“முதலில் சமூகசேவை; அடுத்து அரசியல்தான்” - ஆல் ரவுண்டர் அஸ்விதா

“முதலில் சமூகசேவை; அடுத்து அரசியல்தான்” - ஆல் ரவுண்டர் அஸ்விதா

“முதலில் சமூகசேவை; அடுத்து அரசியல்தான்” - ஆல் ரவுண்டர் அஸ்விதா
Published on

நெல்லை மாவட்டத்தில்  முக்கூடல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் அஸ்விதா. இவரது தாய் தந்தை பீடி சுற்றும் தொழில் செய்கின்றனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது தாய் தந்தையருக்கு 3 வது பெண் குழந்தையான இவர் வீட்டில் முதல் பட்டதாரி பெண் ஆவார். படிக்கும் போதே வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் படித்துள்ளார். ஒரு கட்டத்தில் உயர்கல்வி குறித்த குழப்பத்தின்போது,  அவருக்கு புதிய தலைமுறை கல்வி எனும் வாரஇதழ் உறுதுணையாக இருந்துள்ளது என்கிறார். அதில் கிடைத்த உதவியால் டெல்லி சென்று ஒரு வருடம் young India fellowshipல்  படித்துள்ளார். 

டெல்லியில் சென்று படிக்கும் போது, படிக்கும் 97 பேரில் தான் ஒருவர் மட்டுமே கிராமத்தில் இருந்து வந்த பெண் என்றும், இது தனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறுகின்றார். 

இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள்தான் என்ற நிலையில் கிராமப்புற மாணவர்கள் வாழ்வில் முன்னேற சாதனை படைக்க ஏன் தயக்கம் காட்டுகின்றனர் என்ற கேள்வி தனக்குள் எழுந்ததால் அதுவே மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியதாக கூறுகின்றார் அஸ்விதா.

இதற்காக தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கிராமப்புறத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மற்றும் கிராமங்களுக்கு சென்று கடந்த 4 வருடமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 35க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கிடையே உள்ள  திறமைகளை வெளிக்கொண்டு வருதல், தன்னம்பிக்கையை வளர்த்தல், கிராமப்புற மாணவர்களுக்காக கொட்டி கிடக்கும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு ஊக்கத்தை அளித்தல் என களப்பணி செய்து வருகிறார். 

இவரின் இந்தச் சமூக சேவை பணிக்காக வருகின்ற 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மாநில இளைஞர் விருது மாவட்ட நிர்வாகம் தரப்பில் வழங்கப்பட உள்ளது. இது தனக்கு கிடைத்த முதல் விருது என்றும், இது மேலும் தனது சமூகப் பணியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் பெருமிதம் கொள்கிறார் இளம் பெண் அஸ்விதா.

தற்போது செய்து வரும் சமூக பணியில் இருந்து தொடர்ந்து சமூகத்தில் பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று எண்ணுவதாகவும், அதற்கு இன்னும் இளைய சமூதாயத்தினர் மனதை படிக்க வேண்டும், அவர்களுக்கான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும், அதன் பின்னர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கூறுகின்றார். அரசியலில் பெண் ஆளுமைகள் மிகமிகக் குறைவு என்றும் தான் அரசியலுக்கு வந்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும் இதுதான் தனது  வாழ்நாள் குறிக்கோள் என்றும் கூறுகின்றார் அஸ்விதா.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com