மம்தாவின் இடைத்தேர்தல் வெற்றி அவரை தேசிய எதிர்க்கட்சிகளின் முகமாக மாற்றுமா? விரிவான அலசல்

மம்தாவின் இடைத்தேர்தல் வெற்றி அவரை தேசிய எதிர்க்கட்சிகளின் முகமாக மாற்றுமா? விரிவான அலசல்
மம்தாவின் இடைத்தேர்தல் வெற்றி அவரை தேசிய எதிர்க்கட்சிகளின் முகமாக மாற்றுமா? விரிவான அலசல்

கடந்த ஏப்ரல் மே மாதங்களில் மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் திரிணாமூல் காங்கிரஸ், கட்சி ரீதியாக வெற்றி பெற்றபோதும் அதன் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். இதனால் கட்சியின் வெற்றியால் முதல்வராக பதவியேற்ற மம்தா, அடுத்த 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு உள்ளானார். ஆகவே அவர் முதல்வராக பதிவியேற்றதன் பின்னாள்களில் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக, அங்கு வெற்றி பெற்றிருந்த திரிணாமூல் உறுப்பினர் ராஜினாமா செய்தார். ராஜினாமாவால் வந்த இடைத்தேர்தலில் மம்தாவும் திட்டமிட்டபடி போட்டியிட்டார். தற்போது அத்தேர்தலில் எதிர்பார்த்தது போலவே இன்று வெற்றியும் பெற்றுள்ளார் அவர். இதன்மூலம் அம்மாநில முதல்வராக தொடர்கிறார் மம்தா.

மம்தாவின் இந்த வெற்றி, இந்திய அரசியலில் மாற்றங்களை நிகழ்த்தும் என சொல்லப்படுகிறது. அதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் நம்மிடையே பேசுகையில், “மம்தா பானர்ஜியின் வெற்றியென்பது ஆச்சர்யப்படும் அளவுக்கானதெல்லாம் இல்லை. ஏனெனில் சட்டமன்ற தேர்தலில் தொகுதிவாரியாக தன் கட்சியை வைத்து அவர் வெற்றி பெற்றுவிட்டார். ஆகவே மம்தாவின் வெற்றியில் ஆச்சர்யம் இல்லை. எனில், இதில் ஆச்சர்யப்படும் அளவுக்கான விஷயம் என்னவென்றால், அது மம்தா வெற்றிபெற்ற வாக்குகளின் இடைவெளி. கிட்டத்தட 58,000த்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் மம்தா. இன்னும்கூட இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. மம்தாவின் இந்த பெருவாரியான வெற்றி, அவரை எதிர்த்து நின்ற பாஜகவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அடி, மாபெரும் தோல்வி என்றே சொல்லவேண்டும்.

எவ்வித அடித்தளமும் இல்லாத மேற்கு வங்க மாநிலத்தில், மம்தாவின் கட்சியினரை வைத்துதான் பாஜக தன்னை உருவாக்கிக் கொண்டது. இதற்கு சாட்சியாக அங்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னராக பிரசாரத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி “திதி (மம்தா), உங்கள் கட்சியை சேர்ந்த 45 எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பிலுள்ளனர்’ என சொன்னார். இந்தியாவின் வேறெந்த பிரதமரும் இப்படி தனது எதிர்க்கட்சியை சார்ந்துதான் தனது கட்சி செயல்படுகிறதென சொல்லியிருப்பதாக எனக்கு நினைவில்லை. அந்தளவுக்கான ஒரு வாக்குமூலத்தை மோடி தந்திருந்தார். இதுவொரு பக்கமென்றால், அங்கு வெளிவந்த சாரதா ஊழலில் சம்பந்தப்பட்ட முகுல் ராய் போன்றோரை, திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி தங்கள் கட்சியில் சேர்ந்த நபர் என்பதாலேயே பாஜக புனிதப்படுத்தி வந்தது. இவ்விவகாரம் அங்கு பெரும் விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. முகுல் ராய் போன்றோரை புனிதர் என்பது போல பேசிய காரணத்தினாலேயே, அங்கு பாஜக-வை பலரும் ‘வாஷிங் மிஷின் கட்சி’ என்றெல்லாம் கடுமையாக சாடினார்கள். அதாவது பாஜக கட்சிக்குள் நுழைந்தால், அந்நபர்களிடம் உள்ள அழுக்கு உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுவிடும் என்ற நோக்கில் அக்கட்சியை வாஷிங் மிஷினுடன் ஒப்பிட்டு சொன்னார்கள்.

மம்தாவின் வெற்றியில் இன்னொரு விஷயமும் உள்ளது. மம்தாவின் வெற்றிக்கு பாஜக-வின் முன்னாள் உறுப்பினரான பாபுலால் சுப்ரியோ முக்கிய காரணமாக இருந்தார். இவர் பாஜகவுக்கு ஆதரவாக இருந்து, கடந்த மாதத்தில் திரிணாமுலில் இணைந்து மம்தாவுக்கு செயல்பட்டு ஓட்டு சேகரித்து கொடுத்தார். மேற்கு வங்க அரசியல் களம் அடிப்படையிலேயே சந்தர்ப்பவாத அரசியல்காரர்கள் இயங்கும் கட்சியாக மாறிப்போனதன் விளைவு இது!

இதற்கு முன்னர் மேற்கு வங்கத்தில் இடதுசாரி - காங்கிரஸ் என்றிருந்த நிலையை, திரிணாமுல் காங்கிரஸ் - இடதுசாரி என மாற்றியது மம்தாதான். இப்போது அந்த திரிணாமுல் காங்கிரஸ் - இடதுசாரி என்ற நிலையை, பாஜக மாற்ற நினைக்கிறது. இங்கே இவர்கள் ஒடுக்கியது இடதுசாரிகளை. வருங்காலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக என மாற்றுவதற்காக பாஜக எடுத்த முயற்சிகள் பல. அந்தவகையில் மோடி - அமித்ஷா உட்பட பாஜகவின் பல தலைவர்கள் மேற்கு வங்கத்திலேயே கடந்த சில வருடங்களாக தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி கிட்டத்தட்ட முகாமிட்டு வேலை செய்தனர். ஏனெனில் பாஜக-வுக்கு மேற்கு வங்கம் மட்டுமன்றி கடந்த வருடங்களில் பல மாநிலங்களிலிருந்தும் எதிர்ப்பு வந்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்தவகையில், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம், அங்கெல்லாம் மிக வலுவான எதிர்ப்பு (மேற்கு வங்கத்தில் உள்ளது போல) இல்லை. ஆகவே அங்கு பாஜக வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தில் வலுவாக எதிர்ப்பு இருப்பதால், அங்கு ஆட்சியை பிடித்துவிட்டால் மீண்டும் பழையபடி நாடு முழுவதும் வலுவடைந்துவிடலாம், லேசான எதிர்ப்பு உள்ள மாநிலங்களையும் பழைய நிலைக்கு கொண்டுவந்துவிடலாம் என பாஜக நினைத்தது. அதற்கான பாஜகவின் தீவிர முயற்சியினால்தான், சட்டமன்ற தேர்தலில் அவர்கள் பெயர்சொல்லும்படி வெற்றி பெற்றனர். மம்தாவையும் அத்தேர்தலில் அவர் தொகுதியில் மட்டும் தோற்கடித்தனர். ஆனால் அதையும் தற்போது வெற்றிகரமாக மம்தா கையாண்டிருக்கிறார். அதையே இந்த இடைத்தேர்தல் தேர்தல் முடிவு உறுதிசெய்துள்ளது. பாஜகவின் இந்த அதிக வாக்கு வித்தியாசத்திலான இடைத்தேர்தல் தோல்வி, அடுத்தடுத்து அவர்களை பலவீனமாக்க வல்லது என்பதை மறுக்கமுடியாது.

சொல்லப்போனால் இப்போதுவரை மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை பாஜக-வால் முறியடிக்க முடியவில்லை. வங்கத்தில் இதற்கு முன் எப்படி காங்கிரஸூம் இடதுசாரியும் வலுவான நிலையில் இருந்ததோ அப்படித்தான் இன்று திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக உள்ளது. ஆனாலும் இதில் பாஜக வலுவாக இல்லை. சில வருடங்களில் மீண்டும் அசைக்க முடியாத இடத்தில் அமர்வார் மம்தா. இதை உறுதியாக நான் சொல்ல காரணம், திரிணாமுலிலிருந்து பாஜக-வில் இணைந்த பல முக்கிய தலைவர்கள், மீண்டும் திரிணாமுலுக்கே திரும்பிக்கொண்டுள்ளனர். மேலும் பாஜக கடந்த சில வருடங்களில் தனது பலம் முழுவதையுமே மேற்கு வங்கத்தில் பிரிவினைவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு இரையாக்கியுள்ளது. மாறாக அவர்கள் கொள்கை ரீதியாக முன்னேறியிருக்க வேண்டும். ஏனெனில் கொள்கை ரீதியான முன்னேற்றம் மட்டுமே கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும். வெறுமனே சந்தர்ப்பவாதத்தை மட்டுமே வைத்து செயல்பட்ட காரணத்தால், மம்தாவின் வெற்றிக்குப் பின் அங்குள்ள அரசியல் தலைவர்கள் மீண்டும் சந்தர்ப்பவாத காரணிகளால் பழையபடி திரிணாமுலுக்கு திரும்பிவிடுவர். அப்போது பாஜக மீண்டும் ஆட்டம் கண்டுவிடும்” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் கோலகல ஸ்ரீனிவாஸ் பேசுகையில், “பவானிபூர்தான் மம்தாவின் தொகுதி. அப்படியிருக்க அவர்தான் பிடிவாதமாக சுவேந்து அதிகாரியை எதிர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் வேறொரு தொகுதியில் நின்று, மூக்குடைபட்டார். தற்போது சொந்த தொகுதியில் நின்றதால், சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறார். முன்பே இங்கு நின்றிருந்தால் அப்போதும் இந்த வெற்றியை இதேபோல சிறப்பாகவோ அல்லது மதிப்புமிக்க வகையிலான வாக்கு வித்தியாசத்திலோ பெற்றிருப்பார் மம்தா. அந்தளவுக்கு பவானிபூரில் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது... அவர் அங்கு தோற்பார் என்றெல்லாம் நினைத்து பார்க்ககூட முடியாது.

இந்த வெற்றியில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தானே இந்திய எதிர்க்கட்சிகளின் முகம் என்கிற ரீதியில் மம்தா அண்மைக்காலமாக சில வேலைகளை செய்துவருகிறார். மம்தாவின் இந்த பெருவாரி இடைத்தேர்தல் வெற்றி, அவரின் அந்த எண்ணத்தை இன்னும் வலுவாக்கும். மம்தாவின் இந்த எண்ணத்தை, அவர் கட்சியை சேர்ந்த எம்.பி.யான சுதீப் பந்தோபாத்யா என்பவர், சமீபத்தில் (செப். 17) அக்கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில் (ஜாகோ பங்களா) தனது சொந்த கட்டுரையொன்றில் வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுரைக்கு அவர் வைத்திருந்த தலைப்பே, ‘ராகுலால் எதுவும் முடியாது. மம்தாதான் எதிர்க்கட்சிகளின் தலைவர்’ என்பதுதான். கட்டுரையின் உள்ளே ராகுலை பற்றி குறிப்பிடுகையில், ‘2014 மற்றும் 2019-ல் உங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. நீங்கள் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. உங்களால் இனி எதிர்க்கட்சிகளின் முகமாக தோன்ற முடியும் என்று எண்ணமுடியவில்லை. அதற்கான தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அதேநேரத்தில், 2021 சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதன்மூலமாக, எதிர்க்கட்சிகளின் முகமாக மம்தா ஒருவர்தான் இருக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் எதிர்கட்சி கூட்டணி என ஒன்று அமைந்தால், அதற்கு மம்தாதான் வழிகாட்டியாக இருப்பார்; அவர்தான் தலைமை ஏற்பார்’ என்று குறிப்பிட்டார். இதற்கு மம்தா எதிர்ப்போ விளக்கமோ தெரிவிக்காமல் மௌனித்து அனுமதித்தார்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. அது, இந்த பவானிபூர் தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. தங்கள் ஓட்டுகளை மம்தாவிடமிருந்து பிரித்துவிடாமல், கிட்டத்தட்ட மம்தாவின் வெற்றிக்கு இணக்கமான நடவடிக்கைகளை காங்கிரஸ் முன்னெடுத்தது. இந்த இணக்கத்தின் பின்னணியில், காங்கிரஸ் தங்களது தேசியளவிலான எதிர்க்கட்சி கூட்டணிக்குள் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸை கொண்டு வர நினைக்கிறதோ என்று நினைக்க வேண்டியுள்ளது. அப்படி நடந்தால் அடுத்த சிக்கலாக தேசிய எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை ஏற்பது மம்தாவா அல்லது சோனியா காந்தியா என்ற போட்டி உருவாகும்.

இந்த தலைமைக்கு வரும் போட்டியானது இவர்களுக்குள் (மம்தா - சோனியா) ஏற்கெனவே வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். காரணம், கடந்த ஆக. 20-ல் சோனியா காந்தி இந்தியா முழுக்க உள்ள 19 எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அழைத்து சந்தித்தார். அதில் மம்தாவும் இருந்தார். அந்த கூட்டத்தில் மம்தா மற்றும் சோனியாவுடனான பேச்சுகளை நான் கவனித்தேன். அதில் சோனியா தனது தலைமை உரையில் ‘பாஜகவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கடமையை ஒருநாளும் காங்கிரஸ் விட்டுக்கொடுக்காது’ என்றார். இதைத்தொடர்ந்து பேசிய மம்தா, அப்போது ‘எதிர்க்கட்சி கூட்டணிக்கு யார் தலைவர் என்பது இப்போது முக்கியமில்லை.

அதற்கு மக்கள் தலைமை வைப்பார்கள்’ என்றார். அதாவது, எங்கே காங்கிரஸ் தலைமையை சோனியா உறுதிசெய்கிறாரோ என நினைத்து மம்தா மக்கள் பக்கம் அதை திருப்பிவைத்தார். இந்த விவகாரத்தில், மம்தாவின் கை ஓங்குமென்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் காங்கிரஸ் வெகுகாலமாக விட்டுக்கொடுத்தே வாழ்ந்துவருகிறது. மம்தாவின் கை ஓங்கும் என்பதற்கு, இந்த வெற்றி அவருக்கு கூடுதல் பலம் கொடுக்கும்” என்றார்.

மம்தாவின் முகம் தேசிய எதிர்க்கட்சிகளின் முகமாக மாறுமா என்பது, அடுத்த நாடாளுமன்ற தேர்தலின்போது நமக்கு தெரியவந்துவிடும். பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com