குற்றாலம் போறீங்களா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!

குற்றாலம் போறீங்களா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!

குற்றாலம் போறீங்களா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!
Published on

குற்றாலத்தில் தற்போது சீசன் ஆரம்பமாகிவிட்டது. சீசன் காலங்களில் இங்கு சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வருவார்கள். குற்றாலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் இங்குள்ள சொர்க்கப் புரியான சுற்றுச் சூழல் பூங்கா, பலருக்கு தெரியாத நிலையிலேயே உள்ளதால் அங்கு வருபவர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே உள்ளது.


குற்றாலம் ஐந்தருவிக்கு மேலே, இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே, 37 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமைப் படர்ந்து ரம்மியமாகக் காட்சியளிக்கிறது, சுற்றுச்சூழல் பூங்கா. தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காக்களில் பெரியது இது. ஒவ்வொரு பகுதியையும் நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். இதமான சூழலும், இயற்கை அழகு ததும்பும் மலைக்காட்சிகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.

 நீரோட்ட நடைபாதையில் சலசலக்கும் காட்டு ஓடையின் ஓசையைக் கேட்டுக்கொண்டே நடப்பது மனதை இதமாக்குகிறது. வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணச்சிறகை விரித்து அசைந்தாடும் பட்டாம்பூச்சிகள் உள்ளத்தை வசியப்படுத்துகிறது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மேற்கு நோக்கி பார்த்தால் மேற்குத்தொடர்ச்சி மலையின் சொட்டும் பேரழகும், கிழக்கே குற்றாலத்தை சுற்றியுள்ள பசுமையான கிராமங்களும், வயல்வெளிகளும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 

சாகசப் பிரியர்களுக்கு தீனி போடும் சாகச விளையாட்டுத் திடல், காட்டுப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மலர் வனம், ஆங்காங்கே வனத்துக்கு நடுவே தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலித்து நிற்கும் சிற்பங்கள், ஜாதிக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமணப் பயிர்கள் விளைந்துக் கிடக்கும் தோட்டம், பெரணி பூங்கா, மூங்கில் தோட்டம், இயற்கை ஓவியப் பதாகைகள், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, தாழ்தள தோட்டம், நீர் விளையாட்டுத் திடல், பசுமைக் குடில் என சொக்கவைக்கும் அம்சங்கள் எக்கச்சக்கம். ஒவ்வொன்றும் கண்களுக்கு இதமும், மனதுக்கும் புத்துணர்ச்சியும் அளித்து அனுப்புகின்றன. அனைத்தையும் கண்டு ரசித்துவிட்டு திரும்புகையில் அற்புதமான சுற்றுலா அனுபவத்தை உணரமுடிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக சென்று இயற்கையை தரிசித்து மகிழ ஏற்ற இடம்.

குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவை தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. ரம்புட்டான், மங்குஸ்தான், துரியன் போன்ற பலவகை பழச்செடிகள், மூலிகைச் செடிகள், அலங்கார தாவரங்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதுமண தம்பதிகளுக்கு அவுட்டோர் போட்டோகிராபி, சினிமா பாடல் காட்சிகள் படமாக்கும் ‘ஸ்பாட்’ ஆகவும் ‘எகோ பார்க்’ திகழ்கிறது.  இவ்வளவு அழகும் இத்தனை சிறப்பம்சங்களும் நிறைந்த சுற்றுச்சூழல் பூங்கா சுற்றுலாப் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல் உள்ளது. சீசன் காலத்தில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானவர்கள் வரும் நிலையில், ஐம்பது பேர் கூட சுற்றுச்சூழல் பூங்காவைப் பார்க்க ஆர்வம் செலுத்துவதில்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. 

எனவே சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைத்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை இந்தப் பூங்காவை நோக்கி ஈர்க்க வேண்டும் . அதே போல் அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் எழில் மிகு தோற்றங்களை அதிகரித்து பாதுகாக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com