தீப்பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. வைரல் வீடியோ பற்றவைத்த பீதி.. - பாதுகாப்பில் பிரச்னை?

தீப்பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. வைரல் வீடியோ பற்றவைத்த பீதி.. - பாதுகாப்பில் பிரச்னை?
தீப்பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. வைரல் வீடியோ பற்றவைத்த பீதி.. - பாதுகாப்பில் பிரச்னை?

எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த செய்திகள் வெளியாகாத நாட்களே இல்லை என்பதுதான் சூழல். தினமும் புதிய மாடல்கள் அறிமுகம் செய்வது, முதலீடுகள் வருவது என எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து தொடர் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால், ஹைதராபாத்தில் ஒரு எலெக்ட்ரிக் வாகனம் தீ பிடித்து பயங்கரமாக புகையைக் கக்கிய சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒருபுறம் பெரும் அறிவிப்புகள் வெளியாகி இருக்கும் சூழலில், இந்த தீ விபத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த பீதியை உருவாக்கி இருக்கிறது.

ஐஐடி ஹைதராபாத் மூலமாக இந்த இ-புளூட்டோ (ePluto)என்னும் வாகனம் தயாரிக்கப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் கடந்த 18 மாதங்களாக விற்பனையில் உள்ளது. இதுவரை 25,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், இந்த தீ விபத்து குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனம் இதுவரை முறையாக அறிவிப்பு வெளியிடவில்லை. எதனால் விபத்து ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவான - தெளிவான விவரம் எதுவும் தெரியவில்லை.

பேட்டரி காரணமா? - ஐசிஇ வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் அதிக உதிரி பாகங்கள் கிடையாது. முக்கியமான பாகம் பேட்டரிதான். பேட்டரியின் செயல்பாட்டினை பொறுத்தே வாகனத்தின் பாதுகாப்பு இருக்கும். மற்ற பாகங்களுடன் பேட்டரி எப்படி பாதுகாப்பாக இணைக்கப்பட்டிருக்கிறது என்பது முக்கியம். ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சீனாவில் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாத சந்தை மட்டுமே இருக்கிறது. அதனால், பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆகவே, போதுமான தொகை கொடுத்து இறக்குமதி செய்யவில்லை என்றால், சாதாரண பேட்டரியை இறக்குமதி செய்யக்கூடும். இது வாகன பாதுகாப்பில் சிக்கல் ஏற்படலாம் என இந்த துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தவிர, எலெக்ட்ரிக் வாகனம் என்பது வளர்ந்து வரும் துறை என்பதால், இந்த துறையில் அதிக முதலீடு வருகிறது. பல புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுகின்றன. சரியான பயிற்சி இல்லாத காரணத்தால் கூட பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

ஐசிஇ இன்ஜின்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. ஐசிஇ வாகனங்கள் கூட தீப்பிடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், எலெக்ட்ரிக் வாகன துறை வளர்ந்து வருகிறது என்பதால், சிறு விபத்துக்கு பெரிய அளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று சொல்பவர்கள் கூட இருக்கிறார்கள்.

மற்ற ரக வாகனங்களில் எந்த பிராண்டு தீப்பிடிக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரை பிராண்ட் இன்னமும் மக்களுக்கு பதியவில்லை. அது எலெக்ட்ரிக் வாகனம் என்பது மட்டுமே நினைவில் இருக்கும் என்பதால் வளர்ந்து வரும் துறைக்கு இந்த விபத்து நல்லதல்ல.

சமூக வலைதளங்களில் வெளியாகும் கமெண்டுள் கூட ஒட்டுமொத்த துறையும் சரியில்லை என்பதுபோலவே இருக்கின்றன.

"எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்கும்போது தீ அணைப்பானும் சேர்த்தே கொடுக்க வேண்டும்" என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். "இவ்வளவு புகையை வெளியிடும் வாகனம்தான் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பா?" என ஒருவர் கேட்டிருக்கிறார்.

"டெல்லி மக்கள் தீபாவளிக்கு பட்டாசுக்கு பதில் இந்த வாகனத்தை வாங்கலாம்" - இதுபோல பல கருத்துகள் வெளியாகின்றன.

ஏற்கெனவே எலெக்ட்ரிக் வாகனம் குறித்து பல விதமான சந்தேகங்கள் இருக்கின்றன. இது தவிர, விலை அதிகம் என்னும் சிக்கலும் இருக்கிறது. இந்தச் சூழலில் வளர்ந்து வரும் இந்த துறையில் இதுபோன்ற விபத்து தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன், பாதுகாப்பு குறித்த தெளிவை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு தயாரிப்பு நிறுவனங்களும் சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com