'இலவசத்துக்கு சிக்கல்'... புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவில் என்ன பிரச்னை? - ஒரு பார்வை

'இலவசத்துக்கு சிக்கல்'... புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவில் என்ன பிரச்னை? - ஒரு பார்வை
'இலவசத்துக்கு சிக்கல்'... புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவில் என்ன பிரச்னை? - ஒரு பார்வை

மத்திய அரசு கொண்டுவர உள்ள 'புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா 2021' பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்த திருத்தச்சட்டத்தால் என்ன பிரச்னை? ஏன் எதிர்க்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 13ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில், எதிர்கட்சிகளின் அமளியால் முன்கூட்டியே முடித்துவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் 'புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா 2021' -ஐ அறிமுகப்படுத்த மத்திய அரசுமுனைப்பு காட்டியது. ஆனால், சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய சட்டம் மாநில உரிமைகளை பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் மத்திய அரசு தரப்பில், ''வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவே கொண்டுவரப்படுகிறது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை நியமிப்பதற்கான மாநில அரசுகளின் அதிகாரம் எதையும் பறிக்கும் எண்ணம் இல்லை'' என்று தெரிவித்துள்ளது. 

2003ம் ஆண்டு மின்சார சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கான இந்த சட்டம் 'புதிய மின்சார திருத்தச் சட்டம் 2021' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி இதற்கான வரைவுச் சட்டம் வெளியிடப்பட்டது. 21 நாட்களுக்குள் இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது. 'வளர்ச்சிக்காகத்தான் இந்த சட்டம்' என மத்திய அரசு கூறியிருந்தது.


இந்த புதிய திருத்தச்சட்டத்தின் படி, மின்கட்டணங்களை குறைக்கும் வகையில் மாநில அரசுகள் வழங்கும் மானியங்களை தவிர்த்தே கட்டணம் நிர்ணயிக்க வழிவகுக்கிறது. மானியம் இல்லாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். தவிர, மாநில அரசுகள் வழங்கும் மானியத்துக்கான பணம் சம்பந்தபட்ட நுகர்வோருக்கு நேரடியாக வழங்க சட்டம் வழிவகுக்கிறது. இதன் மூலம் தமிழக அரசின் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் சிக்கல் ஏற்படலாம்.

மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் “தேர்வுக் குழுவே” தேர்வு செய்யும். அந்த தேர்வுகுழுவில் மொத்தம் 5 பேர் இருப்பர். அதில், மாநிலங்களின் தலைமை செயலாளர்களில் இருவர் இடம்பெறமுடியும். அவர்களது பதவிக்காலம் ஓராண்டாகும்.

அதேபோல, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், “மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம்” ஒன்று அமைக்கப்பட்டு அது மத்திய அரசின் கீழ் செயல்படும். உற்பத்தி நிறுவனம், விநியோக நிறுவனம், டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களுக்கு இடையில் போடப்படும் ஒப்பந்தங்களை இந்த ஆணையம் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இதில் பிரதிநிதித்துவம் இல்லை என்பது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என புகார் எழுந்துள்ளது. மின்சார சட்ட விதிகளை பின்பற்றாவிட்டாலும், ஆணைகளை செயல்படுத்த தவறினாலும் அபராதங்களை உயர்த்தவும் இந்த சட்டம் வழிவகுக்கும்.

அரசியலமைப்பு சட்டப்படி “மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம்” மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் (Entry 54) உள்ளது. ஆனால், புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி, மாநிலத்திற்கு என்றே வழங்கப்பட்டுள்ள தனி அதிகாரம் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்படும்.

இதனிடையே இந்த புதிய சட்டதிருத்த மசோதா தொடர்பாக எரிசக்தித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஆர்.கே.சிங், ''மின்சாரத்திற்கு மானியம் வழங்குவதற்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. மாநில அரசுகள் அவர்கள் கொடுக்க விரும்பும் அளவிற்கு மானியம் கொடுக்கலாம். அதேவேளையில், இந்த மானிய உதவியை நேரடிப் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் தான் வழங்க வேண்டும்.

இதன் மூலம் மின்வாரியங்கள் நல்ல நிலையில் செயல்படுவதோடு, மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) மற்றும் மின்விநியோகக் கம்பி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை முறையாகப் பராமரித்து, மேம்படுத்த முடிவதோடு, கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கான தொகையை செலுத்த முடியும். மக்களுக்குத் தரமான மின்சாரத்தை வழங்க முடியும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.  இந்த புதிய சட்டத்திருத்ததுக்கு மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

-கலிலுல்லா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com