நேட்டோவில் இணைந்த பின்லாந்தும்.. எச்சரிக்கும் ரஷ்யாவும்! உக்ரைன் போரே இன்னும் ஓயவில்லையே.. அதற்குள் அடுத்தா??

நேட்டோவில் இன்று இணைந்திருக்கும் பின்லாந்து மீது பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
நேட்டோவில் இணைந்த பின்லாந்து
நேட்டோவில் இணைந்த பின்லாந்துNATO - twitter page

நேட்டோ அமைப்பில், 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இன்று இணைந்துள்ளது. நேட்டோ அமைப்பு தோன்றி இன்றுடன் 74 ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த அமைப்பில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் ஜூலை 11-12 ஆகிய தேதிகளில் லிதுவேனியாவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், ”நேட்டோவில் பின்லாந்து இணைந்ததற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என ரஷ்யா எச்சரித்துள்ளது. முன்னதாக நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், “நேட்டோ அமைப்பின் விரிவாக்கம் ஒரு வரலாற்று நிகழ்வு. இது, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரின் நேரடி விளைவு.

புடின்
புடின்file image

விரைவில், இந்த அமைப்பில் ஸ்வீடனும் இணையும்” என உறுதியளித்தார்.

நேட்டோவில் பின்லாந்து இணைந்தது குறித்து பிரிட்டன் பிரதமர் கேமரூன், “நேட்டோவுக்குள் பின்லாந்து இணைந்ததை வரவேற்கிறோம். அதுபோல், எங்கள் ஸ்வீடன் நண்பர்களையும் விரைவில் வரவேற்போம் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் எல்லைப் பிரிவை பகிர்ந்திருக்கும் பின்லாந்து, நேட்டோ படையில் இணைந்திருப்பது அமெரிக்காவின் பலத்தை இரட்டிப்பாக்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கெனவே இந்த விஷயத்தால் உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவுக்கு, பின்லாந்தும் நேட்டோவில் சேர்ந்திருப்பது பெரிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ளதால் அந்நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம். இது ரஷியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்file image

இந்த நிலையில் இன்று, பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கு முன்பாகப் பேசிய ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ”நேட்டோவின் விரிவாக்கம், ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு மீதான தாக்குதல் ஆகும். இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அது எத்தகைய நடவடிக்கைகள் என அவர் தெரிவிக்கவில்லை.

ரஷ்யாவும் பின்லாந்தும் 800 மைல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன

ரஷ்யாவும் பின்லாந்தும் 800 மைல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் - ரஷ்யா போர் ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், பின்லாந்து உடனும் ரஷ்யா போர் தொடுக்கும் சூழல் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை, பின்லாந்து மீதும் ரஷ்யா போர் தொடுக்க விரும்பினால், அது ரஷ்யாவுக்கு ஆபத்தாகத்தான் முடியும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு நாடுகள் மீது போர் தொடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏற்கெனவே ரஷ்யா தன் நாட்டு ராணுவத்தை உக்ரைனில் இறக்கியுள்ளது. அந்தப் போரே இன்னும் முடியாத நிலையில், அடுத்த போர் என்றால் அதற்கு நிதியுதவியும் படை பலமும் வேண்டும். அதனால், இந்த விஷயத்தில் ரஷ்யா யோசித்தே களமிறங்கும் என்று சொல்லப்படுகிறது.

புடின்
புடின்file image

மேலும், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு முன்பாகவே அந்நாட்டிற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் நிதியுதவும் ஆயுத உதவியும் செய்துவருகின்றன. அப்படியிருக்கையில், நேட்டோவில் இணைந்த பின்லாந்துக்குச் சொல்லவே வேண்டாம். இதனால், ரஷ்யாவின் நிலைமை தற்போது மத்தளத்தின் இரண்டு பக்க அடியாக இருக்கிறது. இதற்கு மூலகாரணமே அமெரிக்காதான் என ரஷ்யா குற்றஞ்சாட்டுகிறது. அதாவது, ரஷ்யாவை அழிக்கும் நோக்கிலேயே அமெரிக்கா செயல்படுவதாகவும், அதற்கு நேட்டோ அமைப்பைக் கையில் வைத்துக்கொண்டு உக்ரைன் போரை வளர்த்துவிடுவதாகக் கூறுகிறது. தவிர, தற்போது பின்லாந்தையும் நேட்டோவுடன் இணைத்தது மட்டுமின்றி, அதன்மூலமும் போர் தொடுக்க அமெரிக்கா முயல்கிறது என ரஷ்யா மேலும் குற்றஞ்சாட்டுகிறது.

அணு ஆயுதத்தில் முதன்மையான நாடாக இருக்கும் ரஷ்யாவை அழித்து, 2வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா முடிசூடா மன்னனாகத் திகழ வேண்டும் என்பதுதான் அதன் எண்ணமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு அண்டை நாடான உக்ரைன் மூலம் ரஷ்யாவின் ரகசிய தகவல்களை அறிந்துகொண்ட அமெரிக்கா, இதுபோன்ற போர் மூலம் அந்நாட்டை அழிப்பதற்கு காய் நகர்த்தி வருகிறது எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பிலிருந்தே அமெரிக்கா - ரஷ்யா இடையே பனிப்போர் இருந்து வந்தது. அது, தற்போதும் புகைந்து வருவது என்பதுதான் உண்மை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவும் சோவியத் யூனியனும் தனித்தனி வல்லரசுகளாக உருவாயின. சோவியத் யூனியனில் ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ​​எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகள் அங்கம் வகித்தன. அந்த சமயத்தில், அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல் ஆகிய 12 நாடுகள், 1949இல், உலகப் போருக்குப் பின்பு மேற்கொள்ளப்பட்ட, ஒப்பந்தங்களின் அடிப்படையில் உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பே நேட்டோ.

நேட்டோ
நேட்டோfile image

The North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கம்தான் NATO. அதாவது வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்பதுதான், இதன் தமிழாக்கம். சோவியத் ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பும் என்றும் சொல்லலாம். இது மேற்கத்திய நாட்டு எல்லைகளுக்கு வெளியே அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முதல் அமைதிப்படையாக கருதப்படுகிறது. இந்த அமைப்பின் ஒப்பந்தத்தின்படி, நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது, பிற நாடுகள் போர் தொடுக்கும் பட்சத்தில், பிற நாடுகளும் உதவிக்கு வர வேண்டும் என்பதுதான் இதன் சாராம்சம். குறிப்பாக, ஐரோப்பாவில் பனிப்போர் காலத்துக்குப் பிந்தைய ரஷ்ய விரிவாக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தையே இந்த அமைப்பு குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

நேட்டோ
நேட்டோnato file image

தொடர்ந்து இந்த அமைப்பில், கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகள் 1952ஆம் ஆண்டும், மேற்கு ஜெர்மனி 1955ஆம் ஆண்டும் இணைந்தன. இதனால், நேட்டோ அமைப்பின் பலம் அதிகரிக்கத் தொடங்கியது. இதன்காரணமாக, ரஷ்யாவுக்கும் அச்சமும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அந்த சமயத்தில்தான் அதாவது, 1955ஆம் ஆண்டு, நேட்டோ கூட்டுப்படைக்கு எதிர்வினையாற்றும் வகையில், கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகள் கூட்டணியுடன் ரஷ்யா வார்சா ஒப்பந்தத்தை ஏற்படுத்தி தனியாக ராணுவ கூட்டணியை அமைத்தது. இதில் போலாந்து, செக்கோஸ்லோவாகியா, அல்பேனியா, பல்கேரியா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, ரொமானியா போன்ற நாடுகள் இடம்பெற்றன. நேட்டோவைப் போன்றே, வார்சா ஒப்பந்தத்திலும் ஒவ்வொரு நாட்டிலும் வெளிநாட்டு ராணுவ அச்சுறுத்தலுக்கு எதிராக மற்ற நாடுகளைப் பாதுகாக்க உறுதியளிக்கப்பட்டது.

நேட்டோ
நேட்டோnato file image

ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் சுயாதீனத்தை மதித்து நிற்கும் என்று ஒப்பந்தம் தெரிவித்தாலும், ஒவ்வொரு நாடும் சோவியத் ஒன்றியத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. ஒப்பந்தத்தை மீறி, சோவியத் யூனியன் அதன் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை கட்டுப்படுத்த முயன்றது. இதனால் சோவியத் யூனியனுக்குள் பிளவு ஏற்பட்டது. அதன்படி, முதல் நாடாக மேற்கு ஜெர்மனி இதிலிருந்து விலகி நேட்டோவுக்குள் இணைந்தது. தொடர்ந்து வார்சா ஒப்பந்தத்திலிருந்தும், சோவியத் யூனியனிலிருந்தும் ஹங்கேரி, செக்கோஸ்லோவாகியா, பல்கேரியா முதலிய நாடுகள் விலகின. இதைத் தொடர்ந்து 1991இல் சோவியத் யூனியன் பலமடையத் தொடங்கியதுடன், அதில் உறுப்பினராகி இருந்த 15 நாடுகளும் தனித்தனி நாடுகளாயின. வார்சா ஒப்பந்தத்தின்படி இணைந்த நேச நாடுகளில் பல, 1991இல் சோவித் யூனியன் பிளவுபட்ட பிறகு ஒப்பந்தத்தில் இருந்து விலகி நேட்டோவில் உறுப்பினர்களாயின.

இப்போது நேட்டோ அமைப்பில் 31 உறுப்பு நாடுகள் (அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, துருக்கி, அல்பேனியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, செ.குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மாண்டினீக்ரோ, நெதர்லாந்து, வடக்கு மாசிடோனியா, ஸ்பெயின், நார்வே, போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, பின்லாந்து) உள்ளன.

இதில் ரஷ்யாவிற்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கோபம் என்னவென்றால், கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, நேட்டோவுக்கு எதிராக ரஷ்யா அமைத்திருந்த வார்சா ஒப்பந்த நாடுகளில், பலவும் நேட்டோ அமைப்பில் சேர்ந்திருப்பதுதான். சோவியத் யூனியன் பிளவுபட்டது போன்ற மற்றொரு பெரிய அடியை ரஷ்யா விரும்பவில்லை. எனவே, நேட்டோ அமைப்பைப் பலப்படுத்தி அதன்மூலம் அமெரிக்கா உள்ளிட்ட போட்டி நாடுகள், எங்கே தங்கள் அதிகார வரம்பிற்குள் வந்துவிடுவார்களோ என்ற அச்சம் ரஷ்யாவுக்கு எப்போதுமே இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com