கொரோனா கால மாணவர் நலன் 2 - கண் சிமிட்டுகிறார்களா உங்கள் குழந்தைகள்?

கொரோனா கால மாணவர் நலன் 2 - கண் சிமிட்டுகிறார்களா உங்கள் குழந்தைகள்?
கொரோனா கால மாணவர் நலன் 2 - கண் சிமிட்டுகிறார்களா உங்கள் குழந்தைகள்?

கொரோனா பேரிடர் காலம் என்பது குழந்தைகளின் வாழ்க்கையை மொத்தமுமாக ஆன்லைன் உலகமாக மாற்றிய காலகட்டம். அந்த அளவுக்கு நண்பர்களுடன் பேசுவது, விளையாடுவது, படிப்பது போன்ற குழந்தைகளின் அடிப்படை உலகமே மொபைல் மற்றும் டெஸ்க்டாப் திரைகளுக்குள் சுருங்கிவிட்டது. இப்படி திரைகளையே பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் கண் நலன் குறித்து 'கொரோனா கால மாணவர் நலன்' தொடரின் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். இதுபற்றி சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாலி லகானி நம்முடன் சில தகவல்களை பகிர்ந்துகொள்கிறார்.

"சமீபகாலமாக கண் சார்ந்த பிரச்னைகளுக்காக எங்களிடம் வரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக கண் வலி, கண் வறட்சி, தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளால் நிறைய குழந்தைகள் அவதிப்படுகின்றனர். சமீபத்திய கருத்தாய்வு ஒன்றில், 70% பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 4 மணிநேரம் எலெக்ட்ரானிக் சாதனங்களில் செலவிடுவதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவது, இயற்கையான சூழலை பார்ப்பது, ரசிப்பது போன்றவை பெருமளவில் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் மிகப் பொதுவான கண் பிரச்னைகள் சிலவற்றை நான் சொல்கிறேன்.

* கிட்டபார்வை: மொபைலை எப்போதும் கண்ணுக்கு அருகிலேயே வைத்து விளையாடும் குழந்தைகளுக்கு இப்படியான சிக்கல்கள் உருவாகிறது. ஏற்கெனவே கிட்டப்பார்வை இருப்போருக்கு, சிக்கல் இன்னும் அதிகமாகக்கூடும். இப்பிரச்னைக்கான அறிகுறிகளாக அதிகம் கண்ணை மூடுவது, அடிக்கடி கண்ணைத் தேய்ப்பது, பார்வையில் மங்கலாக இருப்பது போன்றவை இருக்கும்.

* கண் வலி, கண் வறட்சி, தலைவலி: திரைகளை பார்க்கும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, இவை மூன்றும் அதிகரிக்கும். திரைகளை அதிகம் பார்க்கும் குழந்தைகள் கண் சிமிட்டல் குறைவாவது இந்தப் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னைக்கான அறிகுறியாக வறண்ட கண்களும், வலியும் இருக்கும். சில நேரங்களில் கண்ணிலிருந்து நீர் வடிதல், மங்கலான பார்வை, கண்ணை சுற்றி எரிச்சல், திரையை பார்க்காத நேரத்தில் அதிகப்படியான எரிச்சல் போன்றவை இருக்கும்.

* தெளிவற்ற பார்வை: ஏற்கெனவே கண்ணாடி அணிந்துவந்த குழந்தைகள், கொரோனா காலத்தில் அதைத் தவிர்க்கும் சூழலும், ரெகுலர் கண் செக்-அப் செல்வதை தவிர்க்கும் சூழலும் அதிகமாக இருந்து வருகிறது. இப்படி கண் பார்வை குறைபாடு இருந்து, கண்ணாடி அணியாமல் நீண்டநேரம் இருப்பதால், தெளிவற்ற பார்வை உருவாகும் வாய்ப்பு ஏற்படலாம். இதை தவிர்க்க, முறையாக மருத்துவரை சந்தித்து சரியான 'கண் பவர்' அறிந்து கண்ணாடி போடவேண்டியிருக்கும்.

* செர்விக்கல் ஸ்பாண்டுலோஸிஸ்: நாற்காலியில் அமைர்ந்துக்கொண்டு, கழுத்தை மட்டும் கவிழ்த்து கைகளில் மொபைலை வைத்து பார்த்துக்கொண்டே இருப்பதால் இப்படியான பிரச்னை ஏற்படும். இதன் முக்கிய அறிகுறி கழுத்து வலிதான். இப்பிரச்னையை பெற்றோர் உதாசினப்படுத்தவே கூடாது. உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

* கை விரல் நரம்புகளில் சிக்கல்: அதிகம் மொபைலில் விளையாடுவதால், கை மணிக்கட்டுக்கு அருகிலுள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, இப்பிரச்னை வரும். அப்பகுதியை அசைக்க சிரமப்படுவதுதான் முக்கிய அறிகுறி. இது பின்னாள்களில் எழுதுவதை கூட பாதிக்கலாம் என்பதால், கவனம் தேவை.

* தொப்பை: அதிக நேரம் அமர்ந்துக்கொண்டே இருப்பது, அப்போதும் மொபைல் பார்ப்பது, உடலுழைப்பு இல்லாமை, போஸ்சர் (உடல் வடிவம்) சார்ந்த பிரச்னை உருவாவது போன்றவற்றால் நிறைய குழந்தைகளுக்கு வயிற்றுப்பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து, தொப்பையாக உருவாகிவிடுகிறது.

இவற்றையெல்லாம் தடுக்க, என்ன செய்யவேண்டும்?

* முடிந்தவரை பெரிய திரைகளில் குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர முயலவும். மொபைலில் பார்க்கும் வகுப்புகளை, கம்ப்யூட்டர் - லேப்டாப் போன்றவற்றில் காட்டலாம். திரைப்படம் என்றால்கூட, அதை டி.வி.யில் மட்டும் காட்டலாம். அப்படி காட்டும்போது, குழந்தைக்கும் திரைக்குமான இடைவெளியை அகலப்படுத்த வேண்டும்.

* படிப்பு நேரம் தவிர, விளையாட்டு நேரமென அதிகமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் சாதனங்களை கொடுக்க வேண்டாம். படிக்கும்போதுகூட, 20 நிமிடங்களுக்கு மேல் கேட்ஜெட்ஸ் உபயோகிக்க அனுமதிக்க வேண்டாம். கேட்ஜெட் பயன்படுத்தும் குழந்தைகள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 விநாடிகள் பிரேக் எடுத்து, 20 அடி தொலைவிலுள்ள ஏதாவதொரு பொருளை பார்க்க வேண்டும். இதை 20 - 20 - 20 விதி என மருத்துவ மொழியில் சொல்வோம்.

* வீட்டுக்குள்ளேயே முடக்காமல், வெளியுலகையும் குழந்தைக்கு காட்டவும். கூட்டமான இடங்களுக்கு மட்டும் அவர்களை அனுமதிக்க வேண்டாம். மற்றபடி, வீட்டு வளாகத்துக்குள் விளையாடுவது, மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்வது, காலை அல்லது மாலை நேரத்தில் சூரிய ஒளி படும்படி அவர்களை பார்த்துக்கொள்வது என்றிருப்பது நல்லது.

* குழந்தைகளை வருடம் ஒருமுறை கட்டாயம் முழுமையான கண் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.

* குழந்தை ஒழுங்காக கண்சிமிட்டுகிறதா, அல்லது வெகுநேரம் கண் சிமிட்டாமல் இருக்கிறதா என்பதை பெற்றோர் அடிக்கடி கண்காணியுங்கள். கண்சிமிட்டுவது மிகக் குறைவாக இருக்கிறது என்றால், உங்கள் குழந்தை இயல்பில் இல்லை; டிஜிட்டல் திரை அதிகம் பார்க்கிறது என்று பொருள். அதிலிருந்து அவர்களை மீட்கும்போது, இயற்கைச் சூழலை அதிகம் பார்க்கும்போது கண் சிமிட்டல் சிக்கல் தன்னால் சரியாகும்.

* படுக்கையறைக்குள் மொபைல் ஃபோனை எடுத்தே செல்லாதீர்கள். குழந்தைக்கு அருகிலும் மொபைல் இருக்க வேண்டாம். மொபைலை அணைத்துவைத்து, ஒரு மணி நேர இடைவெளிக்குப் பின் படுக்கையறைக்குள் செல்வது நல்லது. தூங்கும்போது எவ்வித வெளிச்சமும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

* மொபைலில் ஸ்க்ரீன் வெளிச்சம், அறை வெளிச்சத்துக்கு ஏற்றவாறு வைத்து உபயோகிக்க கொடுக்கவும்.

* சாப்பிடும்போது குழந்தை மொபைல் பார்க்காமல், டிவி பார்க்காமல் சாப்பிடும்படி பெற்றோர் ஏற்பாடு செய்யவேண்டும். இப்படி செய்யும்போது, நன்கு சவைத்து சாப்பிடுவார்கள் குழந்தைகள். இதன்மூலம் கண் சார்ந்த பிரச்னை தடுக்கப்படுவதோடு, உடல் பருமன் - ஊட்டச்சத்தின்மை போன்ற விஷயங்களும் தவிர்க்கப்படும். குழந்தையின் உணவில் அதிக காய்கறி சேர்த்துக்கொடுப்பது இன்னும் நல்லது என்பதால், அதையும் செய்யவும்.

இந்த 8 விஷயங்களையும் முறையாக செய்யும்போது, கொரோனா காலத்தில் நம் குழந்தைகளின் கண்களை நம்மால் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும்!" என்றார் மருத்துவர் டாலி லகானி.

இந்த அத்தியாயத்தில், குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை பார்த்தோம். தொடர்ந்து, அவர்களின் பிற நலன்கள், பிற பிரச்னைகளுக்கான தீர்வுகள், கையாளும் வழி உள்ளிட்டவற்றை காண்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com