குழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்
இந்தியாவுக்குப் பின் கொரோனாவின் அடுத்த மோசமான அலை, இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின் என பிற நாடுகளில்தான் தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது என்றபோதிலும் இந்தோனேஷியா மோசமான நிலையிலுள்ளது என கூற காரணம், ஆசியளவில் அதிகப்படியான இறப்பு எண்ணிக்கை காணும் நாடாக இப்போது அந்நாடு இருப்பதால் தான். அதுமட்டுமல்ல, குழந்தைகள் இறப்பென்பதும் இந்தோனேஷியாவில்தான் மிக மிக அதிகமாக இருக்கிறது.
கொரோனாவால் உலகளவில் இதுவரை குழந்தைகள் இறப்பென்பது மிகவும் குறைவாகவே இருந்துவந்த நிலையில், இந்தோனேஷியாவில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது, பலரையும் அச்சப்படுத்தியுள்ளது. இந்த அலையில் குழந்தைகள் இந்தளவுக்கு பாதிக்கப்படுவதன் காரணம் என்ன, இறப்பின் பின்னணி என்ன, இது என்ன வகை திரிபு என்பது பற்றிய அடிப்படை விவரங்களை அலசினோம். அந்த விவரம் இங்கே...
இந்தோனேஷியாவில் தொற்று அதிகரித்த காரணம் - இந்தோனேஷியாவில் கொரோனா உச்சமடைந்த நாட்களை காணும்போது, அங்கு ஜூன் மாதத்தின் போது தினசரி புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை 8,000 என்றே இருந்துள்ளது தெரிகிறது. ஆனால் இப்போது (ஜூலை இறுதியில்) அதே எண்ணிக்கை 50,000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. அதேபோல கொரோனா ஒருநாள் இறப்பென்பது 2000-த்தை தாண்டி பதிவாகி வருகிறது. தற்போது கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுக்களும் பாதித்து வரும் நிலையில், பிறந்த குழந்தைகளும்கூட கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் அங்குள்ள மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இந்தளவுக்கு அங்கு வேகமாக தொற்று அதிகரித்த இந்த குறுகிய காலகட்டத்தில் பலர் அங்கிருந்து வெளியேறி பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்த அவலமும் இந்தோனேஷியாவில் நிலவியுள்ளது. அந்தவகையில் இம்மாத தொடக்கம் வரை அங்கு விமான போக்குவரத்து இயல்பு நிலையிலேயே இருந்திருக்கிறது என செய்திகள் வெளிவந்துள்ளன. ஜூலை தொடக்கத்தில் மட்டும் தோராயமாக 19,000 வெளிநாடுகளுக்கு பயணப்பட்டிருப்பர் என சொல்லப்படுகிறது. அதிலும் கடந்த வாரத்தில் தற்காலிகமாக இந்தோனேஷியாவிலிருந்து வெளியேறிய ஜப்பான் குடிமக்கள் அதிகளவு இருந்துள்ளனர். இந்தளவுக்கு மக்கள் வெளியேற காரணம், அங்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதில் நிலவிய சிக்கலே என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.
விமான போக்குவரத்தே இந்தளவுக்கு இயல்பாக இருந்திருக்கின்றதென்றால், உள்நாட்டு போக்குவரத்து குறித்து சொல்லவா வேண்டும்? அதுவே தொற்று பாதிப்பு அங்கு அதிகரித்ததன் பின்னணி என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இறப்பு அதிகரித்ததன் பின்னணி: உலகின் நான்காவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தோனேஷியாவில் மொத்தம் 27 கோடி மக்கள் இருக்கின்றனர். இவர்களுக்கான தடுப்பூசி பின்னடைவுக்கு பின், இந்தோனேஷிய அரசின் மெத்தனமே காரணமென கூறப்படுகிறது. தொடக்கத்தில் இந்தோனேஷிய அரசின் சார்பில் வெகுசிலருக்கே இலவச தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான உரிமம் வழங்கப்பட்டது. அந்தவகையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச தன்னார்வ அமைப்புகளுக்கே இலவச தடுப்பூசி வழங்கப்பட்டது. பின்னர் கடந்த மாதத்தில் இந்தப் பட்டியலில் 60 வயதுக்கு மேற்பட்டோர், ஆசிரியர்கள் என சிலர் சேர்க்கப்பட்டனர். பணம் செலுத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நிலையினால், பலரும் தடுப்பூசி பெற முடியாமல் தவித்ததாக இந்தோனேஷிய ஊடகங்கள் தெரிகிவிக்கிறது.
அங்கு பதிவான இறப்பில் கடந்த சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என சொல்லப்படுகிறது. இவர்களில் பலர் 5 வயதுக்கும் உட்பட்டவர்கள். மேலும் இந்தோனேஷியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானதில் 12.5 சதவிகிதத்தினர் குழந்தைகள்தான். இதன் பின்னணியில் பெரியவர்கள் தடுப்பூசி விநியோக சிக்கல், ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற அடிப்படை சுகாதார நிலைமைகளால் சிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.
தடுப்பூசி போடப்பட்டிருந்தால், குழு நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கொரோனாவின் தீவிரத்தை அவர்கள் குறைத்திருக்க முடியும். ஆக, தடுப்பூசி பின்னடைவே இறப்பு அதிகரித்ததன் பின்னணி. தடுப்பூசி போட்டுக்கொண்டால், இறப்பை 90% க்கும் மேல் தடுக்கலாம் என்பது, ஆய்வுகள் சொல்லும் முடிவு.
என்ன வகை திரிபு பரவுகிறது இந்தோனேஷியாவில்? இறப்பை பொறுத்தவரை, இந்தோனேஷியாவில் குழந்தைகள் இறப்பு மிக அதிகமாக உள்ளது. ஆகவே அங்கு புது வகை கொரோனா திரிபு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இப்போதுவரை இந்தோனேஷிய அரசு அப்படியான புதிய திரிபு குறித்து எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அளித்திருக்கும் அதிகாரபூர்வ தகவலின்படி, இப்போது அங்கு பரவுவது இந்தியாவில் இரண்டாவது அலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்திய டெல்டா வகை வைரஸ்தான்.
ஆனால் இந்த திரிபில் இந்தியாவிலோ பிற நாட்டிலோ குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு, நிபுணர்கள் தரப்பில், “பிற நாடுகளெல்லாம் ஓரளவாவது தங்கள் மருத்துவ வசதியை கட்டமைத்து வைத்திருந்தனர். ஆனால் இந்தோனேஷியாவில் அது கிடையாது. அவர்கள் வளர்ந்து வரும் ஒரு நாடாகவே இப்போதுவரை இருக்கிறார்கள். அங்கு பொருளாதார ரீதியாகவும் சற்று பின் தங்கியே இருக்கிறார்கள். பிற நாடுகளில் சாமானியர்களுக்கு கிடைக்கும் நிறைய அடிப்படை வசதிகள்கூட அங்குள்ள மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. சொல்லப்போனால் அங்கு கொரோனா பரிசோதனைக்கான வசதிகளும் குறைவாக இருப்பதாகவே தகவல்கள் சொல்கின்றன. இதுவரை 32 லட்சம் பேருக்கு இந்தோனேஷியாவில் கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சுமார் 86,000 பேர் இறந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு சொல்கிறது. ஆனால் முறையான பரிசோதனை செய்தால், இந்த எண்ணிக்கை நிச்சயம் உயரக்கூடும்.
இதனடிப்படையில் பார்க்கும்போது, அங்கு டெல்டா வைரஸ் பல பெரியவர்களுக்கு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என புரிகிறது. அவர்களிடமிருந்து அந்த தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ், அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பரவியிருக்கலாம். இந்தோனேஷிய அரசு, பெரியவர்கள் மத்தியிலான சிகிச்சைக்கே முழுமையாக தயாராக இல்லாமல் இருந்துள்ளது. அப்படியிருக்கும்போது, குழந்தைகள் பாதிப்புக்கும் அவர்கள் தயாராக இருந்திருக்க வாய்ப்பில்லை. இதனாலேயே அங்கு குழந்தைகள் இறப்பு அதிகம் பதிவாகியுள்ளது” என்கின்றனர்.
சென்னையை சேர்ந்த குழந்தைகள் தொற்றுநோயியல் சிறப்பு நல மருத்துவர் ராஜ்குமார் இதுபற்றி பேசுகையில், “இந்தோனேஷியாவில் டெல்டா திரிபுதான் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்துவதாக அதிகாரபூர்வ தகவல்கள் சொல்கின்றன. ஆனால், கொரோனா ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது இயல்பையும் திரிபையும் மாற்றும் வல்லமை கொண்டது. அந்த வகையில் சற்று தீவிரமான திரிபும் அங்கு பரவியிருக்கலாம். அங்கு நிலவும் தடுப்பூசி விநியோக சிக்கலால், இப்போது அவர்களால் சூழலை கையாள முடியாமல் உள்ளதென்றே நினைக்கிறேன்.
குழந்தைகள் இறப்பை பொறுத்தவரை இந்தோனேஷியா அரசு இன்னும் முழுமையான தரவுகளை வெளியிடவில்லை. வெறும் இறப்பு எண்ணிக்கையை மட்டுமே சொல்லியுள்ளார்கள். குழந்தைகளை கொரோனா தாக்கிய போது அவர்களுக்கு என்ன மாதிரியான சிக்கல் ஏற்பட்டது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு ஆக்சிஜன் அதிகம் தேவைப்பட்டதா, மூச்சுத்திணறல் ஏதும் ஏற்பட்டதா அல்லது நுரையீரல் சார்ந்த சிக்கல்கள் ஏதும் வந்ததா என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்.
அப்படி சொன்னால் மட்டுமே பிற உலக நாடுகள் தங்கள் நாட்டை ‘குழந்தைகள் மீதான கொரோனா தாக்குதலில் இருந்து’ தற்காத்துக்கு கொள்ளவும் முன்னெச்சரிக்கையாக செயல்படவும் முடியும். அதுமட்டுமன்றி இந்தோனேஷியாவின் மருத்துவ தேவைகளும் அப்போதுதான் வெளிச்சத்துக்கு வரும். இனி மேலும் அங்கு குழந்தைகள் இறக்காமல் இருக்க, அவர்களுக்கு என்ன தேவை என்பது வெளிப்படையாக தெரியும்போது அடுத்தடுத்த இறப்புகளை தடுக்க உலக சுகாதார நிறுவனம் - உலக நாடுகள் உட்பட அனைத்து தரப்பினரும் உதவுவர்.
இந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, இப்போதைக்கு இந்தோனேஷியா நமக்கு சொல்லும் பாடம் ஒன்றுதான். அது, ‘குழந்தைகள் மீதான கொரோனா தாக்குதலுக்கும் தயாராக இருங்கள்’ என்பதே. இந்த விஷயத்தில் நமது மாநில அரசும் மத்திய அரசும் தங்களை நன்கு தயார்ப்படுத்தியே வைத்துள்ளது. உதாரணத்துக்கு மருத்துவமனைகளை குழந்தைகளுக்கு ஏற்றவாறு தயார்ப்படுத்தி வருவது; மருத்துவர்கள், செவிலியர்களுக்கு குழந்தைகளை கையாள பயிற்சி தருவது; குழந்தைகளுக்கான ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளை ஏற்பாடு செய்வது என்றெல்லாம் செய்கிறது.
ஆகவே இதன்மூலம் இங்கே குழந்தைகளுக்கு கொரோனா வந்தாலும், அதை நாம் கொஞ்சம் எளிதாக கையளாலாம். இன்னும் உறுதியாக நாம் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக ஆக்கவேண்டுமென்றால்... அதற்கு பெரியவர்களாகிய நாம் தடுப்பூசிகளை கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம்தான் அவர்களுக்கு நோயை கடத்தி கொண்டு செல்கிறோம். நாம் நோய்க்கு எதிராகிவிட்டாலே, குழந்தைகளுக்கான கொரோனா தடுக்கப்படும்; இறப்பு நிச்சயம் வெகுவாக குறையும்.
இப்போதைக்கு கொரோனா 3 வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்பது யூகம்தானே தவிர, கட்டாயம் இல்லை. இந்தோனேஷியாவில் ஏற்பட்டால் இங்கும் ஏற்பட வேண்டும் என்றும் இல்லை. ஆகவே யாரும் பயப்பட வேண்டாம். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, நோயிலிருந்து தம்மை காப்பதில்மட்டும் இப்போதைக்கு கவனம் செலுத்தினால் போதும். மற்றவை, தன்னால் சரியாகும்.
ஒருவேளை பெரியவர்கள் அதிகளவில் தடுப்பூசி எடுக்கும் முன்னர் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டால், கொஞ்சம் நிலைமை கைமீறலாம். அந்த ரிஸ்க்கை மக்களும் அரசும் எடுக்காது என நம்புவோம். ஒருவேளை அரசு அம்முடிவை எடுத்தாலும், அதை குழந்தைகளுக்கான தடுப்பூசி வந்தபிறகு எடுத்தால் போதுமென நினைக்கிறேன்” என்றார்.
இந்தியாவை பொறுத்தவரை ‘குழந்தைகளை காக்க, பெரியவங்கதான் பொறுப்பா இருக்க வேண்டும்’ என்பதே மருத்துவரின் சுருக்கமான கருத்தாக இருக்கிறது. இருப்போமாக!

