வலையில் சிக்கும் அரிய பொருளால் சிக்கலில் சிக்கும் மீனவர்கள்!என்ன பொருள் அது? விரிவான அலசல்

வலையில் சிக்கும் அரிய பொருளால் சிக்கலில் சிக்கும் மீனவர்கள்!என்ன பொருள் அது? விரிவான அலசல்
வலையில் சிக்கும் அரிய பொருளால் சிக்கலில் சிக்கும் மீனவர்கள்!என்ன பொருள் அது? விரிவான அலசல்

கள்ள சந்தையில் பல கோடிக்கு ரூபாய்க்கு பேரம் பேசி விற்பனைக்காக கடத்தப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டி "அம்பர் கிரிஸ்" மோசடி உண்மையா? விற்பனைக்கு தடையா? உண்மை தன்மை தான் என்ன என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

மீன்பிடி தொழில்தான் வாழ்வாதாரம்:

வடக்கே பச்சை பசேலென பரந்து விரிந்த மலை! தெற்கே கருநீல கடல் என இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள பிரதான தொழில் மீன்பிடி தொழில். பொதுவாக ஆழ்கடல் மீன்பிடி தொழில் சவால்கள் நிறைந்தது. அத்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் வீசும் வலையில் சிக்கும் சில மீன்களும் பொருட்களும் அவர்களுக்கே சில சமயம் சிக்கலை உருவாக்கி விடுகிறது. அரசால் பிடிக்க தடை செய்யப்பட்டு வனத்துறையால் பட்டியலிடப்பட்ட சில மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்குவதும் அதை தெரியாமல் மீனவர்கள் விற்பனைக்கு கொண்டு வந்து வனத்துறையின் சட்ட நடவடிக்கையில் சிக்குவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

அதென்ன அம்பர் கிரிஸ்? அப்படியென்றால் என்ன?

அந்த வகையில் மீனவர்களுக்கு புதிய சிக்கல் ஒன்று தற்போது உருவாக்கியுள்ளது. அதன் பெயர் அம்பர் கிரிஸ். கடலில் கிடைக்கும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிதான் அம்பர் கிரிஸ் (Ambergris). கடல் ராஜா பெருமீன் என மீனவர்களால் அழைக்கப்படும் அரசால் வேட்டையாட தடை செய்யப்பட்ட “நீல திமிங்கல மீனின் உமிழ்நீர் கட்டி” தான் அந்த அம்பர் கிரிஸ்.

அம்பர் கிரிஸ் எப்படி உருவாகிறது?

பொதுவாக ஆழ்கடல் பகுதியில் அரிதாக காணப்படும் பல டன் எடை கொண்ட நீல திமிங்கலங்கள் ஓடும் கப்பலுக்கே டப் கொடுக்கும் விதத்தில் ஆக்ரோஷமாக நீந்தி ஏராளமான பெரிய மீன்களை வேட்டையாடி உணவாக்கி கொள்கிறது. கணவாய், நண்டு போன்ற மீன்களை தனது ராட்சத வாயால் மொத்தமாக வேட்டையாடி உணவாக்கி உட்கொள்ளும் நிலையில் அந்த மீன்களின் ஓடுகள் முழுவதுமாக செரிமானம் ஆகாமல் திமிங்கலத்தின் செரிமான உறுப்பிலேயே தங்கி விடும். அவற்றை திமிங்கலத்தின் செரிமான உறுப்பில் இருந்து சுரக்கும் ஜெல் போன்ற திரவம் வாய் வழியாக வெளியேற்றி விடுகிறது.

இந்த திரவம் கடலில் மேற்பரப்பில் மிதந்து செல்லும் நிலையில் ஒரு சில நாட்களில் கட்டிகளாக மாறி மெழுகு போல் அடர் மஞ்சள், சாம்பல் நிறங்களில் மிதக்கத் துவங்கும் என கூறப்படுகிறது. முதலில் துர்நாற்றம் வீசும் இந்த கட்டிகள் மெல்ல மெல்ல நறுமணம் வீச தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

அம்பர் கிரிஸ்-க்கு ஏன் அவ்வளவு மவுசு?

நீலத் திமிங்கலத்தின் இந்த உமிழ்நீர் கட்டிகள் வாசனை திரவியங்கள் தயாரிப்பிலும் பாலியல் மருந்துகள் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படும் நிலையில் சர்வதேச சந்தையில் இதன் மதிப்பும் பல கோடிகளைத் தாண்டும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தான் ஒரு சில மீனவர்கள் வலையில் அரிதாக சிக்கும் தடை செய்யப்பட்ட இந்த ஆம்பர் கிரீஸ் என்னவென்று தெரியாமல் அதனை குறைந்த விலையில் விற்றுவிடுவதாகவும் மீனவர்களிடம் இருந்து வாங்கிய கட்டிகளை கள்ள சந்தையில் ஒரு சில கும்பல் பல கோடி பேரத்தில் விற்பனைக்கு கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில கும்பல்கள் இந்த கட்டிகளைப் போல் செயற்கை பொருளை தயாரித்து மோசடி விற்பனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஏன் பேசுபொருளானது அம்பர் கிரிஸ்?

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் 12 கிலோ அம்பர் கிரிஸை 12 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி சட்ட விரோதமாக விற்க முயன்றதாக 5 வாலிபர்களை குளச்சல் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த அம்பர் கிரிஸை போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள பொருளின் உண்மை தன்மை ஆய்வக பரிசோதனைக்கு பின்புதான் தெரிய வரும் என்றும் பொதுவாக இதுபோல் செயற்கையாக தயாரிக்கப்பட்ட போலி அம்பர் கிரிஸை வைத்துதான் மோசடி கும்பல்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் வனத்துறையினர் கூறுகின்றனர்.

அம்பர் கிரிஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துக - மீனவர்கள்

இது குறித்து ஆழ்கடலில் நெடுநாட்களாக மீன்பிடித்து வரும் மீனவர்களிடம் கேட்ட போது “நாங்கள் இது வரை அப்படி எதுவும் உமிழ்நீர் எதுவும் பார்த்தது இல்லை. இது போன்ற உமிழ்நீர் கிடைத்து இருப்பதாக செய்திகளில் பார்த்து தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். அப்படி ஏதாவது வலையில் கிடைத்தாலும் நாங்கள் கரையில் வந்து யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்து போதிய விழிப்பபுணர்வு சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்தனர்.

அம்பர் கிரிஸை மீனவர்கள் வைத்திருக்கக் கூடாது - வனத்துறை

“திமிங்கல உமிழ்நீர் கட்டி அம்பர் கிரிஸ் என்பது உண்மை. இது மீனவர்கள் வலையில் சிக்கினால் அதை மீனவர்கள் வைத்திருக்க கூடாது. வலையில் சிக்கிய 48 மணி நேரத்தில் வனத்துறை இடமோ அல்லது அருகில் உள்ள கடல் காவல் நிலையத்திலோ அல்லது வருவாய் துறையினரிடமோ ஒப்படைக்க வேண்டும்” என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் மரத்தினால் ஆன போலிகள் நிறைய உலா வருவதாகவும், அம்பர் கிரிஸின் உண்மைத்தன்மை குறித்து கொச்சியில் தான் பரிசோதனை செய்ய முடியும் என்றும் வனத்துறையினர் கூறுகின்றனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சிக்கல் இல்லை:

என்ன பொருள் என்று தெரியாமல் அம்பர் கிரிஸை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து பிரச்சனையில் சிக்கி விடுகின்றனர். திமிங்கல உமிழ்நீரான அம்பர் கிரிஸ் குறித்து மீனவ கிராமங்களில் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

- சுமன், முத்துகிருஷ்ணன்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com