இல்லம் தேடி கல்வித் திட்டத்தை எதிர்க்கும் கூட்டணிக்கட்சிகள்: கல்வியாளர்களின் கருத்து என்ன?

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை எதிர்க்கும் கூட்டணிக்கட்சிகள்: கல்வியாளர்களின் கருத்து என்ன?
இல்லம் தேடி கல்வித் திட்டத்தை எதிர்க்கும் கூட்டணிக்கட்சிகள்: கல்வியாளர்களின் கருத்து என்ன?

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் ஒன்றாம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இந்த நிலையில், தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இத்திட்டத்தின்கீழ், மாணவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வகுப்புகள் நடத்தப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, முதற்கட்டமாக, 200 கோடி ரூபாய் செலவில், காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தன்னார்வலர்கள் மூலமாக சுமார் 6 மாத காலம் நாள்தோறும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இத்திட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இல்லம் தேடி கல்வித் திட்டம், ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையை மறைமுகமாக திணிப்பது போலிருப்பதாகவும், தேசிய கல்விக் கொள்கை தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாகவும் திராவிடக் கட்சியின் தலைவர் கி.வீரமணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். திராவிடக் கட்சியைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இத்திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும், திட்டத்தைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொண்டர்களும் மேற்கொள்வார்கள் எனில், அதில், சங் பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சை விதைக்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது

இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு முன்னோடியாக ஏற்கனவே தமிழகத்தில் அறிவொளித் திட்டம் செயல்படுத்தப்பட்டதை நாம் இங்கே குறிப்பிடவேண்டியுள்ளது. அறிவொளி இயக்கம் என்பது மத்திய அரசின் தேசிய எழுத்தறிவு இயக்கம்தான். அது தமிழகத்தில் அறிவொளி இயக்கம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1991 முதல் 1996வரை தமிழகத்தில் அறிவொளி இயக்கம் செயல்படுத்தப்பட்டது. 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து கல்வி அறிவு பெற்றனர். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள், சமுதாய நலக்கூடங்களில் மாலை நேரத்திலும் வார இறுதி நாட்களிலும் வகுப்புகள் நடந்தன. அறிவொளி இயக்கத்திற்கு என்று தனிப்பாடத் திட்டம் வகுக்கப்பட்டு படித்து முடிப்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருக்குறள் படித்தல், செய்தித் தாள்களை வாசிக்க பழகுதல், நல்லிணக்கக் கதைகள் கற்றுத்தரப்பட்டன. அறிவொளி இயக்கம் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் எழுத்தறிவு பெற்றதாக திட்டம் நிறைவுபெறும்போது அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.

இப்படி இருந்த அறிவொளி இயக்கம் பின்னாள்களில் வழக்கொழிந்த நிலையில், தற்போது அது இல்லம் தேடி கல்வியாக வலம் வருகிறது. இந்தத் திட்டம் குறித்து கல்வியாளர் யோகராஜன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசியபோது, “இத்திட்டம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களை சார்ந்து இருக்கிறது. அதனாலேயே இதில் நிறைய விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஏனெனில் தன்னார்வலர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாலஜியுடன், ஒவ்வொரு வகை கருத்தாக்கத்துடன் இருப்பார்கள். அவர்கள் ஆசிரியர்கள் அல்ல. அதனால், அவர்கள் பாடம் எடுக்கையில் தங்களுடைய கருத்தாக்கத்தை மாணவர்களிடம் பாடம் வழியாக புகுத்தும் அபாயம் உள்ளது.

பள்ளிகளில் பாடம் எடுக்கப்படுகையில், அப்படி கருத்தாக்கத்தை மாணவர்கள் பெற மாட்டர். மாறாக தங்களின் கல்வியை தகவல்களாக கற்று, அதை சுயபகுப்பாய்வு செய்ய கற்றுக்கொடுக்கப்படுவர்” என்றார். இன்னும் சில விஷயங்களை கல்வியாளர் யோகராஜன் நம்மோடு பகிர்ந்துக்கொண்டார். அவற்றை கீழ்க்காணும் லிங்க்-ல் தெரிந்துக்கொள்ளுங்கள்.

.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com