‘நான்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று சொல்ல இ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு தைரியம் இல்லை -வெற்றிவேல்

‘நான்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று சொல்ல இ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு தைரியம் இல்லை -வெற்றிவேல்

‘நான்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று சொல்ல இ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு தைரியம் இல்லை -வெற்றிவேல்
Published on

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா? துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமா? இவர்களும் இல்லாமல் சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் சசிகலாவாக இருப்பாரோ? என்ற குழப்பதில் இருக்கிறார்கள் தொண்டர்கள். இந்நிலையில், ”எடப்பாடியார் என்றும் முதல்வர். எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைத்து களம் காண்போம். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகொள்வோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.  இதுகுறித்து, அ.ம.மு.க கட்சியைச் சேர்ந்தவரும் சசிகலா ஆதரவாளருமான முன்னாள் எம்.எல். ஏ வெற்றிவேலிடம் பேசினோம்,

    “முதல்வர் வேட்பாளர் யார் என்பதை  அமைச்சர்கள் ஏன் சொல்லவேண்டும்? முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முதல்வரும் துணை முதல்வருமே சொல்லட்டும். குரங்கு குட்டியை விட்டு ஏன் சூடு பார்க்கிறது? ‘நான் தான் முதல்வர் வேட்பாளர்’ என்று சொல்ல எடப்பாடிக்கும், ஒ.பி.எஸ்ஸுக்கும் தைரியம் இல்லை. அதனால்,  இவர்களின் ஆதரவாளர்களை வைத்து இப்படி பேச வைக்கிறார்கள். ஏற்கனவே, கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பம் குழப்பம் இருப்பதால் இப்படி பேசவிட்டு ஒருமித்த கருத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். நம்ம நிலைமை என்னவென்று, அவர்களே சோதித்துப் பார்த்துக்கொள்கிறார்கள்.

சசிகலா இந்தமாதம் வெளியாகிறார் என்று சொல்லப்படுகிறதே?

ஆச்சார்யா சொன்னால் அது உண்மையான செய்தியா? அவர் டிவிட் போட்டார். அதைவைத்து எப்படி நாம் சொல்ல முடியும்? வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்க்க வலுவான அரசியல் கட்சித் தேவை. அந்த வலு என்பது அ.தி.மு.க, அ.ம.மு.க இரண்டிலும் ஒரே எண்ணம் உள்ள தொண்டர்கள்தான்.  எடப்பாடி பழனிச்சாமியால் திமுகவை வீழ்த்தவோ எதிர்க்கவோ முடியாது. இரண்டு கட்சிக்கும் சேர்த்து ஒரே முகமாக இருக்கவேண்டியவர்கள் சின்னமாவும், டிடிவி தினகரனும்தான். அம்மா இருந்தபோது சிங்கத்தின் பின்னால் இருந்த உணர்வு கட்சியினருக்கு இருந்தது.

அந்த அந்த உணர்வு அம்மாவுக்கு அடுத்தபடியாக சின்னமாவிடம்தான் தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கத்தின் பின்னால் இருந்தால் யாருக்கும் பயம் வராது. அதுமாதிரி கட்சித் தலைமை ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். இவர்களிடம் இப்படியே அதிமுகவை விட்டால் கட்சியை அழித்துவிட்டுப் போய்விடுவார்கள். அதுதான் உண்மை. முதல்வரும் துணை முதல்வரும் அவர்கள் தொகுதியிலேயே ஜெயிக்க மாட்டார்கள். மக்கள் பாடம் புகட்டுவார்கள். இருவருமே ஆட்சி: கட்சி இரண்டிற்கும் தகுதியற்றவர்கள்.

 - வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com