தேர்தல் ஆணையமும் இந்திய ஜனநாயகமும்

தேர்தல் ஆணையமும் இந்திய ஜனநாயகமும்
தேர்தல் ஆணையமும் இந்திய ஜனநாயகமும்

கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்னதாகவே பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் அதை அறிவித்துள்ளார். அதுகுறித்து அவரிடம் கேட்டபோது ’டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் அந்தத் தகவல் ஏற்கெனவே வெளியாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அந்த விவரங்களைக் கூறி கருத்து கேட்டபோது ’ இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையத்தை முந்திக்கொண்டு தேர்தல் தேதியை பாஜகவே அறிவித்திருப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. 

சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் இன்னபிற முக்கியமான பொறுப்புகளுக்கும் தேர்தலை நடத்தும் அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 தேர்தல் ஆணையத்துக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி, தேர்தல் தேதியை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். தேர்தல் முடிவை அறிவிப்பதைப்போலவே தேர்தல் தேதியை அறிவிப்பது என்பதும்  ரகசியத்தன்மை கொண்டதாகும். அந்த ரகசியத்தைக் காக்கவேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. அப்படி ரகசியமாக வைக்கப்படவேண்டிய ஒன்றை பாஜகவினர் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தனர் என்றால் பாஜகவினருக்கு தேர்தல் ஆணையம் முன்கூட்டியே தகவல் கூறியதா? அல்லது பாஜக சொன்ன தேதியைத்தான் தேர்தல் ஆணையம் இப்போது அறிவித்திருக்கிறதா என்கிற ஐயம் நமக்கு எழுகிறது. 

நம்முடைய ஜனநாயகம் என்பது தேர்தலை உயிர்நாடியாகக் கொண்டதாகும்.  அந்தத் தேர்தலை நடத்தும் மிக உயர்ந்த பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது என்பது விதி. ஆனால், இந்தியாவில் உள்ள பல்வேறுபட்ட அரசியல்சட்ட அமைப்புகள் இப்போது ஆளும் கட்சிக்கு விசுவாசமானவையாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தேர்தல் ஆணையமும் சேர்க்கப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுந்துள்ளது. 

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் டிடிவி தினகரனும், இடைத்தரகராக இருந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரும் வேறு சில நபர்களும் கைது செய்யப்பட்டனர். டிடிவி தினகரன் பல நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். லஞ்சம்கொடுக்க முயன்றாக அவர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் யாருக்கு அவர் லஞ்சம் கொடுக்க முயன்றார், தேர்தல் ஆணையத்தில் இருக்கும் கறுப்பு ஆடுகள் எவை என்பதை இதுவரை தேர்தல் ஆணையம் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் லஞ்சம் பெறக்கூடியவர்களாக உள்ளனர் என்ற எண்ணத்தை மக்களிடையே இந்தச் சம்பவம் ஏற்படுத்திவிட்டது.  

டெல்லியில் ஆட்சிசெய்யும் ‘ஆம் ஆத்மி’ கட்சியை சேர்ந்த இருபது சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அவர்கள் ஆதாயம் தரும் பதவியை வகித்ததாகத் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்னால், டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் அந்த உத்தரவை ரத்துசெய்துவிட்டது. அதுமட்டுமின்றி இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் முறையாக நடந்துகொள்ளவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தது. 

தற்போது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ஒ.பி.ராவத் மோடி அரசாங்கத்தால் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோது அவர் பாஜகவுக்கு நெருக்கமானவர் என விமர்சிக்கப்பட்டார். டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானுக்கு நெருக்கமானவர் என அவரை அர்விந்த் கெஜ்ரிவால் விமர்சித்தார். அதன் காரணமாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிலிருந்து தான் விலகி இருப்பதாக ஓ.பி.ராவத் அறிவித்தார். “இந்த வழக்கில் முதலில் விலகியிருந்துவிட்டு பின்னர், குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்காமலேயே ஓ.பி.ராவத் அது சரியல்ல” எனக் கூறியிருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம்,“இந்த வழக்கின் விசாரணையில் கொஞ்சமும் பங்கேற்காத,விசாரணை முடிவடைந்ததற்குப் பிறகு பதவியில் சேர்ந்த சுனில் அரோரா என்பவர் சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிநீக்க ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். ஒரு வழக்கை விசாரிக்காத ஒருவர் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவது நீதி பரிபாலன முறைக்கு முற்றிலும் எதிரானதாகும்” என்றும் கூறியிருக்கிறது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேர்தல் ஆணையம் செய்திருக்கும் தவறு சாதாரணமாக புறக்கணித்துவிடக்கூடிய நிர்வாக சம்பந்தமான பிழைகள் அல்ல, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்யப்பட்டிருக்கும் சட்டவிரோதமான செயலாகும். அதைத்தான் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 
இந்தியாவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமாக தேர்தல்கள் நடத்தப்படுவதை பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் கூடிய காங்கிரஸ் கட்சியின் மூன்றுநாள் மாநாட்டில் ‘வாக்குப்பதிவு எந்திரத்தில் ரகசியமாக மாற்றம் செய்வதன்மூலம் மக்களின் தீர்ப்புக்கு எதிரான முடிவுகளை வரவழைப்பதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவே வாக்குப் பதிவு எந்திரத்திற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரவேண்டும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைவதும், வாக்குப்பதிவு எந்திரத்தைக் கொண்டு நடத்தப்படும் தேர்தல்களில் வெற்றிபெறுவதும் இந்தச் சந்தேகத்தை  வலுப்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக எழுப்பும் ஐயங்களைப் போக்கவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். அக்கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக தேர்தல் ஆணையமோ வாக்குப்பதிவு எந்திர முறை குறித்து சந்தேகம் எழுப்புகிறவர்களையெல்லாம் கடுமையாக விமர்சித்து வருகிறது. தேர்தல் ஆணையம் வெளிப்படையாக நடந்துக்கொள்கிறது என்பதற்கு பதிலாக எதையோ மறைக்க முயற்சிக்கிறது என்கிற எண்ணத்தை இது உண்டாக்குகிறது. 

கர்நாடகத் தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியானதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. கர்நாடக தேர்தல் தேதி ஏற்கெனவே அம்பலமாகிவிட்டதால் அதே தேதியில் தேர்தலை நடத்துவதா? அல்லது வேறு தேதியில் நடத்துவதா? என்பதைத் தேர்தல் ஆணையம் யோசிக்கவேண்டும். இந்தத் தகவல் கசிவதற்குக் காரணமானவர்கள் மீது மட்டுமின்றி,  தேர்தல் தேதியை முதலிலேயே அறிவித்த பாஜகவின் தகவல் தொழிநுட்ப பிரிவைச் சார்ந்த மால்வியா மீதும், ஆங்கிலத் தொலைக்காட்சியின் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இந்தப்பிரச்சினையில் தேர்தல் ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுக்காமல்விட்டால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பாஜகவுக்கு நெருக்கமானவர் என்ற குற்றச்சாட்டு உண்மையென்றாகிவிடும். தேர்தல் தேதியை மட்டுமல்ல தேர்தல் முடிவுகளையும்கூட பாஜகதான் அறிவிக்கிறது என்ற எண்ணம் மக்களிடம் வலுப்பெற்றுவிடும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com