகைப்படங்களை எளிதாக தேடி கண்டறிய வழி செய்ததோடு, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் உதவியது.

புத்தாயிரமாண்டிற்கு பின் பிரபலமாகத் துவங்கியிருந்த பயனாளிகள் பங்கேற்று உள்ளடக்கத்தை உருவாக்க வழிசெய்த வலை 2.0 கருத்தாக்கத்தின் அடிப்படையிலான தளங்களின் வரிசையில் ஃபிளிக்கரும் இணைந்தது. புதிய அம்சங்கள் மூலம் பயனாளிகள் உள்ளடக்கத்திற்கு ஃபிளிக்கர் உத்வேகம் அளித்தது. ஃபிளிக்கர் தளத்தில் பயனாளிகள் சக உறுப்பினர்களை பின் தொடரும் வாய்ப்பு இருந்ததோடு, உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் புதிய படங்களை டைம்லைனில் தலைக்கீழ் வரிசையில் பார்ப்பதும் சாத்தியமானது. பின்னாளில் ஃபேஸ்புக் அறிமுகம் செய்த பயனாளிகள் நடவடிக்கையை அறிய உதவும் நியூஸ்ஃபீட் வசதியின் முன்வடிவமாக இந்த வசதியை கருதலாம். இணையத்தில் வலைப்பதிவு கருத்தாக்கம் பிரபலமாகி ஆயிரக்கணக்கானோர் வலைப்பதிவு செய்வது வந்த நிலையில், வலைப்பதிவுகளில் புகைப்படங்களை பதிவேற்றுவதற்கான வசதியாகவும் ஃபிளிக்கர் பயன்பட்டது.

இப்படி பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தியதால் ஃபிளிக்கர் மேலும் பிரபலமானது. 2006-ம் ஆண்டு ஃபிளிக்கர் ஆண்டின் சிறந்த தளங்களில் ஒன்றாக டைம் பத்திரிகையால் தேர்வானது. இதே ஆண்டு அப்போதைய இணைய ஜாம்பவான் யாஹுவால் ஃபிளிக்கர் விலைக்கு வாங்கப்பட்டது. இணையத்தின் சமூக தன்மையில் கேத்ரீனாவுக்கு இருந்த நம்பிக்கையே, ஃபிளிக்கரை முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையாக வெற்றி பெற வைத்தது.

ஆனால், அடுத்து வந்த சமூக வலைப்பின்னல் சேவைகள் அலையில் ஃபிளிக்கர் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இதனிடையே, ஃபேஸ்புக் பொதுமக்களுக்கான சேவையாக விரிவாகி, இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. யாஹுவால் கையகப்படுத்தப்பட்ட பின், நிர்வாக கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஃபிளிக்கர் மேலும் சரிவுக்கு உள்ளனாது. சில ஆண்டுகள் கழித்து ஃபிளிக்கர் வேறு ஒரு நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது.

ஃபிளிக்கர் அதன் பளபளப்பை இழந்துவிட்டாலும் புகைப்படங்கள் சார்ந்த முக்கிய சேவையாக தொடர்கிறது. இதனிடையே, கேத்ரீனா மற்றும் அவரது கணவர் இருவருமே ஃபிளிக்கரில் இருந்து வெளியேறிவிட்டனர். அதன் பிறகு இருவரும் பிரிந்து தனித்தனி பாதை கண்டனர். ஸ்டூவர்டு பட்டர்பீல்டு வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்படும் தொழில்முறையிலான மேசேஜிங் சேவை ஸ்லேக் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கேத்ரீனா தொழில்முனைவு உலகில் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். 2007-ம் ஆண்டு, ஹன்ச் எனும் சேவையை துவக்கியவர், எட்ஸி எனும் இணைய நிறுவனத்தில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். மேலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வென்சர் முதலீட்டாளராகவும் இருந்து வருகிறார். துடிப்பான செயல்பாடுகளை கொண்ட கேத்ரீனா சிலிக்கான் வேலி மற்றும் இணைய உலகின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். இணைய உலகில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கான முன்னுதாரணமாக அவர் விளங்குகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com