அதிகரித்து வரும் மின்னணுக் கழிவுகள் - இந்தியாவின் எதிர்காலம் என்ன?

அதிகரித்து வரும் மின்னணுக் கழிவுகள் - இந்தியாவின் எதிர்காலம் என்ன?
மின்னணுக் கழிவுகள்
மின்னணுக் கழிவுகள்மின்னணுக் கழிவுகள்
செல்போன், டிவி, லேப்டாப், கணினி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட் வாட்ச் என மின்சாரத்தைக் கொண்டு பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு சாதனங்களையும் குறிப்பிட்ட காலம்வரை மட்டும்தான் நாம் பயன்படுத்த முடியும். அதன் ஆயுட்காலம் முடிந்தபின், அதாவது அதனை நாம் பயன்படுத்துவதை நிறுத்தியபின் அவை அனைத்தும் மின்னணுக் கழிவுகளாக மாறிவிடும். 
மின்னணுக் கழிவுகள் பொதுவாக முறையாக மறுசுழற்சி செய்யப்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. மிகக்குறைந்த அளவிலான மின்னணுக் கழிவுகளே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி, உலகளவிலும் இதுவே நிலைமை. உலகம் முழுவதும் வருடத்துக்கு சுமார் 5 கோடி டன்களுக்கும் அதிகமான மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன.
சரியாகச் சொல்லவேண்டுமென்றால், உலகளவில் உற்பத்தியாகும் மொத்த மின்னணுக் கழிவுகளில் சுமார் 10 சதவிகிதம் மட்டுமே சரியான முறையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 90 சதவிகித மின்னணுக் கழிவுகள் நிலத்திலோ அல்லது நீரிலோ கொட்டப்பட்டு நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன. அவை காற்றிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தி, அதிலும் தீங்கை ஏற்படுத்துகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 2017 லிருந்து 2020ம் ஆண்டுவரை, 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 25 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகியுள்ளன. இதன்படி பார்த்தால், 2017-18ம் ஆண்டில் 7,08,445 டன்களும், 2018-19ம் ஆண்டில் 7,71,215 டன்களும், 2019-20ம் ஆண்டில் 10,14,961.21 டன் மின்னணுக் கழிவுகளும் உற்பத்தியாகியுள்ளன.  உற்பத்தியான 25 லட்சம் டன் மின்னணுக் கழிவுகளில் சுமார் 53.218 சதவிகித கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் நிலம், நீர், காற்றுமாசு என சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டு இந்தியாவின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும்.
மின்னணுக் கழிவுகளால், ஒவ்வொரு ஆண்டுக்கு 20 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிலம், நீர், காற்று மட்டுமின்றி ஒவ்வொரு உயிர்களுக்கும் கொடிய நோய்களை உருவாக்கும் மின்னணுக் கழிவுகளை முடிந்த வரை மறுசுழற்சி செய்ய முயற்சி செய்வோம்.
சரி, மறுசுழற்சி செய்வதென்றால் என்ன? ஒன்று, நீங்களே அதை வீட்டில் வேறு ஏதாவதொரு விஷயத்துக்கு அதை உபயோகப்படுத்தலாம். இல்லையெனில், அப்பொருள் வாங்கும்போது கொடுக்கப்பட்ட அட்டையின் பின்புறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் `Recycle’ வழிமுறையைப் பின்பற்றவும். எக்காரணம் கொண்டும், பொது குப்பைகளில் அதைச் சேர்த்து எறிந்துவிட வேண்டாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com