அச்சுறுத்தும் லாக் அப் மரணங்கள் - அப்பாவி மக்களின் அழுகையும்; அசராத அரசும்!

அச்சுறுத்தும் லாக் அப் மரணங்கள் - அப்பாவி மக்களின் அழுகையும்; அசராத அரசும்!
அச்சுறுத்தும் லாக் அப் மரணங்கள் - அப்பாவி மக்களின் அழுகையும்; அசராத அரசும்!

மேஜையின் மீது படுக்க வைக்கப்படும் அவர்களின் கைகள் கட்டப்படுகின்றன. கால்களும் கயிற்றால் இறுக்கப்படுகின்றன. அடுத்து என்ன நடக்கப்போகிறது பயத்துடன் படுத்திருக்கும் அவரின் ஆசனவாய் பகுதியில் லத்தி, கம்புகள் கொண்டு மிருகத்தனமாக தாக்கப்படுகிறது. வலி உயிர்போகிறது. கதறுகிறார்கள். ரத்தம் சொட்ட சொட்ட, காவல்துறையின் கண்களில் மட்டும் கருணை சொட்டவில்லை. உக்கிரமாக தாக்குகின்றனர். போர்வை முழுக்க ரத்தம்; சிறையின் சுவர்களில் சிகப்பு புள்ளிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கிறது.

இந்த சம்பவம் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் நடந்ததல்ல. கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸூக்கு நடந்த கொடூரங்கள்தான் இவை. ரத்த காயங்கள் ஏற்பட்ட வலி தாங்காமல் தவித்த தந்தை மகன் இருவரையும் முறையாக சிகிச்சை அளிக்காமலேயே கோவில்பட்டி கிளைச் சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர். எந்த மாதிரியான மனநிலையில் இந்த சம்பங்களை அணுகுவது என்பது புலப்படவில்லை. காவல்துறையினருக்கான அதிகார போதைகளின் வெறியாட்டங்களால் சாமானியர்களின் உயிர்கள் காவு வாங்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன. தவிர, வெளிச்சத்துக்கு வராத கொடூரங்கள் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் தமிழகத்தின் சிறைகளின் சுவர்களின் பலரின் அழுகுரல்களும், வலிகளின் ஓலங்களும் தேங்கியே கிடக்கின்றன.

அண்மையில் வெளியான ஜெய் பீம் படம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என எடுத்துக்கொண்டாலும், பல வழக்குகளில் இன்னும் உண்மைகள் வெளிவராமல் நீதி நீர்த்து போயுள்ளது என்பதை கடந்த கால லாக்அப் மரணங்களின் தரவுகள் அடிப்படையில் புரிந்துகொள்ள முடிகிறது. 2017ம் ஆண்டு நாடு முழுவதும் போலீஸ் காவலில் 100 மரணங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது. 

2016-ம் ஆண்டு 96 மரணங்கள் நிகழ்ந்த நிலையில் 2017-ல் 100 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2017-ம் ஆண்டு போலீஸ் அதிகாரிகள் மீது 56 மனித உரிமை மீறல்கள் வழக்காகப் பதிவாகியுள்ளது. இதில் 48 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 3 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் பெரும்பாலும் சித்ரவதை செய்ததாகப் பதிவாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் 348 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அது குறித்த தரவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


அதேபோல நிகழும் கொடூர மரணங்கள் இருளுக்குள்ளே மறைந்துவிடுகின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையின்படி 70 காவல் மரண வழக்குகளில் இரண்டில் மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காவல்துறையினரின் சித்தரவதைகள், பழங்குடியின, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதுதான் நடக்கின்றன என்பதையும் தரவுகள் உணர்த்துகின்றன. பிடிபடாத கைதிகள், தேங்கி நிற்கும் வழக்குகளுக்கு தீர்வு காணவும், மேலதிகாரிகளின் அழுத்தங்களாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது போலி வழக்குகள் பதியப்படுகின்றன. கட்டாயப்படுத்தி கைது செய்யப்படும் அவர்கள், அடித்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட உண்மையை ஒப்புக்கொள்ள வலியுறுத்தப்படுகின்றனர்.

கைதான நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என விதியிருந்தாலும் அவை 90சதவீதம் கடைபிடிக்கப்படுவதில்லை. ஒருவரை எதற்காகக் கைது செய்கிறோம், எங்கே கொண்டு செல்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். எந்த நேரத்தில் கைது நடந்தது என்பதைக் குறிப்பிட்டு மெமோ கொடுக்க வேண்டும். கைது நடக்கும் இடத்தில் இருக்கும் அவரது குடும்பத்தாரிடமோ அல்லது நண்பர்களிடமோ கையெழுத்து பெறவேண்டும் என்று டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவற்றில் எது தவறினாலும் அந்த அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடியும்.

1997, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் குமார் வழக்கில், ‘கைது செய்வதற்கான அதிகாரம் என்பது வேறு; கைது செய்வதற்கான தேவை என்பது வேறு...’ என்று தெளிவாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது ஒரு காவல்துறை அதிகாரிக்கு கைது செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவர் தேவையை ஒட்டியே கைது செய்யவேண்டும். சந்தேகத்துக்குரிய நபர் தப்பி விடுவார் என்றாலோ, வெளியே இருந்தால் சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைத்து விடுவார் என்றாலோ அல்லது அவரால் யாருக்கேனும் ஆபத்து என்றாலோ குற்றச்செயல் புரியும்போது மாட்டிக் கொண்டாலோதான் கைது செய்யவேண்டும். இந்தக் காரணங்கள் இன்றி ஒருவரைக் கைது செய்யக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாக்கியுள்ளது.

காவல்துறை மட்டும் தனித்தே இத்தகையை கொடூரங்களை நிகழ்த்துவதில்லை. அவர்களுடன் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் கைகோர்த்தே லாக்அப் மரணங்களை சாத்தியப்படுத்துகின்றன.கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக மனித உரிமை இயக்கங்கள், பொது சேவை அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சியினரின் முயற்சியால் இந்தக் காவல் மரணங்கள் வெளியே தெரியவருகின்றன.

இந்தக் காவல் மரணங்கள் பெரும்பாலும் ஒரு நபர் கைது செய்யப்படுவதற்கும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவதற்கும் இடையேதான் நிகழ்கின்றன. விசாரணையின்போது ஒருவரை அடிப்பது குற்றம் என்றாலும் அடிக்காமல் போலீஸ் விசாரிப்பது இல்லை என்பது ஊரறிந்த உண்மை. அரசு இனியாவது இதனை கவனத்தில் கொண்டு, லாக் அப் மரணங்களை முழுமையாக தடுக்க வேண்டும். காவல்துறையினரின் லத்திகள் களமாடும் நிலங்களாக அப்பாவி மக்களின் உடல்கள் இனியும் தொடரக்கூடாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com