'ஆன்லைனிலேயே குடியுரிமை...' - எஸ்டோனியா... ஒரு வியத்தகு டிஜிட்டல் தேசத்தின் கதை!

'ஆன்லைனிலேயே குடியுரிமை...' - எஸ்டோனியா... ஒரு வியத்தகு டிஜிட்டல் தேசத்தின் கதை!
'ஆன்லைனிலேயே குடியுரிமை...' - எஸ்டோனியா... ஒரு வியத்தகு டிஜிட்டல் தேசத்தின் கதை!

"அமெரிக்காவைப் பாருங்கள்", "ஜப்பானைப் பாருங்கள்" என முன்னேறிய நாடுகளை மேற்கோள் காட்டுவது நமக்கு பழக்கமானதுதான். ஆனால், டிஜிட்டல் யுகத்தில் "எஸ்டோனியாவைப் பாருங்கள்" என மேற்கோள் காட்டுவதே பொருத்தமாக இருக்கும். அதுமட்டும் அல்ல, எஸ்டோனியாவை முன்னுதாரணமாக கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில், எஸ்டோனியா டிஜிட்டல் தேசமாக அறியப்படுவதுதான். அதுமட்டும் அல்ல, பூகோள இருப்பிடம் காரணமாக பால்டிக் நாடு என குறிப்பிடப்படும் எஸ்டோனியா அதன் டிஜிட்டல் சாதனைகளுக்காக பெரும்பாலும், உலகின் மிகவும் மேம்பட்ட 'டிஜிட்டல் தேசம்' என்றே வர்ணிக்கப்படுகிறது.

எஸ்டோனியாவின் டிஜிட்டல் அருமை பெருமைகளை பாராட்டி எண்ணற்ற கட்டுரைகளும், பத்திகளும் எழுதப்பட்டுள்ளன. அண்மையில் பிரபல பத்திரிகையாளரான மார்டின் ஐவன்ஸ் என்பவரும் எஸ்டோனியா புகழ்பாடி ஒரு பத்தி எழுதியுள்ளார்.

ஐவன்ஸ் தனது பத்தியில், 'டிஜிட்டல் பூர்வகுடிகளாக இருக்க ஏற்ற நாடு' என எஸ்டோனியாவை வர்ணித்திருக்கிறார். அதற்கான காரணங்களையும் அவர் அழகாக விவரித்திருக்கிறார்.

பிரிட்டனின் புகழ்பெற்ற சண்டே டைம்ஸ் நாளிதழின் முன்னாள் ஆசிரியரான ஐவன்ஸ், கொரோனா சூழலில் மற்ற வகை இன்னல்களோடு, டிஜிட்டல் அதிகாரத்தன்மையும் சேர்ந்துகொண்டு படுத்துகிறது எனும் மென் புலம்பலுடன்தான் இந்தப் பத்தியை துவக்கியுள்ளார்.

நேரடி சந்திப்புகளைத் தவிர்ப்பதற்காக டிஜிட்டல் முறையில் சேவைகளை நாட வேண்டிய தேவை இருந்தாலும், பாஸ்வேர்டுகளுடனான போராட்டமும், எந்த சேவைக்கு அரசின் எந்த தளத்திற்கு செல்வது எனத் தெரியாத திண்டாட்டமும் கண்ணை கட்டுக்கிறது எனும் பாணியில் எழுதியுள்ளவர், 'இதற்கெல்லாம் தீர்வு சின்னஞ்சிறிய நாடான எஸ்டோனியாவுக்கு செல்வதுதான்' என்று கூறுகிறார்.

எஸ்டோனியாவில் நீங்கள் டிஜிட்டல் குடிமகனாக அந்நாடு அளிக்கும் டிஜிட்டல் சேவைகளை எல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

எஸ்டோனியாவில் அப்படி என்ன எல்லாம் டிஜிட்டலில் செய்யலாம் என்றால், வருமான வரி செலுத்துவதில் துவங்கி, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது வரை எல்லாவற்றையும் இணையம் மூலமே செய்து கொள்ளலாம். மருந்து வாங்குவது, மருத்துவமனையில் பதிவு செய்வது, வீட்டுப் பழுதுகளை மேற்கொள்வது என இன்னும் பல சேவைகளை இணையம் மூலமே பெறலாம். இந்த சேவைகளை அனைத்தையும், அரசின் ஒற்றை இணையதளம் வாயிலாக எளிதாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என்பது மட்டும் அல்ல, இதற்கு தேவைப்படுவது எல்லாம் டிஜிட்டல் அடையாள அட்டை மட்டும்தான்.

நம் நாட்டில் ஒற்றைச் சாளர சேவை என்று சொல்லப்படுவதை, எஸ்டோனியா நடைமுறையில் அனைத்து அரசு துறை சார்ந்த சேவைகளுக்குமாக இணையம் மூலம் வழங்கி கொண்டிருக்கிறது. அதுமட்டும் அல்ல, இணைய வழி சேவைகளால் எஸ்டோனியா ஜிடிபியில் இரண்டு சதவீதம் மிச்சமாகிறதாம்.

எஸ்டோனியாவின் இந்த டிஜிட்டல் பாய்ச்சலுக்கு காரணம், அதன் வரலாறு. சோவியத் யூனியன் ஆட்சியின் கீழ் இருந்த எஸ்டோனியா, 1991-ல் சுதந்திரம் பெற்றது. அந்த ஆண்டுதான் வைய விரிவு வலை (WWW) அறிமுகமானது என்பது தற்செயலானது அல்ல. புதிய நாடான எஸ்டோனியா தனது எதிர்கால வளர்ச்சிகாக இணையத்தையும் (வலை), டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் தேர்வு செய்து அவற்றில் கவனம் செலுத்தியது. இதன் பயனாக அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் அளிப்பதை நோக்கி முன்னேறியது.

இன்று வங்கிச் சேவை முதல் வாக்களிப்பது வரை இணையம் மூலமே எஸ்டோனியா வழங்கி கொண்டிருக்கிறது. இதனால்தான் பலரும் எஸ்டோனியா புகழ் பாடுகின்றனர். பத்திரிகையாளர் ஐவன்சும், 'எஸ்டோனியா போவோம்' என்கிறார்.

நாமும்தான் 'டிஜிட்டல் இந்தியா' என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்; ஆனால், வருமான வரித்துறையின் புதிய இணையதளம் படுத்தும் பாட்டை தாள முடியவில்லையே என புலம்பும் நிலையில், எஸ்டோனியா பற்றி இப்படி சொல்லப்படுவது கொஞ்சம் பொறாமைப்பட வைக்கும்தான்.

எல்லாம் சரி, எஸ்டோனியாவின் டிஜிட்டல் வசதிகளை அனுபவிக்க, அதன் குடிமக்களுக்குதான் கொடுத்து வைத்திருக்கிறது, நாம் என்ன செய்ய என பெருமூச்சு விடுவதாக இருந்தால், நீங்களும் எஸ்டோனியா குடியுரிமை பெறலாம் எனும் செய்தியை மனதில் கொள்ளுங்கள்.

ஆம், எஸ்டோனியா பலருக்கும் டிஜிட்டல் குடியுரிமை வழங்கத் தயாராக உள்ளது. இதற்காக அந்நாட்டிற்கு குடிபெயற வேண்டும் என்றில்லை. அந்நாட்டின் மின்னணு குடியுரிமையை விண்ணபித்து பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் உலகின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் எஸ்டோனியாவின் டிஜிட்டல் குடிமக்களாக முடியும்.

எஸ்டோனியா டிஜிட்டல் குடியுரிமையின் அடையாளமாக அடையாள அட்டையும் வழங்கப்படும். இந்த அடையாள அட்டையை டிஜிட்டல் சேவைகளின் சொர்க்கத்திற்கான திறவுகோள் என வர்ணிக்கலாம்.

ஆம், எஸ்டோனிய டிஜிட்டல் அடையாள அட்டை இருந்தால், அந்நாட்டின் இணைய வங்கிச் சேவை உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். தொழில்முனைவோர் அந்நாட்டில் மெய்நிகர் அலுவலகம் அமைத்து உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யலாம். இன்னும் எண்ணற்ற விதங்களில் பயன்பெறலாம்.

இந்த டிஜிட்டல் குடியுரிமையும் எளிதாகவே வழங்கப்படுகிறது. யார், எப்படி பெறலாம் என்பதை அறிய எஸ்டோனியா இணையதளம் சென்று பார்க்கவும். அந்த இணையதளம் இதுதான் https://e-resident.gov.ee/

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com