வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஏன்..? மனிதர்களுக்கும் ஆபத்தா..? எச்சரிக்கும் ஆய்வாளர்..!

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஏன்..? மனிதர்களுக்கும் ஆபத்தா..? எச்சரிக்கும் ஆய்வாளர்..!
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஏன்..? மனிதர்களுக்கும் ஆபத்தா..?  எச்சரிக்கும் ஆய்வாளர்..!

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் ஏற்கெனவே கென்யா, சோமாலியா நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ நா அமைப்பு இந்த வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என எச்சரித்திருந்தது. அதன்படி வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் வெட்டுக்கிளி படையெடுப்பைப் பொருத்தவரை அவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துடன் நின்றுவிடுவதே வழக்கம் எனவும் தக்காணப் பீடபூமியைத் தாண்டி தமிழகம்வரை வந்ததில்லை எனவும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது. வெட்டுக்கிளிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளிக்க வேண்டுமென்றும் வேளாண் துறை அறிவுறுத்துகிறது. 

இந்நிலையில் இந்த வெட்டுக்கிளியின் வாழ்க்கை முறைகள் குறித்தும் அவற்றின் நோக்கங்கள் குறித்தும், அவை ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றன என்பது குறித்தும் சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில் புதியதலைமுறைக்கு விவரித்தார். அப்போது அவர் பேசுகையில் “வெட்டுக்கிளிகள் பலவிதம் உள்ளன. அதில் பாலைவனத்தில் உருவாகும் வெட்டுக்கிளிகள் தான் ஆபத்தானவை. அவையும் எல்லா நேரமும் இதுபோன்று நடந்து கொள்வதில்லை. இனப்பெருக்கத்தின் நோக்கமாகவே இவ்வாறு செயல்படுகிறது.  எந்த ஒரு உயிரினத்திற்கும் அடுத்த தலைமுறையை உருவாக்குவதே முக்கிய குறிக்கோள். அந்த வகையில் இந்த பாலைவனத்தில் இருக்கும் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க முயலும்போது தனது ஜோடியை தேடியும் உணவை தேடியும் படையெடுக்கின்றன. அவற்றை பொருத்தவரை சாப்பிட வேண்டும், வளர வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.

இவ்வகையான வெட்டுக்கிளிகள் தனித்தனியாக இருக்கும்போது எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால் பெரிய அளவில் ஒன்று கூடும்போது பிரச்னை உருவாகிறது. இந்த வெட்டுக்கிளிகள் குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே உயிர் வாழும். அதற்குள் அவை பெரிய அளவிலான ஜெனரேஷனை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த காலக்கட்டத்தில் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருளை அதன் உடல் உற்பத்திசெய்கிறது. அப்போதுதான் அவை அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன. அப்போதுதான் சமூகமாய் வாழும் கூட்டு வாழ்வுக்குத் (gregarious phase) தூண்டப்படுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன.

இதன் முட்டைகள் 10 செமீ அளவு மண்ணில் புதைத்து இனப்பெருக்கம் செய்கிறது. இவைகள் வளர பயங்கரமாக சாப்பிட வேண்டும். அதன் எடை எவ்வளவோ அந்த அளவுக்கு அவை சாப்பிடக்கூடியவை. வட மேற்கு பகுதிகளில் அதாவது வறட்சி பகுதிகளில் தான் அதிகமாக பரவும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது தமிழகத்தில்கூட வறட்சி, வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை தடுக்க 2 வழிமுறை சொல்லப்படுகிறது. ஒன்று பூச்சிகளை கொலை செய்வது. அது எந்த வகையில் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. இரண்டாவது, அதற்கு பிடிக்காத தெளிப்பான்களை அடித்து பயிர்களை சாப்பிட விடாமல் தடுப்பது. இயற்கை விவசாயம் செய்பவர்கள் திடீரென கெமிக்கலை தெளித்து துரத்த முடியாது. இதனால் அவர்கள் மீண்டும் இயற்கை விவசாயம் செய்யமுடியாத சூழ்நிலை உருவாகும்.

அரசு என்ன செய்ய வேண்டும் என்றால், எந்த வழியாக வெட்டுக்கிளிகள் வருகிறது என மானிட்டர் செய்ய வேண்டும். அதை கண்டறிந்து அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். படையெடுக்கும் வெட்டுக்கிளிகளால் மனிதனுக்கும் ஆபத்து உண்டா என்றால், அறுவெறுப்பு அதிகமாகும். மனிதர்களிடம் இருந்து தப்பித்துச்செல்ல கடிக்க முயலும். அவற்றால் கடிக்க முடியும். இதனால் கால்நடை விலங்குகளுக்கு கூட ஆபத்து நேரலாம். எனவே கண்டிப்பாக தமிழகத்தை தாக்காது என்று எண்ணாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com