'ஹே சினாமிகா' முதல் பால்கி படம் வரை: 'பான் இந்தியன்' ஸ்டாராக துல்கர் உருவெடுத்தது எப்படி?
மலையாளத்தின் இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் தனது அசராத திரைப் பயணத்தில் 'பான் இந்தியா' நடிகராக உருவெடுத்துள்ளார். இதன் பின்புலத்துடன் அடுத்தடுத்து அவர் நடித்து வரும் திரைப்படங்கள் குறித்த பார்வை இது...
குறிப்பிட்ட மொழியில், அந்த மொழியின் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப எடுக்கப்படும் திரைப்படங்களின் வெற்றி, பல்வேறு மொழிகளிலும் வெளியாகி 'பான் இந்தியா' (Pan-India) திரைப்படங்களாக மாறி வருகின்றன. இதனை முதலில் துவக்கி வைத்தது 'பாகுபலி' திரைப்படம்தான். இதன் காரணமாக இப்போது தெலுங்கு மொழி மட்டும் இல்லாமல், ஒரேநேரத்தில் தமிழ், இந்தி உட்பட இந்தியாவின் பல மொழிகளில் 'பான் இந்தியா' திரைப்படங்கள் உருவாகி வரும் போக்கு காணப்படுகிறது. என்றாலும், ஒரு நடிகர் பல்வேறு மொழிகளில் நேரடியாக ஒரே நேரத்தில் நடிக்கும் போக்கு குறைந்து வருகிறது.
நடிகர் விஜய்சேதுபதி போன்றோர் மற்ற மொழி திரைப்படங்களில் நேரடியாக நடித்தாலும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. அதேபோல் விஜய், பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்கள் எல்லா மொழி திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. மாறாக 'பை-லிங்குவல்' திரைப்படங்களிலேயே நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இன்றைய தேதியில் ஒரே நேரத்தில் பல மொழிகளில், அதுவும் அந்தந்த மொழிகளில் நேரடியாக நடிக்கும் நடிகர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களில் ஒருவர் தனுஷ்; மற்றொருவர் துல்கர் சல்மான். தனுஷ் தமிழைத் தாண்டி இந்தி, ஹாலிவுட் சினிமாக்களில் நடித்து வருகிறார்.
ஆனால், துல்கர் சல்மான் ஹாலிவுட் படங்களில் நடிக்காவிட்டாலும், தென்னிந்திய சினிமாவிலும், அதேநேரம் பாலிவுட் சினிமாவிலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ஒரு பக்கா 'பான் இந்தியா' நடிகராக உள்ளார். கடந்த பிப்ரவரியில்தான் திரைத்துறைக்கு வந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்தார் துல்கர் சல்மான்.
இந்தக் குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். மலையாளத்தின் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சில ஆண்டுகள் முன்னதாகவே தமிழிலும் தனது தடத்தை பதித்தார். இரண்டு ஆண்டுகள் முன்பு 'மகாநதி' படத்தின் மூலமாக தெலுங்கிலும் அறிமுகமானார்.
இந்தப் படமும், 'ஓ காதல் கண்மணி'யின் தெலுங்கு பதிப்பான 'ஓகே பங்காரம்' படமும் அங்கு மெகா ஹிட் அடிக்க, ஆந்திர தேசத்திலும் அவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனால், தற்போது மலையாளத்தை தாண்டி 'சோலோ' ஹீரோவாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஹே சினாமிகா: 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு துல்கர் நடிக்கும் நேரடி தமிழ்ப்படம் இது. இந்திய அளவில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டர்தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹீரோயின்களாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. இந்தப் படத்திற்காக ஒரு பாடல் ஒன்றையும் தமிழில் பாடியிருக்கிறார் துல்கர்.
வான்: இதுவும் ஒரு தமிழ் படம். புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க, இந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பால்கி - துல்கர் காம்பினேஷன்: 'கார்வான்' மற்றும் 'தி ஜோயா பேக்டர்' போன்ற படங்கள் மூலமாக இந்தி சினிமாவிலும் தன்னை நல்ல நடிகராக நிலை நிறுத்தியவர் துல்கர். இந்தப் படங்களின் மூலம் இந்தி சினிமாத் துறையினரின் கவனத்தை தன் பக்கம் துல்கர் திருப்ப, இப்போது 'சீனி கம்', 'பா', 'ஷமிதாப்', 'கி அண்ட் கா', 'பேட் மேன்' உள்ளிட்ட படங்களின் இயக்குநரும், 'இங்கிலீஷ் விங்கிலிஷ்', 'டியர் ஜிந்தகி' படங்களின் தயாரிப்பாளரும் தமிழருமான பால்கியுடன் இணையவிருக்கிறார். பால்கியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான பி.சி ஸ்ரீராம் தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு. கொரோனா லாக்டவுனின்போது பால்கி இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்துள்ளார். திரில்லர் ஜார்னரில் இந்தப் படம் தயாராக இருக்கிறது.
சல்யூட்: மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தாலும், எப்போது தனது தாய்மொழியான மலையாளத்துக்கு முக்கியவத்துவம் கொடுக்கும் ஒரு நடிகர் துல்கர். தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். என்றாலும் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைந்திருப்பது 'சல்யூட்'. இந்தத் திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரோஸ் இயக்க, பிரபல திரைக்கதை எழுத்தாளர்களான பாபி மற்றும் சஞ்சய் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். முதல் முறையாக ஒரு திரைப்படம் முழுவதும் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் துல்கர்.
குருப்: தனது முதல் படமான 'செகண்ட் ஷோ' படத்தின் இயக்குநரான ஸ்ரீநாத் ராஜேந்தின் உடன் மீண்டும் துல்கர் இணையும் படம்தான் இந்த 'குருப்'. துல்கரின் சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் படமும் கூட. இந்தப் படம் மலையாளம், இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது. மலையாளத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடித்திருக்கின்றனர்.
லெப்டினன்ட் ராம்: இது ஒரு தெலுங்கு திரைப்படம். 'மகாநதி' வெற்றியால் தெலுங்கில் ரசிகர்கள் விரும்பும் நடிகராக உருவெடுத்துள்ள துல்கர் தற்போது அந்த மொழியில் நேரடி படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இது ஒரு வரலாற்று புனைவுக்கதை. அதேநேரம் காதல் கதையாகவும் உருவாகிறது. லெப்டினன்ட் ராம் என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார். நேரடி தெலுங்கு திரைப்படமாக உருவாகிறது என்றாலும், மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.
'மலையாள சினிமாவின் ராஜகுமாரன்' என்று வர்ணிக்கப்படுபவர் துல்கர் சல்மான். தந்தை மம்மூட்டி மிகப்பெரிய ஸ்டார் நடிகராக இருந்தாலும், அவரின் நிழலில் இருந்து வராமல், தனது சொந்த முயற்சியில் திரைத்துறைக்குள் வந்தவர், ஒவ்வொரு படத்திலும் தனக்கான பாதையை தேர்ந்தெடுத்து பல வெற்றிகளை பதித்தவர். இதனால் குறுகிய காலத்தில் இந்திய அளவில் தற்போது முன்னணி ஒரு நடிகராக தனது திறமையால் வளர்த்திருக்கிறார் துல்கர். இந்திய அளவில் 'பான் இந்தியா' நடிகராக உருவெடுத்துள்ள துல்கருக்கு இன்று பிறந்தநாளும் கூட. வாழ்த்துகள் துல்கர் சல்மான்!
- மலையரசு