சசிகலாவை கட்சிக்குள் அனுமதிக்க தயாராகிவிட்டாரா ஓ.பி.எஸ்? - காரணம் என்ன?
சசிகலாவை அதிமுகவுக்குள் அனுமதிக்கும் முடிவுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறைமுகமாக பச்சைக்கொடி காட்டியிருப்பது அவரது இன்றைய பேட்டியின் மூலம் அறிய முடிகிறது. சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பி.எஸ் மீண்டும் சசிகலாவை ஏற்க என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.
அரசியலைப் பொறுத்தவரை அங்கே முரண்கள்தான் அதிகமாக கொட்டிக்கிடக்கிது. 'சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்' என்று கூறி அவருக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர்தான் ஓ.பன்னீர்செல்வம். நாஸ்டாலஜியாக சொல்லவேண்டுமென்றால், ''சசிகலா குடும்பத்திடம் இருந்து, கட்சியையும் ஆட்சியையும் மீட்பது நம் கடமை. இதற்கான வாய்ப்பு ஆர்.கே.நகரில் நமக்கு கிடைத்துள்ளது. இந்த தர்ம யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும்'' என்ற ஓ.பி.எஸ்தான் இன்று சசிகலாவை ஏற்பது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு சைலண்ட் மெசேஜ் கொடுத்திருக்கிறார்.
கையிலிருந்த முதல்வர் பதவியை நழுவ விட்டு தர்மயுத்தம் நடத்தி மீண்டும் கட்சிக்கு திரும்பிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தது என்னமோ துணை முதல்வர் பொறுப்பு. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டாலும் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதலோடுதான் முடிவுகள் எடுக்கப்படும் வகையில் கட்சியின் விதிகள் திருத்தப்பட்டன.
இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பெரும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. அதேபோல அடுத்தடுத்த ஆண்டுகளில் கட்சியில் நடந்த சம்பவங்கள் யாவும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக இருந்திருக்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தர்மயுத்ததில் ஓபிஎஸூக்கு துணைநின்ற அவரது ஆதரவாளர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை என்ற புகாரும் உள்ளுக்குள் இருந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் 37 எம்.பி.க்களில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 27 பேரில், தம்பிதுரை, டாக்டர் வேணுகோபால், டாக்டர் ஜெயவர்தன், மகேந்திரன், மரகதம் குமரவேல், செஞ்சி சேவல் ஏழுமலை ஆகிய 6 பேருக்கு மட்டுமே மீண்டும் சீட் வழங்கப்பட்டது. ஓபிஎஸ் அணியை சேர்ந்த சுந்தரம், அசோக்குமார், சத்தியபாமா, வனரோஜா, கோபாலகிருஷ்ணன், செங்குட்டுவன், மருதராஜா, ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி, பார்த்திபன் உள்ளிட்ட 10 பேரில் ஒருவருக்குக் கூட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தொடர்ந்து நடந்த பல்வேறு நிகழ்வுகள் கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்தின. சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்க் கட்சி துணைத்தலைவர் பதவியே கிடைத்தது. இப்படியாக தொடர்ந்து கட்சியில் தான் ஓரங்கட்டப்படுவதாக நினைக்கும் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சிக்குள் அனுமதித்தால் தனக்கான இடத்தை தங்க வைத்துகொள்ள முடியும் என நம்புகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் சசிகலாவை எக்காரணம் கொண்டும் அனுமதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அண்மையில் ஆளுநரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''சசிகலா அதிமுக கட்சியில் இல்லை. அவரைப் பற்றி நாங்கள் கவலை கொள்ளவில்லை'' என்று பேசியிருந்தார். இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்பதுதான்.
இப்படியிருக்க சசிகலாவை கட்சிக்குள் அனுமதிக்க மறைமுகமாக ஓபிஎஸ் பச்சைக்கொடி காட்டியிருக்கும் நிலையில், 'சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுபவர்கள் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அரசியல் சதுரங்கத்தில் ஓ.பி.எஸ் தனக்கான காயை நகர்த்திவிட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு தான் அடுத்த மூவ்!
-கலிலுல்லா