தேர்தல் அரசியலை அதிரடியாக முன்வைத்த தமிழ் திரைப்படங்கள்

தேர்தல் அரசியலை அதிரடியாக முன்வைத்த தமிழ் திரைப்படங்கள்

தேர்தல் அரசியலை அதிரடியாக முன்வைத்த தமிழ் திரைப்படங்கள்

தேர்தல் களம் சூடுப்பிடிக்க தொடங்கிவிட்டது. அரசியலையும் தமிழ் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஏறக்குறைய கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என மூன்று முதல்வர்களை தமிழ்நாட்டுக்கு கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. இதை மீறி விஜயகாந்த் என்ற எதிர்க்கட்சி தலைவரையும் தமிழ் சினிமாதான் கொடுத்திருக்கிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்ய சபா உறுப்பினர் எனப் பெரிய பட்டியல் இருக்கிறது. 

மக்கள் ஆட்சி:

மாடர்ன் சினிமா வாழ்க்கையில் அரசியல் ரீதியாக அதிகம் பேசப்பட்ட திரைப்படம், ‘மக்கள் ஆட்சி’. 90 களுக்குப் பிற்பகுதியில் வெளியான இந்தத் திரைப்படம் அன்றைய அரசியல் அரங்கத்தை அதிகம் அதிர வைத்தது. இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே எம்.ஜி.ஆரின் குரலில் ஒலித்த, “எங்கள் லட்சியம் ஆளை ஒழிப்பதல்ல; மன்னர் ஆட்சியை ஒழித்து மக்களாட்சியை ஏற்படுத்துவது” என்ற வசனம் முழுப் படத்தின் அர்த்தம் என்ன என்பதை ஆடியன்ஸுக்குப் புரிய வைத்திருந்தது. 

இந்தத் திரைப்படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கிய இருந்தார். படத்தில் அன்றைய அரசியல் நிகழ்வுகள் எல்லாம் காட்சியாக முன்வைக்கப்பட்டன. சேதுபதி கதாப்பாத்திரத்தில் நடிகர் மம்முட்டி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரோஜா நடித்திருந்தார். மக்கள் பிரச்னைகளை முன்வைத்து ‘மக்கள் முன்னேற்ற கழகம்’ எனத் தனி கட்சி தொடங்கும் மம்முட்டி ஒரு பிரச்சார கூட்டத்தின் போது எதிர்க்கட்சியினரால் மேடையிலேயே சுட்டப்படுவார். அதன் பிறகு அந்தச் சம்பவம் அனுதாப அலையாக மாற அதிரடியான முதல்வராக பதவிக்கு வருவார் மம்முட்டி.

ஏறக்குறைய ராஜீவ் காந்தி கொலை சம்பவத்திற்குப் பிறகு வெளியான இந்தத் திரைப்படம் அன்றைய அரசியல் நடப்பை கொஞ்சம் திரைக்கதை பாணியில் மாற்றிக் கூறப்பட்டிருந்தது. கழுத்தில் குண்டு காயம் படும் மம்முட்டியின் கதை என்.ஜி,ஆரின் குண்டடிப் பட்ட கதையை திரையில் மறைமுகமாக பேசியது. அதன்பிறகு அனுதாப அலை மூலம் முதல்வர் ஆவது என்பது ஏறக்குறைய அன்றைய ஜெயலலிதாவின் ஆட்சியை சுட்டிக் காட்டியது. ராஜீவ் இறந்தபோது ஒட்டப்பட்ட பிரச்சார போஸ்டர்களை போலவே மம்முட்டியின் குண்டடிக் காட்சிகள் போஸ்டராக படத்தில் காண்பிக்கப்பட்டன. இந்த ஒற்றுமைகளால் அந்தப் படம் அதிகம் பேசுப்பொருளாக மாறியது. வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டது.

அமைதிப்படை:

இன்றும் இளைய தலைமுறை மத்தியிலும் இந்தப் படம் தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் திரைப்படம். மீம்ஸ் நாயகர்களுக்கு இன்றும் கூட இந்தப் படத்தின் காட்சிகளை மறைமுகமாக உதவி வருகின்றன. இதில் இடம்பெற்றிருந்த சத்யராஜின் அம்மாவாசை கேரக்டர் பெரிய நக்கல் நிறைந்த கதாபாத்திரமாக உருவெடுத்தது. சாதாரண அம்மாவாசையாக இருந்த சத்யராஜ், சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ ஆக வளர்ந்த பின்னனி திரை ரசிகர்களை அதிகம் ஈர்த்தது. 

அரசியல் என்பது எவ்வளவு சூது வாது நிறைந்த இடம் என்பதை நையாண்டி மூலம் இதனை நிரூபித்துக் காட்டியிருந்தார் இப்படத்தின் இயக்குநர் மணிவண்ணன். இரட்டை வேடங்களில் நடித்த சத்யராஜூக்கு இப்படம் அவரது திரை வாழ்க்கையையே திருப்பிப் போடும் அளவுக்கு மாற்றிக் காடியது. ‘அல்லா கொடுப்பது’ என்ற ஒரு சொல்லாடலே தமிழ்நாட்டில் புதிய அர்த்ததுடன் வலம் வர ஆரம்பித்ததும் இந்தப் படத்தின் வெளியீடுக்குப் பிறகுதான். இந்தப் படமும் 90களுக்குப் பின்னால் அதாவது 94ல் தான் வெளியானது.

முதல்வன்:

ஆக்‌ஷன் கிங் ஆக மட்டுமே அதுவரை அறிப்பட்டிருந்த அர்ஜூன் மிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்திருந்த திரைப்படம் ‘முதல்வன்’. ஒரு பத்திரிகையாளரான அர்ஜூன், முதல்வரை பேட்டி எடுக்கப் போய் இறுதியில் அவரே ஒருநாள் முதல்வராக பதவியில் அமரும் கதை. ஒருநாளில் என்ன சாதித்துவிட முடியும் என கணக்குப் போட்டு தன் பதவியை அர்ஜூனுக்கு கொடுக்க முன்வரும் ரகுவரன் அதன் பிறகு சந்திக்கும் விளைவுகளே ஒட்டுமொத்த படம். அதனை திரைக்கதை மூலம் மிக விறுவிறுப்பாக காட்டி இருந்தார் இயக்குநர் ஷங்கர். ஊழல், அதிகாரம் எனப் பல விஷயங்களை முன் வைத்தப்படம் அன்றைய அரசியல்வாதிகளை கொஞ்சம் அசைத்து பார்த்தது உண்மை. 

ஆயுத எழுத்து:

இளைஞர் சக்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அரசியல் திரைப்படம். சூர்யா, மாதவன், சித்தார்த் என இளம் நாயகர்களின் நடிப்பால் இப்படம் அதிகம் கவனத்திற்கு உள்ளானது. இன்பாசேகர், மைக்கல் போன்ற கதாபாத்திரங்கள் திரை விருந்தினர்கள் மத்தியில் பெரும் புகழை சம்பாதித்தது. பொலிட்டிக்கல் த்ரிலர் மூலம் நடப்பு அரசியலை காட்சிப்படுத்திய இந்தப் படம் அரசியல்வாதிகளின் அண்டர்கிரெளன்ட் வாழ்க்கையை எடுத்து பேசியது. மாதவன் அடியாளாகவும் அவனை முன்வைத்து நடக்கும் கொலைக்கு யார் பின்புலம் என்பது போலவும் நீண்ட இப்படம் இருட்டு தனமான இன்னொரு அடிதடி வாழ்வை பார்வையாளனுக்கு புரிய வைத்தது. 2004ல் வெளியான இப்படத்தை மணிரதனம் இயக்கி இருந்தார்.

கோ:

பத்திரிகை மற்றும் அரசியல் இவை இரண்டிற்குமான தொடர்பை வெளிப்படுத்திய திரைப்படம் ‘கோ’. ஜோசியத்தை நம்பி 13 வயது பெண்ணை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவசாராவ் பால்ய விவாகம் செய்ததாக செய்தி வெளியிடுகிறார் கார்த்திகா. இதை கண்டு அலுவலகத்துக்கே வில்லன் கோட்டா சீனிவாசராவ் கலாட்டா செய்கிறார். ஆதாரமில்லாத செய்தி வெளியிட்டதாக மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறது பத்திரிகை. 

இதனால் செய்தியாளர் கார்த்திகா வேலையை இழக்கிறார். ஆனால் கோட்டா சீனிவாசராவ், ரகசியமாய் பால்ய விவாகரம் செய்வதை புகைப்படத்துடன் நிரூபித்து முதல்பக்க செய்தியாக்கி அதனை வெளியிடுகிறார் ஜீவா. இதில் பத்திரிகை மானமும் காக்கப்பட, கார்த்திகா தப்புகிறார். இந்தச் சம்பவம் இருவர் உறவையும் மேலும் நெருக்கமாக்குகிறது. 

இந்தநேரத்தில் மாநிலத்தில் தேர்தல் வருகிறது. இருக்கும் ஊழலாட்சியை அகற்றி, மாற்றத்தைக் கொண்டுவர சிறகுகள் என்ற இளைஞர் பட்டாளம் அஜ்மல் தலைமையில் முயல்கிறது. ஆனால் ஆளும் கட்சி இவர்களுக்கு எதிராக அடக்குமுறையைக் கையாள்கிறது. இதனால் இளைஞர்களுக்கு ஆதரவு பெருகுகிறது. ஒருகட்டத்தில் அஜ்மலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தை குண்டு வைத்து தகர்க்கிறார்கள். இதனால் மக்கள் அனுதாபம் அமோகமாகக் கிடைக்க, ஆட்சியைப் பிடிக்கிறார்கள் இளைஞர்கள். பிரச்சார கூட்டத்தில் அஜ்மல் திட்டமிட்டு குண்டு வைத்த அரசியல் சூழ்ச்சியும் தெரிய வருகிறது.

ஊடகம் மற்றும் அரசியலுக்கு இருக்கும் உறவை நேரடியாக முன்வைத்த திரைப்படம் என்பதால் ‘கோ’ பேசப்பட்டது. இதனால் இயக்குநர் கே.வி. ஆனந்த் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார்.

நோட்டா:

விஜய் தேவரகொண்டாவை தமிழ் சினிமாவிற்கு தந்த திரைப்படம். தமிழக முதல்வரான நாசர் மேல் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. தீர்ப்பு வரும்வரை அவருக்கு பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிர்பந்தம். ஆகவே பப், பார்ட்டி, பாரீன் என ஊர்ச் சுற்றிக்கொண்டிருக்கும் தனது மகனை முதல்வராக்குகிறார் நாசர். 

அதுவரை அரசியல் வாசனையே அறியாத விஜய் தேவரகொண்டாவின் உலகம் ஒரே நாளில் தலைகீழாக மாறுகிறது. இவரின் அறியாமையை எதிர்க்கட்சி பயன்படுத்திக் கொண்டு லாபம் சம்பாதிக்க துடிக்கிறது. இதன் நடுவே ஒரு கொலை முயற்சியும் நடக்கிறது. அது யாருடைய வேலை. முதல்வராக விஜய் தேவரகொண்டா தொடர்வாரா? இல்லையா? எனத் தன் திரைக்கதையை எழுதி சாதித்திருந்தார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர். 

படம் முழுக்க ரிசார்ட் டீலீங், பனாமா கறுப்புப் பணம், தற்காலிக முதல்வர் கூத்துகள், ஆஸ்பத்திரி சி.சி.டி.வி என நடப்பு அரசியலை ஞாபகப்படுத்தும் காட்சியமைப்புகள் என பல நிஜ அரசியல் காட்சிகளை அப்படியே முன்வைத்தது ‘நோட்டா’.


சர்கார்:

ஒரு கார்ப்பரேட் நிர்வாகி கார்ப்பரேட் கிரிமினல் ஆன கதை. தனது ஓட்டை ஒருவர் தவறாக பயன்படுத்தியதால் ஆளும் கட்சி அரசியலையே ஆட்டம் காண வைக்கிறார் சுந்தரராமசாமியான விஜய். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஓட்டுப் போடுவதற்காகவே வரும் ஒரு தொழிலதிபர் தனது அரசியல் உரிமையை நிலைநாட்ட போராடுவதை கதையாக்கி இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும் 49-பி என்ற ஓட்டுரிமையை குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகம் போய்சேர செய்தது இப்படம். இதையடுத்து ஆளும் கட்சி அரசியல் மீதான விமர்சனம், இலவசங்கள் மீதான விமர்சனம் எனப் பல விஷயங்களை முன் வைத்ததால் அதிக எதிர்ப்பை சம்பாதித்தது இந்தப் படம். தீபாவளியை ஒட்டி வெளியான இந்தப் படம் ஆயிரம் வாலா அளவுக்கு தமிழ்நாடே பற்றி எரிந்தது தனிக்கதை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com