என்ன செய்கிறார்கள் இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தேர்ந்தெடுப்பது பயிற்சியாளர் வேலையை. இல்லையென்றால் வர்ணனையாளர் ஆகிவிடுகிறார்கள் சேனல்களில்! இது எதுவுமின்றி சிலர் வேறு வேலை பார்க்கக் கிளம்பிவிடுகிறார்கள், தங்களுக்கு வசதியாக.
இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஜோகிந்தர் சர்மா:
ஜோகிந்தரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 2007-ம் ஆண்டு நடந்த டி20 சாம்பியன்ஷிப் போட்டியில், ஃபைனலில் பாகிஸ்தானை சந்தித்தது இந்தியா. 157 ரன்னை சேஸ் செய்த பாகிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் வேண்டும். ஜோகிந்தர் பந்துவீச வந்தார். ரசிகர்களுக்கும் அவருக்கும் ஏகப்பட்ட பதற்றம். கூல் கேப்டன் தோனி, அவருக்கு நம்பிக்கையளித்துக் கொண்டே இருந்தார். முதல் பந்தை சிக்சருக்கு விரட்டினார் மிஸ்பா உல் ஹக். பதற்றம் பற்றிக் கொண்டது. அடுத்த பந்தை மிஸ்பா, பின் பக்கம் தூக்கி அடிக்க, ஓடி வந்த ஸ்ரீசாந்த் அந்தப் பந்தை லாபகமாகப் பிடித்தார். அவ்வளவுதான் இந்திய அணி, பலத்த ஆரவாரத்துக்கு இடையே வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு காரணமான ஜோகிந்தர், கிரிக்கெட்டை விட்டுவிட்டார்.
ஹரியானா போலீஸில் சார் இப்போது டிஎஸ்பி! விக்கெட்டுகளை துரத்திக்கொண்டிருந்தவர், இப்போது கிரிமினல்களை துரத்திக்கொண்டிருக்கிறார்.
மொகந்தி:
ஒடிசாவில் இருந்து வந்த வேகப்பந்துவீச்சாளர். 1990-ல் நடந்த சஹாரா கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மொகந்தியின் பந்துவீச்சுதான் காரணம். 4 வருடம் இந்திய அணியில் நிலையாக இருந்த இவர், மோசமான ஃபார்ம் காரணமாக பின்னர் நீக்கப்பட்டார். முதல் தர கிரிக்கெட்டில் நானூறுக்கு மேல் விக்கெட் வீழ்த்திய மொகந்தி இப்போது ஒடிசாவின் தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அம்மாநில ரஞ்சி அணி பயிற்சியாளர் ஆகியிருக்கிறார், கடந்த சில வருடங்களுக்கு முன்.
அர்ஷன் கான்:
பாகிஸ்தானின் ஸ்பின்னர். இவர் சுழலில் சிக்காத இந்திய வீரர்கள் இல்லை. 90களின் இறுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இருந்த அர்ஷத், இப்போது டாக்ஸி டிரைவர்! ஆச்சரியம்தான். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர வீதிகளில், இந்த உயர்ந்த ஸ்பின்னரின் கார் அங்கும் இங்கும் சுற்றுவதை நீங்கள் இப்போதும் பார்க்க முடியும்!
கிறிஸ் கெய்ன்ஸ்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர். வேகப்பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் கலக்கிய கிறிஸ் கெய்ன்ஸ், பார்ப்பதற்கு ஹாலிவுட் நடிகர் போலவே இருப்பார். மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் பந்தாடப்பட்ட கெய்ன்ஸ், இப்போது டிரக் ஓட்டி வாழ்க்கையை ஓட்டுகிறார்! கூடவே பஸ்- ஸ்டான்ட்களை சுத்தப்படுத்தும் வேலையையும் இருக்கிறது அவருக்கு.
ஷாக் தானே!
முகமது யூசுப்:
பாகிஸ்தானில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் யூசுப். கிறிஸ்தவரான இவர், அந்நாட்டு அணியின் சேர்ந்த பின் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ’நின்று’ ஆடியவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், டெய்லராகி இருக்கிறார் யூசுப். சில நேரங்களில் ஆட்டோ டிரைவராகவும் வேலையை தொடர்கிறார்.
ஹென்றி ஓலங்கா:
ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர். ஹேர்ஸ்டைலுக்காகவே பேசப்பட்டவர். ஓய்வுக்குப் பிறகு பாடகர் ஆகியிருக்கிறார் ஓலங்கோ. சின்ன வயதிலேயே நன்றாக பாடுவாராம்.
நாதன் அஸ்லே:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன். ஓய்வுக்குப் பிறகு ரேஸ் கார் டிரைவிங்கிற்கு தாவிவிட்டார் அஸ்லே. கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும்போதே ரேஸ்தான் என் பேவரைட்டாக இருந்தது என்கிறார் ஆஸ்லே.
கிறிஸ் ஹாரிஸ்:
1990-களில் நியூசிலாந்தின் முக்கியமான ஆல் ரவுண்டர் கிறிஸ் ஹாரிஸ். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், ஆஸ்திரேலியாவில் மெடிக்கல் ரெப்பாக வேலை செய்துகொண்டிருக்கிறார்.