வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பில் ராகேஷ் திகாயத்தின் பங்கு மிகப்பெரியது - யார் அவர்?

வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பில் ராகேஷ் திகாயத்தின் பங்கு மிகப்பெரியது - யார் அவர்?

வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பில் ராகேஷ் திகாயத்தின் பங்கு மிகப்பெரியது - யார் அவர்?
Published on

வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதற்கு ராகேஷ் திகாயத்தின் முயற்சிகள்தான் காரணமாக கூறப்படுகிறது. யார் அந்த ராகேஷ் திகாயத் பார்ப்போம்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும், பிற மாநிலங்களிலும் விவசாயிகள் நடத்திய போராட்டம், நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றது. குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்திய நிலையில், டிராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது.

'' டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்னர். இதையடுத்து விவசாயிகள் அனைவரும் பஞ்சாப்பிற்கு திரும்ப வேண்டும் என அப்போதைய முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கேட்டுக் கொண்டார். ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் சங்கம், பாரதிய கிசான் யூனியன் ஆகியவையும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதையடுத்து, டெல்லி- உத்தரப் பிரதேசத்தின் முக்கிய எல்லையான காசிப்பூரில் போராடி வந்த பெரும்பாலான விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். இதனால், இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

ஆனால், பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் மனம் தளரவில்லை. ஜனவரி 28 ஆம் தேதி ஊடகங்களை சந்தித்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேனே தவிர, சட்டங்களை வாபஸ் பெறாத வரை போராட்டக் களத்தில் இருந்து விலகமாட்டேன் என மிகுந்த உணர்ச்சி பெருக்குடன் கண்ணீர்விட்டபடி பேசினார்.

அவரது இந்த பேச்சுதான், விவசாயிகளின் போராட்டக் குணத்தை வேகப்படுத்தியது. வீடு திரும்பிக் கொண்டிருந்த அனைவரும் மீண்டும் போராட்டக் களத்திற்கு வரத் தொடங்கினார்கள். முன்பை விட மிக அதிகமான கூட்டம் திரண்டு, போராட்டம் அசுர பலம் பெற்றது.

உத்தரப் பிரதேசத்தின் முகாபர் நகரில் உள்ள சிசெளலி என்ற கிராமத்தில் பிறந்த ராகேஷ் திகாயத் பி.ஏ.பட்டதாரி. இவரது தந்தை மகேந்திரசிங் திகாயத்தும் பாரதிய கிசான் யூனியனின் தலைவராக இருந்தவர். இதனால், விவசாயிகளுடன் இவரது குடும்பத்திற்கு மிகுந்த நெருக்கமான உறவும், செல்வாக்கும் இருந்தது.

விவசாயிகள் நலனுக்காக அரசியலில் குதிப்பதற்கான முயற்சிகளையும் திகாயத் அவ்வப்போது எடுத்தார். ஆனால், தேர்தல் அரசியல் அவருக்கு ஒத்து வரவில்லை. 2007-ல் உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அரசியலில் சாதிக்க முடியாவிட்டாலும், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெறும் அளவுக்கு, விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தை வெற்றி பெற வைத்து விவசாய சங்க தலைவராக சாதித்திருக்கிறார் ராகேஷ் திகாயத்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com