போலிகள் சூழ் உலகாக மாறிப்போன சமூக வலைதளங்கள் ! எது உண்மை ? எது பொய் ?
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் வெறும் பொழுதுபோக்குக்கானவை மட்டுமே அல்ல. சமூக வலைதளங்கள் மூலம் தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது என அமெரிக்காவில் இன்னமும் முனுமுனுத்துக்கொண்டு இருக்கிறார்கள். செய்திகள், பிரசாரம், வியாபாரங்கள், விளம்பரங்கள் என சமூக வலைதளங்கள் எல்லாமும் கிடைக்கும் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் வரை , அதே போல் சிறிய மன்றங்கள் முதல் பெரிய தேசிய கட்சிகள் வரை சமூக வலைதளங்களை பெரிய சக்தியாக நினைக்கின்றன. அந்த பெரிய சக்தியின் பெரிய அச்சுறுத்தலே போலி செய்திகள்.
சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்புவது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அச்சுறுத்தல். போலி செய்திகள் பரவுவதை நாம் சாதாரணமாக கடந்து போகவும் முடியாது. கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் சமூக வலைதளங்களில் போலியான படங்கள், வீடியோ, செய்திகள் உள்ளிட்டவை நாள்தோறும் பரவுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த சமூக வலைதள நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றன. சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பதிவிடப்படுவதைத் தவிர்க்க கூடுதலாக 5 நிறுவனங்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு சமூக வலைதளங்களில் போலி செய்திகளும், புகைப்படங்களும் புற்றீசல் போல பரவி வருகிறது. குறிப்பிட்ட ட்ரெண்டிங்கை கையில் எடுத்து அது மூலமாக பரப்பப்படும் போலி செய்திகள் எளிதில் பரவிவிடுகிறது. செய்திகள், புகைப்படங்களில் உண்மைத்தன்மையை ஆராயாமல் பயனாளர்களும் அதனை அப்படியே பகிர்வது மேலும் ஆபத்தாகிக்கொண்டே போகிறது.
காஷ்மீர் தாக்குதல் நடந்த அடுத்த நாளே, புல்வாமா தாக்குதலின் சிசிடிவி காட்சி என்று ஒரு வீடியோ வைரலாக பரவியது. அதுவும் ஒரு குண்டுவெடிப்பு வீடியோ என்பதால் பலரும் அதனை நம்பி உணர்ச்சிப்பூர்வமாக ஷேர் செய்தனர். அந்த வீடியோ வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களாக வைக்கப்பட்டன. ஆனால் அந்த வீடியோ வெளிவந்து ஓராண்டுக்கு மேலாக ஆனது என்பது தான் உண்மை. அதே போல் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் புகைப்படங்கள் என சில பரவின. ஆனால் அதுவும் போலியானவை என்றும் தயவு செய்து அந்த போலிகளை பகிரவோ, பரப்பவோ அல்லது லைக் போடவோ செய்யாதீர்கள் என சிஆர்பிஎப் வேண்டுகோள் விடுத்தது.
அதேபோல் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரான விஜயகுமார் தெரிவித்ததாக ஒரு தகவல் வைரலாக பரவியது. தாக்குதல் குறித்து இப்படியெல்லாம் ஆளுநரின் ஆலோசகரே கூறினாரா என்று ஆராயாமல் பலரும் அவர் கூறியதாக வெளியிட்ட பதிவை ஷேர் செய்தனர். இது குறித்து விளக்கம் அளித்த விஜயகுமார் ''நான் இது மாதிரியான எந்த தகவலையும் கூறவில்லை'' என்று தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்திய அளவில் இப்படியாக போலிகள் பரவினால், தமிழக அளவில் அரசியல் தலைவர்களின் கருத்துகள் என்று போலி செய்திகள் பரவுகின்றன. தொலைக்காட்சி செய்திகளின் பிரேக்கிங் கார்டுகளை போட்டோஷாப் செய்து விஷமிகள் சிலர் தங்களது கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிரான கட்சிகளுக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நடிகர்கள் கொடுத்த பண உதவி என ஒரு பட்டியலே பரவி வருகிறது. அதனை அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஷேர் செய்தும் வருகின்றனர். காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் பட்டியல் என விடுதலை புலிகளின் போட்டோக்கள் கொண்ட பட்டியல் பரவியது. அந்த போலி செய்தியை பேனராக வைத்து அதற்கு தமிழக காவல்துறையே சல்யூட் அடித்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
சமூக வலைதளங்களில் நம் கைகளில் வரும் செய்தியோ, புகைப்படமோ, வீடியோவோ, அது எதுவாக இருந்தாலும் அதன் உண்மைதன்மையை முதலில் ஆராய வேண்டும். பார்ப்பவையெல்லாம் உண்மையல்ல என்பதை உணர்ந்து அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பின், அதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும். நாம் கவனக்குறைவாக உணர்ச்சிவசப்பட்டு ஷேர் செய்யும் போலி செய்திகள் எங்கோ ஒரு புள்ளியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.