கிரிக்'கெத்து' 24: நூற்றாண்டின் சிறந்த பந்து - ஷேன் வார்னே நினைவுகள்!

கிரிக்'கெத்து' 24: நூற்றாண்டின் சிறந்த பந்து - ஷேன் வார்னே நினைவுகள்!
கிரிக்'கெத்து' 24: நூற்றாண்டின் சிறந்த பந்து - ஷேன் வார்னே நினைவுகள்!

“நூற்றாண்டின் சிறந்த பந்து” என போற்றப்படும் அந்த பந்தை வீசியது வேகப்பந்து வீச்சாளர் அல்ல. அதை வீசியது ஒரு சுழற்பந்து வீச்சாளர். சுழற்பந்து என்றதும் எல்லோருக்கும் ஆசிய கண்டத்தை சேர்ந்த டாப் கிளாஸ் ஸ்பின்னர்களின் பெயர்கள் மனக்கண்ணில் வந்து செல்லலாம். ஆனால் அதை வீசியது ஆஸ்திரேலிய கண்டத்தை சேர்ந்த காலஞ்சென்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. அவர் பூவுலகை விட்டு பிரிந்து சென்றிருந்தாலும் அவர் வீசிய அந்த ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்றென்றும் கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும். அது குறித்து இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

வேகப்பந்து வீச்சு பூமியில் பூத்த சுழல் சூறாவளி!

ஆஸ்திரேலிய அணிக்காக மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் வார்னே. அதன் மூலம் மொத்தம் 708 விக்கெட்டுகளை கைப்பற்றியவர். அதில் கிட்டத்தட்ட 63.3 சதவிகித விக்கெட்டுகளை அவர் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் வீழ்த்தியுள்ளார். இந்த இரு நாடுகளிலும் அவர் கைப்பற்றியுள்ள விக்கெட்டுகளின் மொத்த எண்ணிக்கை 448. அதில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 319 விக்கெட்டுகளை வார்னே கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இங்கிலாந்தில் மொத்தம் 129 விக்கெட்டுகள். அந்த 129-இல் அவர் கைப்பற்றிய முதல் விக்கெட் தான் ‘Ball of The Century’ என வர்ணிக்கப்படுகிறது. ஆசியாவில் மொத்தம் 127 விக்கெட்டுகளை வார்னே கைப்பற்றியுள்ளார். இது தவிர 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 293 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அவர். 

நூற்றாண்டின் சிறந்த பந்து!

சுழற்பந்து வீசுவதென்பது ஒரு கலை. அதில் கைதேர்ந்தவர் வார்னே. 1992, ஜனவரி 2-ஆம் தேதியன்று ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானவர் வார்னே. ‘Ball of The Century’-யை வீசுவதற்கு முன்பு அவர் விளையாடியது வெறும் 11 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான். வீழத்தியிருந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 31. இளம் வீரரான வார்னே, இங்கிலாந்து மண்ணில் 1993-இல் நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார். 

அதுவும் அந்த தொடரின் முதல் போட்டியிலேயே விளையாடும் வாய்ப்பு வார்னேவுக்கு கிட்டியது. இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் போட்டி. அதுவும் ஆஷஸ் தொடரில் என்பது ரொம்பவே ஸ்பெஷலான தருணம். ஆறு போட்டிகள் கொண்ட அந்த தொடரின் அனைத்து போட்டியிலும் வார்னே விளையாடினார். 

இங்கிலாந்து மண்ணில் அவர் வீசிய முதல் பந்தில் விக்கெட் வீழத்தியிருந்தார். கிரிக்கெட் உலகை வேகப்பந்து வீச்சாளர்கள் டாமினேட் செய்து கொண்டிருந்த அந்த காலத்தில் அந்தவொரு விக்கெட் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளரால் என்ன அப்செட் கொடுக்க முடியும் என்பதை வெளிகாட்டி இருந்தார் வார்னே.

இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங் தான் வார்னே இங்கிலாந்தில் கைபற்றிய முதல் விக்கெட். அவரை க்ளீன் போல்ட் செய்திருந்தார். கேட்டிங் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தரமாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன். அதனால் இளம் வீரர் வார்னேவின் பந்துவீச்சை அவர் வெளுத்து வாங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. 

வலது கை பேட்ஸ்மேனான கேட்டிங்கிற்கு லெக்-பிரேக்காக அந்த டெலிவரியை வார்னே வீசியிருந்தார். பந்து அப்படியே பயணித்து லெக் ஸ்டம்பிற்கு ஏழு இன்ச் வெளியே பிட்ச்சானது. அதை டிஃபன்ஸ் செய்ய முயன்றார் கேட்டிங். வழக்கமாக இது மாதிரியாக வீசப்படும் டெலிவரிகள் பேட்ஸ்மேனின் பேடிலோ அல்லது பேட்டிலோ பட்டால் கூட அவுட்டாக வாய்ப்பில்லை. இருந்தும் தன் விக்கெட்டை தற்காத்துக் கொள்ள அன்று அதனை செய்தார் கேட்டிங். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களின் காலடித் தடம் பதிந்த இடத்தில் பிட்ச்சான காரணத்தால் வழக்கத்தை விட கூடுதலாக பந்து டேர்னாகி (Turn) இருந்தது. அப்படியே அந்த பந்து கேட்டிங் பேட்டின் அவுட்சைட் எட்ஜை கடந்து ஆப்-ஸ்டம்பை பதம் பார்த்தது. களத்தில் பேட் செய்து கொண்டிருந்த கேட்டிங்கிற்கு ஒன்றுமே புரியவில்லை. “எல்லாமே சரியாக தானே செய்தோம். அப்புறம் எப்படி?” என்ற தொனியில் சில நொடிகள் ஆடுகளத்தை பார்த்துவிட்டு பெவிலியன் திரும்பினார். 

பிறகு அந்த போட்டி உட்பட தொடரையும் ஆஸ்திரேலியா வென்றது. அந்த தொடரில் அதிகபட்சமாக வார்னே 34 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். 

வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள கேட்டிங்!

“ஈடுசெய்ய முடியாத இழப்பு இது. அவரது குடும்பத்திற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவித சந்தேகமும் இன்றி நான் இதை சொல்கிறேன். வார்னே தான் நம்பர் ஒன் கிரிக்கெட்டர். எத்தனையோ சிறந்த கிரிக்கெட் வீரர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், லெக் ஸ்பின்னர்கள் வந்து செல்லலாம். ஆனால் வார்னே என்றென்றும் எனது பார்வையில் நம்பர் ஒன் வீரர். 

ஒரு கிரிக்கெட் வீரருக்கு தேவையான அனைத்து குணாதிசயங்களையும் கொண்டவர். அதை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தன்னம்பிக்கை, ஒழுக்கம், ஆர்வம் கொண்டுள்ள அவர் அதை அனைத்தையும் அனுபவித்து விளையாடக் கூடியவர். நிச்சயம் அவர் பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பார்” என மைக் கேட்டிங் தனது அஞ்சலியில் தெரிவித்துள்ளார். 

52 வயதில் வார்னே மரணத்தை தழுவினார். அவருக்கு நமது அஞ்சலி. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com