’ஆர் யூ எ ரிலீஜியஸ்?’-இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கேள்வியே கருவாக! #FIR -படம் எப்படி?

’ஆர் யூ எ ரிலீஜியஸ்?’-இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கேள்வியே கருவாக! #FIR -படம் எப்படி?
’ஆர் யூ எ ரிலீஜியஸ்?’-இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் கேள்வியே கருவாக! #FIR -படம் எப்படி?

'ராட்சன்' திரைப்படம் கொடுத்த அசுர வெற்றியைத் தொடர்ந்து நிச்சயம் அதனைவிட மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்தே ஆகவேண்டிய நிலையில் இருந்தார் விஷ்ணு விஷால். எப்போதும் வித்யாசமான கதைக் களத்தை பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் விஷ்ணு விஷால் நடிப்பில் நீண்டகாலம் கழித்து தற்போது FIR திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த சினிமா இந்திய முஸ்லீம்களின் நாட்டுப்பற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரில்லர் கதையாக உருவாகியிருக்கிறது. மனு ஆனந்த் இயக்கி இருக்கும் இந்த சினிமாவை விஷ்ணு விஷால் தயாரித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட்ஸ் FIR'ஐ வெளியிட்டிருக்கிறது.

கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனக்கான நல்ல வேலையை தேடும் இர்பான் அகமது என்ற கதாபாத்திரத்தினை ஏற்று இந்த சினிமாவில் நடித்திருக்கிறார் விஷ்ணு விஷால். நிறைய நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்கிறார். என்னதான் தகுதிகள் இருந்தாலும் அவர் முன் அனைவரும் முன்வைக்கும் கேள்வி “ஆர் யூ எ ரிலீஜியஸ்...?. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒரு இஸ்லாமியரின் முன் மட்டும் ஏன் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இந்திய முஸ்லீம்களை அனைத்து தரப்பும் ஏன் அந்நியமாகப் பார்க்கிறது என்ற ஆரோக்கியமான விவாதம் நோக்கி பயணிக்கத் துவங்கும் இந்த சினிமா அடுத்தடுத்த காட்சிகளில் பல கிளைகளாக பிரிந்து விடுகிறது. இறுதியில், எடுத்துக்கொண்ட பாதையிலிருந்து முற்றிலும் மாறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கும் தகவல் இந்திய உளவுத்துறைக்கு கிடைக்கிறது. தீவிரவாதியைப் பிடிக்க போலீஸுக்கு கிடைக்கிறது சின்ன க்ளூ. ஆனால் அதில் சிக்கிக் கொள்வதோ இர்பான். இர்பானை கைது செய்யும் காவல் துறை அவரைக் கடுமையாகத் தாக்குகிறது.

போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கும் கெமிக்கல்  இன்ஜினியர் இர்பானுக்கு இன்னொரு முகம் இருப்பதாக விரிகிறது கதை. இப்படியாக எதை நோக்கியும் அழுத்தமாக நகராமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வழுக்கி உருளும் காட்சிகளால் பார்வையாளர்களை ஒரு வடிவத்திற்குள் வைத்து இந்த சினிமாவை ரசிக்க முடியாமல் போகிறது. எத்தனை உணர்வுகள் இருந்தாலும் ஒரு புள்ளியை நோக்கி நகரும் சினிமாதானே சுவாரஸ்யம்? அந்த வழமையை உடைக்கலாம்; ஆனால் அதற்கான புதுமையான, சுவாரஸ்யமான கண்டெண்ட் இல்லாமல் முடியாது.

ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா என மூன்று நாயகிகள் இருந்தாலும் அதில் ரைசா வில்சனுக்கு மட்டுமே மிகமுக்கிய ஸ்கிரீன் ஸ்பேஸைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மனு ஆனந்த். ஹிஜாப் அணிந்த ரைசா காவல்துறை உயர்மட்ட அதிகாரியாக வருகிறார். அவரே இர்பானை கைது செய்கிறார். இர்பானின் தாயும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. இஸ்லாமியர்களை நேர்மையாளர்களாக, தேசப்பற்று கொண்டவர்களாக சித்திரிக்க முயலும் இயக்குநரின் நோக்கம் சரியே என்றாலும் ஒரு சினிமாவாகக் கொஞ்சம் ஓவர் டோஸாகிவிட்டது இந்த FIR. முந்தைய சில விஜயகாந்த் சினிமாக்களையும், கமல்ஹாசன் நடித்த காக்கிச் சட்டையையும் இப்படம் பல இடங்களில் நினைவுபடுத்துகிறது.

கருத்தளவில் முழுமை பெறாத இந்த சினிமா ஒரு சுவாரஸ்யமான சினிமாவாக ரசிகனை நிச்சயம் திருப்திப்படுத்தும். அதற்கான நல்ல ஒளிப்பதிவு, விறுவிறு திரைக்கதை, ஆக்‌ஷன் காட்சிகள் என கமர்ஷியல் ஆக்‌ஷன் மசாலா படமாக இது நமக்கு கிடைத்திருக்கிறது. தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரியாக வரும் கவுதம் வாசுதேவ் மேனன் சின்னச் சின்ன மேனரிஸத்தில் கவர்கிறார். ஒரு நடிகராக அவருக்கு நிறைய நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. படத்திற்கு இன்னுமொரு பலமாக அஸ்வத்தின் பின்னனி இசை உள்ளது. ஒரு நல்ல ஆக்‌ஷன் கதைக்குத் தேவையான டெம்போவில் பின்னனி இசையமைத்து அசத்தியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் அருள் வின்சன்ட் தனித்த ஒளியமைப்பில் கவர்கிறார். கூடவே படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜிகே’வும் விறுவிறு காட்சிகளுக்கு மெனக்கெட்டிருக்கிறார்.

இஸ்லாமியர்களின் பிரச்னையை., அவர்கள் மீது இருக்கும் தவறான குற்றப்பார்வை குறித்து பேச முயற்சி செய்திருக்கும் FIR அதில் முழுமையடையவில்லை. மாறாக இது ஒரு நல்ல பொழுது போக்கு மசாலா படமாக மாறியிருக்கிறது.

விஷ்ணு விஷால் மற்றும் மனு ஆனந்த் ஆகியோரின் இந்த நல்ல முயற்சிக்கு பாராட்டுகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com