'டீன் ஏஜ் பெண்களுக்கு தீங்கு தரும் இன்ஸ்டாகிராம்' - கண்டறிந்த உண்மைகளை மறைத்த ஃபேஸ்புக்

'டீன் ஏஜ் பெண்களுக்கு தீங்கு தரும் இன்ஸ்டாகிராம்' - கண்டறிந்த உண்மைகளை மறைத்த ஃபேஸ்புக்
'டீன் ஏஜ் பெண்களுக்கு தீங்கு தரும் இன்ஸ்டாகிராம்' - கண்டறிந்த உண்மைகளை மறைத்த ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் மீதும், அதன் துணை சேவைகள் மீதும் தொடர்ந்து கூறப்பட்டு வரும் விமர்சனங்கள் இதுவரை உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லை எனில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் அணுகுமுறை தொடர்பாக அண்மையில் வெளியாகி இருக்கும் தகவல் நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக ஃபேஸ்புக்கின் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் மீது மோகம் கொண்டவர்களை நிச்சயம் இரட்டிப்பு அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

இன்ஸ்டாகிராம் சேவை டீன் ஏஜ் பெண்கள் மீது தீங்கான தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனும் தகவலும், ஃபேஸ்புக் இதை தனது சொந்த ஆய்வு மூலம் அறிந்திருந்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைத்துள்ளது என்பதுதான் அந்த திடுக்கிடும் தகவல்.

சமூக ஊடக உலகை நெருங்கி கவனித்து வருபவர்களுக்கு இன்ஸ்டாகிராமின் எதிர்மறை தாக்கம் பற்றி நன்கு தெரிந்திருக்கும். புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் இளைய தலைமுறை மீது மிகுந்த தாக்கம் செலுத்தி வருவது மட்டும் அல்லாமல், பல விஷயங்களில் இந்த தாக்கம் எதிர்மறையாக அமைவதாக தொடர்ந்து வல்லுநர்களால் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமின் மோசமான தாக்கம் குறித்து எண்ணற்ற ஆய்வுகள் வாயிலாகவும் தெரியவந்துள்ளன. இன்ஸ்டாவில் பகிரப்படும் அழகிய புகைப்படங்கள் கச்சிதமான உடல்வாகு தொடர்பான அழுத்தத்தை உண்டாக்கி, அதன் காரணமாக டீன் ஏஜ் பெண்கள் சரியாக சாப்பிடாமல் உணவு கோளாறு பாதிப்புக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தவிர, இன்ஸ்டாவில் ஆதிக்கம் செலுத்தும் டீன் ஏஜ் பெண்களின் வாங்கும் பழக்கம் உள்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கம் செலுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.

இத்தகைய ஆய்வுகளை எல்லாம் ஃபேஸ்புக் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்த நிலையில், அதன் சொந்த ஆய்வே இதுபோன்ற அதிர்ச்சியான உண்மைகளை உணர்த்தியிருப்பதும், ஆனால் ஃபேஸ்புக் இந்த ஆய்வு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதோடு, ஆய்வு முடிவுகளை வெளியிடாமல் ரகசியம் காப்பதும் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் தாக்கம் குறித்து அறிய ஃபேஸ்புக் தனது நிறுவனத்துக்குள் நடத்திய ஆய்வில் இளம் தலைமுறையினர் இன்ஸ்டாகிராமால் தங்கள் கவலை மற்றும் மனச்சோர்வு அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். உடல் தொடர்பான கவலையை இன்ஸ்டாகிராம் அதிகமாக்குவதாக பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற விகிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் தரப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தொடர்பாக கசிந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவின் 'வால்ஸ்டிரீட் ஜர்னல்' நாளிதழ் இந்த உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

2019-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு பயனர் குழு ஆய்வு, ஆன்லைன் ஆய்வு மற்றும் நாட்குறிப்பு ஆய்வு ஆகியவை மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு மிகவும் விரிவான முறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 32 சதவீதத்தினர் தங்கள் உடல் பற்றி மோசமாக நினைத்துக்கொண்டிருந்த நிலையில் இன்ஸ்டாகிராம் அதை மேலும் தீவிரமாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் இளம் பெண்களின் மனநலத்திற்கு தீங்காக அமைவதை வெளிப்படுத்தும் இந்த ஆய்வு முடிவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் காட்சி விளக்கமாகவும் அளிக்கப்பட்டதாக அந்தச் செய்திக் கட்டுரை தெரிவிக்கிறது.

மேலும், சமூக ஒப்பீடு தொடர்பாக இளம் பெண்கள் மத்தியில் ஏற்படும் பிரச்னை இன்ஸ்டாகிராமில் மிகத் தீவிரமாக இருப்பதாகவும், மற்ற மேடைகளில் இவ்வாறு இல்லை என்றும் ஃபேஸ்புக் அறிந்துள்ளது.

ஆனால், இன்ஸ்டாகிராம் இளம் பெண்கள் ஆரோக்கியத்தின் மீது இத்தகைய தீங்கான விளைவுகளை ஏற்படுத்துவதை அறிந்திருந்தும் கூட ஃபேஸ்புக் இது தொடர்பாக தனது சேவையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, இந்த ஆய்வை ரகசியமாகவே வைத்திருக்கிறது.

இன்ஸ்டாகிராமின் தீமைகள் குறித்து சொந்த ஆய்வு மூலம் நன்கு அறிந்திருந்தும் கூட ஃபேஸ்புக் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பயனர்கள் நலனை விட நிறுவனம் லாபத்தையே முக்கியமாக கருதுவதை உணர்த்துவதாக, இன்ஸ்டாகிராம் தீங்கு குறித்து எடுத்துரைத்து வரும் வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிறப்பான வாழ்க்கை மற்றும் கட்டுடல் தொடர்பான புகைப்படங்களால் தொடர்ந்து சூழப்பட்டிருப்பது உங்கள் வாழ்க்கை மற்றும் தோற்றம் குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதன் மீது மிகப்பெரிய தாக்கம் செலுத்தும் என எம்மா தாமஸ் எனும் வல்லுநர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் சேவைகள் தொடர்பான மாற்றத்திற்காக போராடி வரும் '5 ரைட்ஸ்' அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர், ஃபேஸ்புக் மற்றும் பொதுவாக தொழில்நுட்பத்துறை குழந்தைகள் ஆரோக்கியத்தை எத்தனை பொறுப்பற்ற முறையில் அணுகுகின்றன என்பதை ஃபேஸ்புக்கின் சொந்த ஆய்வே அம்பலப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் சேவையை 13 வயதுக்கு குறைவானர்கள் பயன்படுத்த முடியாது எனும் நிலையில், சிறார்களுக்கு என தனியே இன்ஸ்டாகிராம் சேவையை அறிமுகம் செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டிருப்பது கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில், இந்த திடுக்கிடும் ஆய்வு முடிவுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com