kerala traditional food
kerala traditional foodTwitter

ஆப்பம் முதல் பீஃப் வறுவல் வரை... கேரளாவுக்கு சென்றால் மிஸ் பண்ணக்கூடாத 7 பாரம்பரிய உணவுகள்!

நீங்கள் கேரளாவுக்கு சென்றால் கண்டிப்பாக சுவைத்துப் பார்க்க வேண்டிய 7 சிறந்த பாரம்பரிய உணவுகள் இதோ..

கேரள உணவுகளின் சுவை பற்றி உலகத்திற்கே தெரியும். இங்குள்ள உணவுகளில் அரேபிய, மலபாரி மற்றும் பிரெஞ்ச் தேசத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இவற்றோடு கேரளாவின் பாரம்பரிய சுவையும் கலந்து உணவுகளை தனித்துவமாக்குகிறது. மேலும் இங்கு கிடைக்கும் நறுமணமும் சுவையும் கொண்ட பல்வேறு வகையான இனிப்புகளும் காரமான உணவு பதார்த்தங்களும் உங்களை திக்குமுக்காடச் செய்யும். திருவிழா காலங்களில் பரிமாறப்படும் பாரம்பரிய சைவ உணவுகள் முதல் பிரபலமான அசைவ உணவுகள் வரை, கேரள உணவுகளின் பட்டியல் மிகவும் நீளமனது.

கேரளாவின் பிரபலமான மற்றும் பாரம்பரியமான சிறந்த 7 உணவுகள் எது என உங்களுக்கு தெரிய வேண்டுமா? இதோ உங்களுக்காக…

எரிசேரி (பருப்பு & பூசணிக்காய் குழம்பு)

கேரள மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாவாசிகளும் விரும்பக்கூடிய உணவாக இருக்கிறது எரிசேரி. பூசணிக்காய் மற்றும் கடலை மாவை பயன்படுத்தி இந்த அற்புதமான குழம்பு செய்யப்படுகிறது. பலர் இதில் வாழைக்காய், கருனைக் கிழங்கையும் சேர்க்கிறார்கள். பல வகையான காய்கறிகள், தேங்காய், சீரகம், மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்கள் கலந்து இவை செய்யப்படுகின்றன. சாதத்தோடு கலந்து இதை சாப்பிடும் போது அவ்வளவு அருமையாக இருக்கும்.

கேரளாவின் பாரம்பரியமான உணவாக கருதப்படும் எரிசேரியை சமைப்பதை கேரளாவில் உள்ள அனைவரும் பெருமிதமாக நினைக்கிறார்கள். ஓணப் பண்டிகையின் போது தயாரிக்கப்படும் சதய விருந்தில் முக்கிய உணவாக எரிசேரி பரிமாறப்படுகிறது.

இடியாப்பமும் கறியும்
இடியாப்பமும் கறியும்Picasa

இடியாப்பமும், கறியும்

கேரளாவின் சுவையான உணவுகளில் இடியாப்பமும் ஒன்றாகும். அரிசி மாவு, உப்பு மற்றும் தண்ணீர் கலந்து செய்யப்படும் இந்த உணவு மிகவும் ருசியானது. அரிசி மாவை இழை, இழையாக சுற்றி அடுக்கி வைப்பது இடியாப்பத்திற்கு ஒரு அழகியலை தருகிறது. இடியாப்பத்தோடு முட்டைக் கறியை சேர்த்து சாப்பிடுவது மிகவும் நன்றாக இருக்கும். இதை “நூலாப்பம்” என்றும் கேரளாவில் அழைக்கிறார்கள்.

பருப்பு குழம்பு
பருப்பு குழம்பு

பருப்பு குழம்பு

பருப்பு குழம்பில் அப்படி என்ன பிரமாதம் இருக்கப் போகிறது என நீங்கள் நினைக்கலாம். நாம் வீட்டில் செய்யும் சாதாரண பருப்பு குழம்பு என்று மட்டும் இதை நிராகரித்துவிடாதீர்கள். இந்த பருப்பு குழம்பில் நெய் கலந்து, மிளகாய் வத்தல்களும், நறுமணம் நிறைந்த மசாலா பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இதை ருசித்துப் பார்க்கும் போது, நாம் வீட்டில் வழக்கமாக சாப்பிடும் பருப்பு குழம்பு இல்லை என உங்களுக்கே தெரிந்துவிடும்.

சதய விருந்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பருப்பு குழம்பை, சாதத்தில் குழைந்து சாப்பிடும் போது அவ்வளவு ருசியாக இருக்கும். அடுத்த முறை கேரளாவிற்கு சென்றால் பருப்பு குழம்பை சாப்பிட மறந்துவிடாதீர்கள்.

ஆப்பம்
ஆப்பம்

ஆப்பமும் தேங்காய் பாலும்

உங்களுக்கு பிடித்தமான உணவு எது என கேரளாவில் உள்ள மக்களிடம் கேட்டுப் பாருங்கள்? பெரும்பாலானோர் ஆப்பம் என்றுதான் கூறுவார்கள். நடுவில் கொஞ்சம் தடிமனாகவும் ஓரத்தில் முறுகலாகவும், மெல்லியதாகவும் தோசை போல் இருக்கும். இந்த ஆப்பத்தை, அரிசி பேன்கேக் என்று கூட சொல்லலாம். ஆப்பத்தோடு எதை சேர்த்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். ஆப்பத்தை தேங்காய் பால் தொட்டு சாப்பிடுவது அருமையான காம்பினேஷனாக இருக்கும். இதுதவிர காய்கறி அவியல் அல்லது நல்ல காரமான அசைவ கறிகளை தொட்டும் சாப்பிடலாம்.

புட்டும் கடலை கறியும்
புட்டும் கடலை கறியும்

புட்டும் கடலை கறியும்

பெயரே என்ன அழகாக இருக்கிறது..?. வெறும் புட்டு தானே என நீங்கள் நினைத்து விடக் கூடாது. சாப்பிட்டு பார்த்தால் தான் இதன் சுவை தெரியும். கேரளாவின் பிராதானமான காலை உணவாக புட்டு இருக்கிறது. வழக்கமாக புட்டுடன் கேரள ஸ்டைலில் செய்த கடலை கறி அல்லது கொண்டைக்கடலை கறி பரிமாறப்படும்.

வறுத்த நாட்டு கோழி

கேரளாவின் பிரபலமான உணவுகளைப் பற்றி பேசும்போது, அங்குள்ள அசைவ உணவுகள் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? பூண்டு, வெங்காயம், வினீகர், கொத்தமல்லி, மிளகாய் தூள் ஆகியவை கலந்து சற்று தூக்கலான காரத்துடன் செய்வதுதான் வறுத்த நாட்டுக் கோழி. கேரளாவின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய முறையில் இது வாழை இலையில் வைத்து பரிமாறப்படும். ஃபிரைட் சிக்கனின் ருசியைப் பற்றி அனைவருக்குமே தெரியும். இந்த காரமான வறுத்த நாட்டுக் கோழியின் சுவை, உங்களை அடுத்த லெவலுக்கு அழைத்துச் செல்கிறது.

கேரள இறால் குழம்பு
கேரள இறால் குழம்பு

கேரள இறால் குழம்பு

கேரளாவைச் சுற்றிலும் கடல் தான் இருக்கிறது. அகவே இங்கு கடல் உணவுகளுக்கு பஞ்சமே இல்லை. கேரளாவின் மசாலா நறுமணம் கலந்து பல்வேறு வகையான கடல் உணவுகள் இங்கு கிடைக்கின்றன. கடல் உணவுகளை விரும்பி உண்பவர்களுக்கு கேரளா சொர்க்கபுரியாக திகழும். மிளகு, வத்தல் தூள் ஆகியவை கலந்து செய்யப்படும் இறால் குழம்பில் வெல்லமும் தேங்காய்ப் பாலும் சேர்க்கப்படுவதால், இதன் சுவை தேவாமிர்தமாக இருக்கிறது. சாதம் அல்லது சூடான சப்பாத்திக்கு இது சிறந்த காம்பினேஷனாக இருக்கும்.

பீப் ஃப்ரை

கேரளாவில் உள்ள அசைவ உணவகங்களில் பீப் ஃப்ரை இல்லாமல் இருக்காது. நீங்கள் ஒரு அசைப் பிரியர் என்றால் அதை ருசிக்க தவறாதீர்கள். மசாலா, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கமகம வாசனையுடன் உங்கள் டேபிளுக்கு வரும் பீப் ஃப்ரை நிச்சயம் உங்கள் நாவை சுண்டி இழுக்கும். குறிப்பாக பீப் வறுவலை பரோட்டாவுடன் சேர்த்து சாப்பிட்டவர்களுக்கு தெரியும் அதன் ருசியோ ருசி. சாப்பிட்டப் பின் நாவில் ஒட்டிய பீப் ஃப்ரையின் ருசி அடுத்தமுறை சாப்பிடும் வரை நினைவில் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com