உடலில் சேரும் கொழுப்புச்சத்தின் வகைகள்... எந்தக் கொழுப்பு ஆபத்தானது - நிபுணர் விளக்கம்

உடலில் சேரும் கொழுப்புச்சத்தின் வகைகள்... எந்தக் கொழுப்பு ஆபத்தானது - நிபுணர் விளக்கம்
உடலில் சேரும் கொழுப்புச்சத்தின் வகைகள்... எந்தக் கொழுப்பு ஆபத்தானது - நிபுணர் விளக்கம்

நம்மில் பலரும் உடல் எடை அதிகரிப்பை கொழுப்புடன் ஒப்பிட்டுக் கூறுவோம். ஆனால் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கும் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுடா திவேகர். கொழுப்பை எடையுடன் வைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது எனக் கூறும் ருஜுடா உடலில் உள்ள கொழுப்பு குறித்தும் அதன் வகைகள் குறித்தும் விளக்கியிருக்கிறார்.

உடலில் நாம் கொழுப்பு எனக் குறிப்பிடுவது கொழுப்பு செல்கள் மற்றும் புரதத்தால் ஆன லிப்போப்ரோட்டீனைத்தான். உடலிலுள்ள கொழுப்புச்சத்தை நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு மற்றும் மிகவும் கெட்ட கொழுப்பு என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் என்கிறார்.

கொழுப்புச்சத்தின் வகைகள்!

அதிக புரதம் மற்றும் குறைவான கொழுப்பு உள்ளதால் அதிக அடர்த்தியான லிப்போப்ரோட்டீன்( High-Density Lipoprotein) இதயத்தை பாதுகாக்கும். அதுவே குறைந்த அடர்த்தியான லிப்போப்ரோட்டினில்(Low-Density Lipoprotein) கொழுப்பு அதிகம் உள்ளதால் இதனைக் கெட்ட கொழுப்பு என்கிறோம். ஆனால் இது கெட்ட கொழுப்பு என்று மிகைப்படுத்தும் அளவிற்கு கெட்ட கொழுப்பு அல்ல. இது ஹார்மோன் உற்பத்தி, வைட்டமின் டியை தொகுத்தல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்டுகளின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது. மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கவும் உதவுகிறது.

மிகுந்த குறைவான அடர்த்தியான லிப்போப்ரோட்டீன்(Very Low-Density Lipoprotein) என்பது மிகவும் கெட்ட கொழுப்பு என்கிறார் ருஜுடா. இவை டிரைகிளைசரைடுகள் என்று சொல்லக்கூடிய முழுமையான கொழுப்புகள் என்றும், இது உடலில் மிகமிக குறைவாகவே இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.

உடலில் கொழுப்பின் அளவு சாதகமற்ற நிலையில் இருப்பவர்கள் ட்ரைகிளைசரைடுகளின் அளவைக் குறைத்து அதிக அடர்த்தியான லிப்போப்ரோட்டீனின் அளவை அதிகரிக்கவேண்டும் என்கிறார். இல்லாவிட்டால் உடலில் இன்சுலின் சுரப்பு தடைபட்டு நீரிழிவு நோய் வர வழிவகுத்துவிடும்.

உணவுப் பழக்கவழக்கங்கள்!

உடலில் கொழுப்பு அளவைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் கவனம் செலுத்தவேண்டும். ஆனால் இயற்கையாகவே கொழுப்புச்சத்து மிகுந்த பால், முட்டை மற்றும் இறைச்சி போன்றவற்றை உண்பது குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்கிறார். ஆனால் அவற்றை எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனம் இருப்பது அவசியம் என்கிறார். மேலும் நிலக்கடலை, முந்திரி மற்றும் தேங்காய் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதில் பிரச்னையில்லை. ஆனால் அவற்றை ஆல்கஹாலுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது; குறிப்பாக வறுத்து உண்பதுகூடாது என்கிறார். மேலும் எந்த அளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதும் கட்டாயம் கருத்தில்கொள்ளவேண்டிய ஒன்று என்கிறார்.

உணவுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பற்றிக் கூறுகையில், நாம் எந்த பகுதியில் வசிக்கிறோமோ அந்தப் பகுதிக்கு ஏற்றவாறு எண்ணெயை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவேண்டும் என்கிறார். மேலும் உடற்பயிற்சி, புகைப்பிடித்தல், மது அருந்துதல், மரபணு காரணிகள் மற்றும் வயது போன்றவை உடலில் கொழுப்பின் அளவை தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதேசமயம் எடையைக் குறைக்க எண்ணி கார்போஹைட்ரேட்டை முற்றிலும் தவிர்த்தல் மற்றும் நீண்ட நேரம் பட்டினிகிடத்தல் போன்றவையும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை மறக்கவேண்டாம். ஆனால் காற்றடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும் என்கிறார். மேலும் வாரத்திற்கு குறைந்தது மூன்று மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வதும், நன்றாக உறங்குவதும் இதயம் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகளை தவிர்க்க அவசியமானது என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com