'லிவிங் டூகெதர்' பிரச்னைக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாடமுடியாது – தீர்ப்பு குறித்த பார்வை

'லிவிங் டூகெதர்' பிரச்னைக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாடமுடியாது – தீர்ப்பு குறித்த பார்வை
'லிவிங் டூகெதர்' பிரச்னைக்கு குடும்பநல நீதிமன்றத்தை நாடமுடியாது – தீர்ப்பு குறித்த பார்வை

திருமணம் செய்யாமல் ' லிவிங் டுகெதர் ' முறையில் சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்காக குடும்ப நல நீதிமன்றத்தை நாட எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை பார்ப்போம்…

கோவை - இடையர் பாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், ஜோசப் பேபி என்பவரை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்ததாகவும், 2016 ஆம் ஆண்டிலிருந்து ஜோசப் பேபி தனியாக வசிப்பதால் தங்களை சேர்த்து வைக்குமாறும் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், தாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஜோசப் பேபி தாக்கல் செய்த மனுவையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கலைச்செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பணப் பரிவர்த்தனை குறித்த பிரச்னைக்காகவே கலைச்செல்வி வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தினர்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல விவாதங்களை எழுப்பியுள்ள சூழலில், இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் ஆதிலெஷ்மி, “நமது நாட்டில் குடும்பநல நீதிமன்றங்களுக்கான சிறப்பு சட்டம் – 1984 இன் அடிப்படையில் எல்லா இடங்களிலும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. அவரவர் மதத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திருமண அமைப்பின் கீழ் சட்டரீதியாக செய்யப்பட்ட திருமணங்களில் எழக்கூடிய பிரச்னைகளை தீர்க்க இந்த நீதிமன்றங்கள் வழிசெய்கிறது.

திருமணத்தில் சிக்கல் எழும்போது குடும்ப நல நீதிமன்றத்தை அணுகலாம். அப்போது அதற்கான ஆதாரங்களாக, திருமண பத்திரிகை, பதிவு சான்றிதழ், புகைப்படங்களும், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இல்லாதவர்கள் “ லிவிங் டூ கெதரில் இணைந்து வாழ்பவர்கள்” என்று பார்க்கப்படுவார்கள். இதுபோல இணைந்து வாழ்பவர்களுக்கு இந்தியாவில் எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை என்பதுதான் உண்மை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் எந்த ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதை கேள்வி கேட்கவோ, தடுக்கவோ முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது வயதுவந்த தனிப்பட்ட நபர் எந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்தாலும் தடுக்க முடியாது. ஆனால் அந்த வாழ்க்கை முறைக்காக சட்டத்தில் பாதுகாப்பு கோருவதற்கு சட்டத்தில் இன்று வரையிலும் எந்த அங்கீகாரமும் இல்லை.

திருமண பந்தத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே லிவிங் டூகெதர் வாழ்க்கை முறையை சிலர் தேர்ந்தெடுக்கிறார்கள், ஆனால் அதிலும் பல சிக்கல்கள் எழுகிறது. இதில் எழும் சிக்கல்கள் அனைத்தும் இந்த வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் தலையிலேயே விழுகிறதே தவிர, இதனை பாதுகாக்க எந்த சட்ட வாய்ப்பும் இல்லை” எனத் தெரிவித்தார்

லிவிங் டூகெதர் முறையில் வாழ்பவர்கள் குடும்பநல நீதிமன்றத்தை அணுக இயலாது என்றால், அவர்களுக்கு உள்ள சட்ட வாய்ப்புகள் என்னவென்று விவரிக்கிறார் வழக்கறிஞர் ஆதிலெஷ்மி, “ திருமணமாகாமல் இணைந்து வாழ்பவர்களை இங்கு எந்த சட்டமும் பாதுகாக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. ஆனால் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்க 2005 ஆம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதில் பாதிக்கக்கூடிய பெண்கள், அவர்கள் இணைந்து இருக்கக்கூடிய எந்த உறவுமுறையாக இருந்தபோதிலும், அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் உள்ளது.

எனவே லிவிங் டூகெதர் முறையில் இணைந்து வாழ்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க, குடும்பநல நீதிமன்றத்தை அணுகாமல், குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாக்க தங்கள் இணையர் மீது இதற்கான பாதுகாப்பு அலுவலரை அணுகலாம். இதன் மூலமாக பாதுகாப்பு உத்தரவு, இல்லத்தில் வாழக்கூடிய உத்தரவு, ஜீவனாம்சம் உள்ளிட்டவற்றை இணைந்து வாழும் நபரிடமிருந்து பெண்கள் பெறலாம், ஒருவேளை இதில் அவர்களுக்கு தீர்வு கிடைக்கலாம். ஆனால், அப்போதும் அவர்களின் இணைந்து வாழக்கூடிய வாழ்க்கையை அங்கீகரிக்க மாட்டார்கள். இந்த சட்டம் பெண்களுக்குத்தான் பொருத்தும், ஆண்களுக்கு பொருந்தாது.

திருமணமாகாத இருவர் லிவிங் டூகெதர் வாழ்க்கையை நீண்ட நாட்களாக வாழ்ந்து, அவர்களுக்கு குழந்தை, சொத்துகள் உள்ளிட்டவை இருக்கும் பட்சத்தில், அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் வாழ்க்கையை அங்கீகரிக்க அணுகலாம். இந்த வாழ்க்கை வாழ்பவர்கள் குடும்ப அட்டை, இணை வங்கிக்கணக்கு போன்றவற்றை ஆவணங்களாக காண்பிக்கலாம். லிவிங் டூகெதர் வாழ்க்கை முறை தொடர்ந்து அதிகரித்து வண்ணமே உள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்பவே சட்டங்கள் இயற்றப்படுகிறது, எனவே இப்போது இல்லையென்றாலும் வரும் காலங்களில் இந்த உறவுமுறையை பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்படலாம்” என்கிறார்

'லிவிங் டூகெதர்' – இதுகுறித்து இதுவரை வந்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள்:

குஷ்பு வெர்சஸ் கன்னியம்மாள் என்ற வழக்கில் "அரசியல் சாசன பிரிவு 21 இன் கீழ் 'லிவிங் டூகெதர்' என்பது தனிநபரின் விருப்பத்துக்கு உரியது, எனவே அதனை சட்டவிரோதமாக அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திரா சர்மா வெர்சஸ் வி.கே.வி சர்மா என்ற வழக்கில், "ஏற்கனவே திருமணமானவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் தம்பதிக்கான சலுகைகள் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டது.

தன்னுலால் வெர்சஸ் கணேஷ்ராம் என்ற வழக்கில், "லிவிங் டூகெதர் வாழ்க்கை வாழ்பவர்கள் திருமணம் செய்யும் முடிவில் இருந்தால் இருவரும் சொத்துகளைப் பெற தகுதியுடையவர்கள் " என்று தெரிவிக்கப்பட்டது.

பாலசுப்ரமணியன் வெர்சஸ் சுருட்டையன் என்ற வழக்கில், "லிவிங் டூகெதர் உறவில் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் முறையற்ற குழந்தைகள் அல்ல " என்ற தீர்ப்பு வழக்குப்பட்டது, இந்த தீர்ப்பு மற்றொரு வழக்கிலும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com