"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்!" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்

"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்!" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்
"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்!" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்

"ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக நான் அடித்ததுதான் கடைசி கோல்” என 1960-ஆம் ஆண்டு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணியில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த 'ஒலிம்பியன்' சைமன் சுந்தரராஜ் தனது நினைவலைகளைப் பகிர்ந்திருக்கிறார்.

'ஆல் இந்தியா ஃபுட்பால் பெடரேஷன்' 1937-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றதை அடுத்து 1948-ஆம் ஆண்டு முதல் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) உடன் இணைந்தது. அதன்பிறகு 1954-ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தொடங்கப்பட்ட காலத்தில், அதன் முதல் உறுப்பு நாடாக இந்தியா இணைந்தது.

1950 முதல் 1960 வரையிலான காலம், இந்திய கால்பந்து வரலாற்றில் பொற்காலம் எனலாம். 1950-ஆம் ஆண்டு இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றும், பயணச்செலவு போதுமான பயிற்சியின்மை அணித் தேர்வில் குழப்பம் போன்ற காரணங்களால் பங்கேற்கவில்லை. 1948, 52, 56, மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய இந்திய கால்பந்து அணி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை தங்கப் பதக்கமும், ஒரு முறை வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளது.

கால்பந்து போட்டியில் ஜாம்பவானாக வளம்வந்த இந்திய கால்பந்து அணி, சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் இப்போது 105-வது இடத்தை பிடித்து மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதேபோல் 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய கால்பந்து அணி பங்கேற்கவில்லை.

குட்டிக் குட்டி நாடுகள் எல்லாம் கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது பெரிய நாடான இந்தியாவால் பங்கேற்க முடியாமல் போனதற்கான காரணத்தை 1960-ஆம் ஆண்டு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணியில் விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த 'ஒலிம்பியன்' சைமன் சுந்தரராஜிடம் கேட்டோம்.

உங்கள் இளமைப் பருவம்...

"தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலூகா கண்ணந்தங்குடி கீளையூரில் 1937 ஆம் ஆண்டு பிறந்த நான், தஞ்சாவூர் தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பஸ்ட் பார்ம் வரை படிச்தேன்."

கால்பந்து மீது ஆர்வம் வந்தது எப்படி?

"தஞ்சாவூர் மாவட்டம் விளையாட்டுத் துறையில பல சாதனைகளை செய்த மாவட்டம். அதேபோல கால்பந்து, கபடி, ஹாக்கி, தடகளம் போன்ற விளையாட்டுகளில் பல சாதனை வீரர்களை உருவாக்கிய மாவட்டம். அதனால் விளையாட்டுப் போட்டிகளை அதிகம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுதான் என்னை கால்பந்து வீரனா உருவாக்கி இருக்கும் என்று நினைக்கிறேன்."

ஆரம்ப கால கால்பந்து வீரனாக...

"எனக்கு விவரம் தெரிந்த காலத்துல இருந்து கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். ஆரம்ப காலத்தில் திருவிழா கடைகளில் விற்கப்படும் சின்ன ரப்பர் பால வச்சு விளையாண்டோம். பந்து இல்லன்னா பேப்பர உருண்டையாக சுருட்டி அதை வைத்து விளையாடுவோம். பள்ளிக் கூடத்தில் விளையாடி கழித்த ஓட்டை மற்றும் கிழிந்துபோன பந்தை ஏலம் விடுவாங்க அதை பிரண்ட்ஸ்கிட்ட காசு கலெக் பண்ணி ஏலத்துல எடுத்து கிழிந்த பந்தை தைத்து அதை வைத்து விளையாடுவோம்."

பள்ளியில் கால்பந்து வீரனாக...

"நான் பயின்ற தூய அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் இருதயம், ஸ்வார்ட்ஸ் அந்தோணி ஆகியோர் உடற்கல்வி ஆசியர்களாக இருந்தனர். அவர்கள் இருவருமே சிறந்த கால்பந்து வீரர்கள் தஞ்சை மாவட்டத்தின் பழமையான சிறந்த கால்பந்து அணியான யுனைடெட் கால்பந்து அணிக்காக விளையாடியவர்கள். அவர்கள் எனக்கு சிறப்பான பயிற்சி அளித்தனர். ஸ்கூல் டீம் பயிற்சியின்போது அவர்கள் இருவரும் எங்களுடன் விளையாடுவார்கள். ரொம்ப பரபரப்பா இருக்கும்." 

கால்பந்து வீரராக கிடைத்த அங்கீகாரம்?

"சின்ன வயதில் இருந்து ஃபுட்பால் விளையாண்டாலும், 6ஆம் வகுப்பு படிக்கும்போது ஸ்கூல் சப்-ஜூனியர் டீமில் விளையாடிய அன்றுதான் சப்-ஜூனியர் பிளேயர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று."

யுனைடெட் கிளப் அணிக்காக விளையாடிய அனுபவம்...

"10ஆம் வகுப்பு படிக்கும்போதே யுனைடெட் கிளப் அணிக்காக விளையாடினேன். பல கால்பந்து ஜாம்பவான்கள் விளையாடிய பழமையான சிறந்த அணி யுனைடெட் கிளப். இந்திய அணியின் சிறந்த வீரரும் இந்திய ஒலிம்பிக் அணியில் விளையாடியவருமான கிட்டு இந்த கிளப் அணிக்குத்தான் விளையாடினார். அவர், பெங்கால் சென்ற பிறகு அவரது இடம் காலியாக இருந்தது. அந்த இடத்தை நிறப்பும் பாக்கியம் எனக்கு கிடைத்தது."

மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பற்றி...

"பள்ளிப்படிப்பை முடித்து 1957, 58 ஆம் ஆண்டு சென்னை ஒய்.எம்.சி.எ கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்தேன். அந்த படிப்பை முடித்தநான் ஆசிரியர் வேலைக்கு செல்லவில்லை. சதர்ன் ரயில்வேயில் ஸ்போர்ஸ் கோட்டாவுக்கு அப்ளிகேஷன் போட்டியிருந்தேன். அதில் தேர்வுபெற்று ரயில்வே கார்டாக ஐந்து வருடம் பணியாற்றினேன்."

இந்திய அணிக்கு தேர்வானது பற்றி...

"1959-ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் கலந்துகொண்டு மெட்ராஸ் ஸ்டேட் அணிக்காக விளையாடினேன். 19 வயதே நிரம்பிய நான், அந்தப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணிக்கு தேர்வு பெற்றேன்."

ப்ரீ ஒலிம்பிக் போட்டி வாய்ப்பு பற்றி...

"இந்தியா - இந்தோனேசியா அணிகளுக்கிடையே ப்ரீ ஒலிம்பிக் போட்டி 1959ஆம் ஆண்டு நடைபெற்றது. இதற்காக கல்கத்தாவில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியில் தேர்வானது மட்டுமின்றி மெயின் டீமில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தியா - இந்தோனேசியா அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதிபெறும். விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 4:2 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியா அணியை வென்றது. இந்தப் போட்டியில் முதல் மற்றும் மூன்றாவது கோலை நான் அடித்தேன். கால்பந்து ஜாம்பவான்கள் நிறைந்த கல்கத்தாவில் நான் விளையாடியதைப் பார்த்த வீரர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அதன் பின்பு இந்தோனேசியாவில் இந்தியாவும் இந்தோனேசியாவும் மோதிய மற்றொரு போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று ஒலிம்பிக் வாய்ப்பை உறுதிபடுத்தியது. இதில் நான் ஒரு கோல் அடித்தேன்."

ஒலிம்பிக் போட்டி பற்றி...

"17-வது ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி தலைநகர் ரோம் நகரில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் இந்தியா, பிரான்ஸ், ஹங்கேரி, பெரு ஆகிய நாட்டைச் சேர்ந்த அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றன. இந்தியா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் போட்டியில் இரு அணிகளும் 1 கோல் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது. ஹங்கேரி அணியுடனான இரண்டாவது போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. பெரு அணியுடன் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் 2:1 என்ற கோல்கணக்கில் தோல்வியை தழுவி போட்டியிலிருந்து வெளியேறியது. பெரு நாட்டுடன் நான் அடித்த ஒரு கோல் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் அடித்த கடைசி கோலாகும். அதன்பிறகு இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை. அதனால் கோலடிக்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவில்லை. இது வருத்தமான தகவல்தான்." 

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்ற தமிழர்... 

"இந்திய கால்பந்து அணியில் தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ஒரே தமிழன் என்பதில் ரொம்ப சந்தோஷம். ஆனால், 1956 ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய கால்பந்து அணியில் தமிழர் கிட்டு விளையாடினார். ஆனால், அவர் கொல்கத்தா மாநிலத்தின் சார்பாக கலந்துகொண்டார். அதே போல் என்னோடு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட தமிழரான தங்கராஜ் செகந்தராபாத் மாநிலத்தின் சார்பாக கலந்து கொண்டார்."

இந்திய அணியின் இன்றைய நிலை?

"ரொம்ப பரிதாபமாகத்தான் இருக்கு. ஆசிய கண்டத்தில் இருந்து 16 டீமில் ஒரு டீம்தான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும். 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்திய அணி, ஈரானுடன் விளையாடி தோல்வியை தழுவியது. அதன் பிறகு முயற்சியும் இல்லை வெற்றி பெறத் தேவையான பயிற்சியும் இல்லை."

பல குட்டி நாடுகள் நன்றாக விளையாடும்போது பெரிய நாடான இந்தியாவில் ஏன் இந்த நிலை?

"அதிகமாக ஃபுட்பால் விளையாடுறது யார் என்று பார்த்தால், ரொம்ப ஏழ்மை நிலையில இருக்குவங்கதான். பணக்காரன் ஃபுட்பால் விளையாட மாட்டான். ஏன்னா அது ரொம்ப கஷ்டமான கேம். வேலை செய்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை பாக்குற நம்மால் புரஃபஷனலா ஃபுட்பால் ஆட முடியாது. மற்ற நாடுகளைபோல் முழுநேர கால்பந்து வீரர்களை உருவாக்க வேண்டும். வெளிநாடுகளில் கால்பந்து விளையாடும் வீரருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்குது. அவனுக்கு விளையாடுவதை தவிர வேற வேலையில்லை. நம் நாட்டில் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உணவு இல்லை. அதை முதலில் சரிபண்ண வேண்டும். நிறைய குறைகள் இருந்தும் தான் பங்கேற்ற 4 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது."

இந்தியாவில் கால்பந்து வளர ஆலோசனை...

"நாங்கள் சொல்லும் ஆலோசனைகளை கால்பந்து கழகங்கள் கேட்பதுமில்லை; எங்களை மதிப்பதுமில்லை. எங்கள் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள அமைதியாக இருக்குறோம். பெற்றோரிடம் விளையாட்டின் மீது ஆர்வமில்லை. விளையாட்டு வீரர்களை பள்ளி, கல்லூரி நிர்வாகம் ஊக்கப்படுத்த வேண்டும். சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு உடற்பயிற்சி அளிக்க வேண்டும் அப்போதுதான் குழந்தைகள் நல்ல திடத்துடன் உயரமாக வளர வகைசெய்யும்." 

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகள் பற்றி...

"இந்த போட்டியால் எந்த விதத்திலும் இந்தியாவில் கால்பந்து வளர்ச்சியடையாது. ஓய்ந்து போன விளையாட்டு வீரர்களை கூட்டி வந்து இங்கு விளையாட வைக்கிறார்கள். அந்த வீரர்களிடம் ஒழுக்கம் இல்லை. பந்தை விட்டுவிட்டு நடுவரை முறைப்பது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதை பார்க்கும் இளம் விளையாட்டு வீரன் கெட்டுப்போவார்கள். இதில். விளையாடும் வீரர்கள் பெல்லும் பிரேக்கும் இல்லாத சைக்கிள் போல இருக்கிறார்கள்."

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் நிலை?

"பரிதாபத்திற்கு உரிய வகையில்தான் இருக்கிறது. மகளிர் பளுதூக்கும் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கம் பெற்றதை தவிர இதுவரை வேறு பதக்கம் பெற்றதாக தெரியவில்லை. பதக்கம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் சென்ற பல வீரர்கள் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

ஒலிக்பிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த ஹாக்கி அணி நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் 7:0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியை டிவியில் பார்த்த எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால், இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணியுடனான வெற்றி சிறிது ஆறுதல் அளித்தது.

பல அணிகளுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கிறோம். நல்ல விசயம்தான் ஆனால் ரிசல்ட்? இந்தியாவில் திறமையான எவ்வளவோ பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள், அவர்களை பயன்படுத்தி திறமையான அணிகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இனிவரும் சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்திய அணி தனது திறமையை நிரூபிக்க முடியும்."

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com