”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை

”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” - வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை
”ஒரு யானை இறந்தால் கூடவே சேர்ந்து காடும் அழியும்” -  வன விலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கை

எழுத்தாளர் ஜெயமோகனின் "யானை டாக்டர்" என்கிற சிறுகதையில் "டாப் ஸ்லிப்' வனப்பகுதியில் பணி புரிந்த கால்நடை மருத்துவர் வி.கிருஷ்ணமூர்த்தியின் யானைகளுடனான அனுபவத்தை விவரித்து இருப்பார். யானைகள் மிகவும் அதிக நுட்பமான உணர்வுகள் உள்ள விலங்கினம். காட்டு யானைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அவை தன் கூட்டத்துடன் மருத்துவரைத் தேடி சிகிச்சைக்காக வரும் என ஜெயமோகன் தன் சிறுகதையில் குறிப்பிட்டு ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பார். அவ்வளவு கூர்மையான அறிவாற்றல் கொண்டது யானை இனம்.

ஆனால் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு வனப்பகுதியிலிருந்து மலப்புரத்துக்கு வந்த கர்ப்பிணி யானைக்கு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட மரணம் மிகக் கொடூரமானது. நாடு முழுவதும் இந்த யானையின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மனிதத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. காட்டுப் பன்றிகளுக்காக வைக்கப்பட்ட வெடிமருந்தாக இருந்தாலும், இதுபோன்ற செயல்களால் மற்ற விலங்குகள் தொடர்ந்து இந்தியாவில் உயிரிழந்துதான் வருகின்றன.

இதில் அதிகம் பாதிக்கப்படுவது காட்டு யானைகள்தான். மிக முக்கியமாகக் காட்டு யானைகளுக்கு எமனாக இருப்பவை மின்வேலிகள். உதாரணத்துக்குத் தமிழகத்தில் மட்டும் தமிழக வனப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 1,113 யானைகள் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளன. இதுதவிர, தமிழகத்தில் 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியிலிருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன. வனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைவிட மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கின்றன. முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள பண்ணைத்தோட்டங்களில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.

இது தமிழகத்தின் புள்ளிவிவரங்கள் மட்டும்தான், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுபோன்ற எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்லும்.விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம். இந்த மின்வேலியைத் தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும். ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாகக் கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதல் வாட்ஸ் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன.

இதுகுறித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த காட்டுயிர் செயற்பாட்டாளர் கே.மோகன் ராஜ் கூறியது "விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன. அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்ச்சுவோரைக் கண்காணிக்க வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரைத் தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை. இதனால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும். யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன" என்கிறார் அவர்.

ஒரு யானை இறக்கும் போது கூடவே சேர்ந்து வனமும் அழிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பிட்ட வனப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள யானை அந்தப் பகுதி செழித்து வளர்வதற்கான சில இயற்கை உரங்களை இடுகிறது. கூடவே விதைப் பரவல் எனும் பணியைச் செய்கிறது. இதனால் ஒரு இயற்கை சுழற்சி காட்டிற்குள் நடைபெறுகிறது. ஆக, யானையின் இறப்பு என்பது வனத்தின் அழிவில் போய் முடியும் என அஞ்சுகிறார்கள் வன விலங்கு ஆர்வலர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com