யானைகளின் உயிரை வாங்கவா, பயிர்களை காக்கவா? எதற்கு மின்வேலி?

யானைகளின் உயிரை வாங்கவா, பயிர்களை காக்கவா? எதற்கு மின்வேலி?
யானைகளின் உயிரை வாங்கவா, பயிர்களை காக்கவா? எதற்கு மின்வேலி?

தமிழகத்தில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் கோவை மாவட்டத்தில் இந்தாண்டு யானைகள் உயிரிழப்பு மிகவும் அதிகம். இந்தாண்டு மட்டும் 24 யானைகள் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளன. இதனைத்தொடர்ந்து இப்போது மீண்டும் ஒரு ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறது.

பெத்திக்குட்டை என்ற இடத்தில், தனியாருக்குச் சொந்தமான வாழைத்தோட்டத்தில் 25 மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் நடத்திய விசாரணையில், வாழைத்தோட்டத்தில் அமைக்கப்பட்ட வேலியில் மின்சாரம் செலுத்தப்பட்டு யானை உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, தோட்டத்துக்கு சொந்தக்காரர்களான பரமன், முருகன் ஆகிய இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

மிகப்பெரிய வனத்தின், பிரம்மாண்டமான காட்டு ராஜாக்கள் யானைகள். ஆனால் வனப் பகுதிகளையொட்டிய விளை நிலங்களில் மின்சாரம் பாய்ந்து யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் இறப்பது தமிழகத்தில் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்திய அளவில் ஆண்டுக்கு 80 யானைகள் மின்வேலி பாதிப்பால் உயிரிழப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தெரிவிக்கிறது.

தமிழக வனப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 1,615 யானைகள் பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளன. இதுதவிர, தமிழகத்தில் 2010 முதல் 2015-ஆம் ஆண்டு வரையில் 22 யானைகள் மின்வேலியில் இருந்து வெளிப்படும் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளன. 2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான யானைகள் இறப்பின் புள்ளி விவரங்கள் வனத்துறையிடம் இல்லை.வனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதைவிட மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதுதான் அதிகமாக உள்ளது என்ற புள்ளி விவரம் வேதனையளிக்கின்றது. முக்கியமாக, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இடங்களில் தனியார் ஆக்கிரமித்துள்ள எஸ்டேட்டுகளில் போடப்பட்டுள்ள மின்வேலிகள் காரணமாக யானைகள் அதிகமாக உயிரிழந்துள்ளன.

யானைகள் மின்சாரம் பாய்ந்து இறப்புக்கு காரணம் என்ன?

விளைநிலங்களில் வன விலங்குகள் சேதப்படுத்துவதைத் தடுக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே மின்வேலிகளில் செலுத்தப்படலாம் என்பது வனத்துறை வகுத்துள்ள விதி. அனுமதிக்கப்பட்டுள்ள அளவிலான மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை ஏற்படுத்தும்.

ஆனால் பாதிப்பு ஏற்படாது. இதனால் அவை பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியைத் தொட்டு விட்டாலும், பாதிப்பில்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இருப்பினும், சில தனியார் எஸ்டேட் முதலாளிகள் நிர்ணயித்த அளவைவிட யானைகளிடமிருந்து தங்களது தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகளில் கூடுதலான வாட்ஸில் மின்சாரத்தைச் செலுத்துகின்றனர். இதுவே யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றன.

கடுமையான தண்டனை வேண்டும் !

விளைநிலங்களில் யானைகள் புகாமல் தடுப்பதற்கு மின்வேலிகளில் பேட்டரி மூலமே அவற்றுக்கு மின்சாரம் செலுத்த வேண்டும். ஆனால், பலர் தங்கள் வீடுகளிலும், தோட்டங்களிலும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை மின்வேலியிலும் பாய்ச்சுகின்றனர். இதனால், யானைகள் உள்ளிட்ட இதர வன விலங்குகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழக்கின்றன.

இது குறித்து கோவை மாவட்டச் சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ் கூறும்போது " அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாய்ச்சுவோரை கண்காணிக்கப்பட வேண்டும். மின்சாரம் பாய்ந்து வனவிலங்குகள் உயிரிழந்தாலும், தவறு செய்தோரை தண்டிக்க முறையான ஆதாரங்களை வனத் துறையினரால் சமர்ப்பிக்க முடிவதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கின்றது. இதனால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து விடுகின்றனர். எனவே, விரைவில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும்" என்றார்.

மேலும் " யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய உயிரினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதால்தான் இந்த விஷயம் வெளியே தெரிகிறது. சிறிய வகை வன விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன என்பது வெளியே தெரியவில்லை. காட்டின் பசுமை மாறா சூழ்நிலை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால், பல்லுயிர் பெருக்கும் மிகவும் அவசியமானது. காட்டில் வாழும் விலங்கினங்களில் சிறியது பெரியது என ஏதுமில்லை, அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு அரசின் நடவடிக்கை முக்கியம்" என்றார் மோகன்ராஜ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com