திரைக்கதைதான் நாயகன் இவருக்கு! - இந்திய சினிமாவில் ராஜமெளலி தடம் பதித்த 20 ஆண்டுகள்!

திரைக்கதைதான் நாயகன் இவருக்கு! - இந்திய சினிமாவில் ராஜமெளலி தடம் பதித்த 20 ஆண்டுகள்!
திரைக்கதைதான் நாயகன் இவருக்கு! - இந்திய சினிமாவில் ராஜமெளலி தடம் பதித்த 20 ஆண்டுகள்!

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராக உருவெடுத்திருக்கும் ராஜமெளலி, திரைத்துறையில் 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இந்தத் தருணத்தில் அவரின் திரைப்பயணத்தை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

தெலுங்கு சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர். இவரின் அறிமுகப் படம் 'நின்னு சூடலானி'. என்.டி.ஆர் பேரன் என்ற அடையாளங்களுடன் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இப்படம் கண்டது மகா தோல்வி. முதல் படமே தோல்வி அடைந்த விரக்தியில் இரண்டாம் படத்தை வெற்றியாக்க வேண்டிய கட்டயாத்தில் சென்று சேர்ந்தது சீனியர் இயக்குநர் ராகவேந்திர ராவ்விடம். அப்போது மாணவர்களுக்கான கதை ஒன்றை தயார் செய்துவைத்திருந்த ராகவேந்திர ராவ் சில காரணங்களால் அதை இயக்கவில்லை. அதனால் தனது மூத்த உதவியாளர் முடாபள்ளி என்பவரிடம் படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைக்க நினைத்தார். ஆனால், முடாபள்ளி சீரியல் ஒன்றை இயக்கி கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை.

இறுதியாக தனது விருப்பமான, தன்னிடம் கடைசியாக இணைந்த சிஷ்யன் ஒருவரை அழைக்கிறார் ராகவேந்திர ராவ். 28 வயதே ஆன அந்த சிஷ்யன் இந்தக் கதையின் விவாதத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருந்தவர். அவரை இயக்குநராக வைத்தே படம் ஆரம்பிக்கிறது. 'ஸ்டூடன்ட் நம்பர் 1' என்கிற பெயரில் ரிலீஸான படம் ஜூனியர் என்.டி.ஆரை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசேர்த்தது. ஹீரோவாக மக்கள் மத்தியில் நிலைத்தார் ஜூனியர் என்.டி.ஆர். இந்தப் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் ராகவேந்திர ராவ் என்றால், முதன்மைக் காரணம் அவரின் ஆஸ்தான சிஷ்யன்தான். ஆம், அந்த சிஷ்யன்தான் இன்று பலராலும் கொண்டாடப்படும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

'ஸ்டூடன்ட் நம்பர் 1' படம் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராஜமௌலி கைவண்ணத்தால் எடுக்கப்பட்டு, ரூ.10 கோடி வரை வசூலித்தது. முதல் படமே மிகப் பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் கொடுத்தது. வழக்கமாக, இந்த அளவுக்கு முதல் படத்தை ஹிட் கொடுக்கும் இயக்குநர்களுக்கு திரையுலகில் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்படும். ஆனால், ராஜமௌலி விஷயத்தில் அப்படி ஏதும் நடைபெறவில்லை. சிறுவயதில் இருந்து சினிமா மீதான கற்பனையில் வளர்ந்து வந்தவர் ராஜமௌலி.

அவரின் தந்தை தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் கதை சொல்லல்களை கேட்டு, அதற்கு தனது கற்பனைக் கோட்டைகளை கட்டி வளர்ந்தவர், முதல் பட வெற்றியால் அந்தக் கற்பனை கோட்டைகளை மக்களுக்கு காண்பித்துவிடலாம் என்ற ஆசையில் இருந்தவருக்கு அப்படி எதுவும் விரைவாக நடக்கவில்லை. மாறாக, அவர் வாய்ப்பு தேடிச் சென்ற இடங்களில் எல்லாம் நிராகரிப்புகளும், உதாசினங்களுமே அவருக்கு வெகுமதியாக கிடைத்தன. அதற்கு காரணம், முதல் படத்துக்கான அங்கீகாரம் எல்லாமே அவரின் குருநாதர் ராகவேந்தி ராவுக்கு சென்றதுதான்.

இரண்டாம் வாய்ப்பு கிடைக்க, கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆனது. இந்த முறை ஜூனியர் என்.டி.ஆர் நேரடியாக அழைத்து வாய்ப்பு கொடுத்தார். தனக்கு வாய்ப்பு கிடைக்காத காலத்தில் பாலகிருஷ்ணாவை மனதில் வைத்து எழுதிய 'சிம்ஹாத்ரி' கதைக்கு ஜூனியர் என்.டி.ஆரை வைத்து உயிர்கொடுத்தார். 2003-ல் வெளியாகி பக்கா மாஸ் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட 'சிம்ஹாத்ரி' வசூலித்தது 30 கோடி ரூபாய். இந்த முறை மொத்த திரையுலகமும் ராஜமௌலி பெயரை உரக்கச் சொன்னது.

இதன்பின் தெலுங்கு திரையுலகில் ராஜமௌலியின் ராஜ்ஜியம்தான். 'சிம்ஹாத்ரி'க்கு பிறகு 2004-ல் 'ஷை', 2005-ல் 'சத்ரபதி', 2006-ல் 'விக்ரமாகுடு', 2007-ல் 'எமதொங்கா', 2009-ல் 'மகதீரா', 2010-ல் 'மரியாதை ராமண்ணா', 2012-ல் 'ஈகா' (தமிழில் நான் ஈ), 2015 மற்றும் 2017-ல் பாகுபலியின் இரண்டு பாகங்கள் என இதுவரை 9 படங்கள் இயக்கிவிட்டார். அனைத்துப் படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் கோடிகளை சொல்லி அடித்தன. அத்தனைப் படங்களும் 100 நாட்களுக்கு மேல் ஓடின. அவரின் வெற்றிக்கு 'பாகுபலி' படமே சான்று.

தான் இயக்கிய 11 படங்களையும் வெற்றியாக கொடுத்த ஒரே ஒரு இயக்குநர் ராஜமௌலி மட்டுமே. இத்தனைப் படங்களின் வெற்றிக்கு காரணம் அவரின் திரைக்கதையும், அவர் எடுக்கும் ரிஸ்க்கும்தான். பெரும்பாலும் இவர் படத்தின் கதைகள் அவரின் தந்தையால் கூறப்பட்டவையே. தெலுங்கில் பிரபல கதாசிரியராக பல திரைப்படங்களுக்கு கதை எழுதியிருந்தாலும், விஜயேந்திர பிரசாத் சொன்ன கதை மற்ற இயக்குநர்களால் முழுமை பெறாததை கவனித்து, தானும் அப்படி செய்யக்கூடாது என்பதற்காக திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தும் பழக்கமுடையவர் ராஜமௌலி. இந்தப் பழக்கம் அவரின் படங்களில் தெளிவாகத் தெரியும். தான் எடுத்துக்கொண்ட 11 கதையையும், வெவ்வேறு களங்களைச் சார்ந்து அமைத்து வித்தியாசத்தைக் காண்பித்ததிருக்கிறார்.

இதேபோல் ரிஸ்க் எடுப்பதில் சற்றும் தயங்காதவர் ராஜமௌலி. தனது மூன்றாவது படத்திலேயே ரிஸ்க் எடுத்தவர். 2004-ல் வெளியான 'ஷை' தான் அவரின் மூன்றாவது படம். ரக்பி விளையாட்டுதான் கதைக்களம். இந்திய ரசிகர்களுக்கு பெரிதாக பரிச்சயம் இல்லாத விளையாட்டு இது. இந்த ரக்பி விளையாட்டை மையமாக வைத்து படம் எடுக்க துணிந்ததுடன், நிதின் என்ற பிரபலமில்லாத ஹீரோவை ரிஸ்க் எடுத்து நாயகனாக்கினார். ரக்பி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உலகின் சிறந்த மூன்று படங்களில் 'ஷை' ஒன்றாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

இதே முயற்சிதான் 2010-ம் ஆண்டு வெளியான 'மரியாத ராமண்ணா'விலும் செய்திருந்தார். தெலுங்கில் அதுவரை காமெடியனாக நடித்த சுனிலை ஹீரோவாக்கி ரிஸ்க் எடுத்தார். சுனில்தான் ஹீரோ என்றதும், மொத்த திரையுலகமும் அவரை ஏளனம் செய்தது. நன்றாக சென்று கொண்டிருக்கும் அவரின் மார்க்கெட்டை அவரே சரித்துகொள்கிறாரா என்று நேரடியாகவே விமர்சித்தார்கள். ஆனால் விமர்சனங்களை நொறுக்கி அதே சுனிலை வைத்து மெகா ஹிட் கொடுத்தார். 14 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 30 கோடி ரூபாய் வசூலித்தது.

இதுபோன்ற ரிஸ்க் எடுக்க காரணம் தனது திரைக்கதை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான். அதனால்தான் என்னவோ இன்று இந்தியாவின் நம்பர் 1 இயக்குநர் என்ற பெயருக்கு உரித்தாக்கி இருக்கிறார். 'பாகுபலி' என்ற பிரமாண்ட வெற்றியால் மொத்த இந்திய திரையுலகமும் அவரின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறது. ரஜினி முதல் அமீர்கான் வரை தங்களை வைத்து படம் இயக்க சொல்லி ராஜமௌலியை அணுகி இருக்கின்றனர். ஆனால், இந்த வெற்றியையும், புகழையும் தனது தலைக்கேற்றாமல் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் பிசியாக இருக்கும் ராஜமௌலி திரைத்துறையில் 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com