8 நாளில் 1 கோடி விண்ணப்பம்: மேற்கு வங்க அரசு திட்டத்துக்கு பெண்கள் அலைமோதுவதன் பின்புலம்!

8 நாளில் 1 கோடி விண்ணப்பம்: மேற்கு வங்க அரசு திட்டத்துக்கு பெண்கள் அலைமோதுவதன் பின்புலம்!
8 நாளில் 1 கோடி விண்ணப்பம்: மேற்கு வங்க அரசு திட்டத்துக்கு பெண்கள் அலைமோதுவதன் பின்புலம்!

பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் மேற்கு வங்க மாநில அரசு தொடங்கியுள்ள ஒரு திட்டத்துக்கு 8 நாள்களுக்குள் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் கொரோனா பேரிடரால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களில் விளைவை அப்பட்டமாக காட்டுகிறது. இந்தத் திட்டம் குறித்த முழு விவரங்களையும் விரிவாகப் பார்ப்போம்.

மேற்கு வங்க மாநில பெண்கள், கடந்த வாரங்களில் அரசு சார்பில் 'துவாரே சர்க்கார்' முகாம்களில் பெரும்திரளாக கலந்துகொண்டு வருகின்றனர். பெரும்பாலும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பின்னணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மாநிலம் முழுவதும் நடந்து வரும் 'துவாரே சர்க்கார்' முகாம்களில் அணிவகுத்து நிற்கின்றனர். 'துவாரே சர்க்கார்' திட்டம் என்பது மேற்கு வங்க அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம்.

'துவாரே சர்க்கார்' என்பதற்கு, 'மக்களின் வீட்டு வாசலில் அரசு' என்று பொருள். சில மாதங்கள் முன்பு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முதல்வர் மம்தா பானர்ஜியின் கனவுத் திட்டமாக 'லட்சுமிர் பந்தர்' அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கும் மேற்கு வங்க பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகும். அதாவது, எஸ்சி அல்லது எஸ்டி குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 என்கிற ரீதியில் ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகையும், மற்ற சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.500 விகிதத்தில் ஒரு வருடத்திற்கு ரூ.6,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தோடு, 'சாதி சான்றிதழ்' திட்டம், மாணவர்களுக்கு கிரிடிட் கார்டு வழங்கும் 'கிரிஷக் பந்து' திட்டம், நிலப் பதிவுகளில் பிழைகளை திருத்தும் 'பினா முலே சமாஜிக் சுரக்‌ஷயா' திட்டம், மக்களுக்கு புதிய வங்கி கணக்குகளை ஆரம்பிக்க உதவும் வகையில் 'ஸ்வஸ்த்ய சதி', இதுமட்டுமில்லாமல் 'கன்யாஸ்ரீ ', 'ரூபாஸ்ரீ ', 'காத்யா சதி', 'ஷிகாஸ்ரீ' என்பது போன்ற அரசின் பல்வேறு திட்டங்களை மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லும்படி, 'துவாரே சர்க்கார்' முகாம்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்கள் தேர்தலுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போதே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரம் இது மம்தாவின் வெற்றிக்கும் பெரிதும் பங்காற்றியது. இதையடுத்து தேர்தலுக்கு பின்பு இந்த முகாம்களை மீண்டும் நடத்த உத்தரவிட்டார் மம்தா. முதல்கட்டத்திலேயே இரண்டாம் கட்டமாக கோடிக்கணக்கான மக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட முகாம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது.

செப்டம்பர் 15 வரை ஒரு மாதத்தில் சுமார் 17,000 மொத்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் முகாம் தொடங்கிய முதல் எட்டு நாட்களிலேயே, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இதில் பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், முகாம்கள் நடந்து வரும் இடங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். முகாம்களில் கலந்துகொள்ளும் பெண்கள் பலரும் அரசின் உதவித்தொகை வழங்கும் 'லட்சுமிர் பந்தர்' திட்டத்தில் இணைத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் ஒரு குடும்பத்தின் சராசரி அத்தியாவசிய தேவைக்கான செலவு ரூ.5,249 என்கிறது தரவு. இந்தத் தொகையில் அரசு வழங்கும் உதவித்தொகை மாதாந்திர செலவில் முறையே 10 முதல் 20 சதவிகிதம் ஆகும். இதனால், இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள பெண்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். 'துவாரே சர்க்கார்' முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை 'லட்சுமிர் பந்தர்' திட்டத்துக்காக வந்தவையே என்கின்றனர் முகாம் அதிகாரிகள். தினசரி சராசரியாக 10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் 1.6 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இருக்கும் வகையில் அரசாங்கம் மதிப்பிட்டு அதற்காக ரூ.12,900 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்தது. ஆனால், இப்போது கிடைத்துள்ள வரவேற்பை பார்க்கும்போது, திட்டமிடப்பட்டதை விட அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறையின் அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக பேசுகையில், ''நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்களும் பண உதவிக்காக விண்ணப்பிப்பதால், இந்தத் திட்டத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்களை நாங்கள் இப்போது எதிர்பார்க்கிறோம்.

நடுத்தர வர்க்க குடும்பங்கள் கொரோனா தொற்றுநோயால் அனுபவித்து வரும் பொருளாதார சிக்கல்களின் விளைவாக இந்த விண்ணப்பங்கள் அதிகமாகி வருகின்றன. இந்தத் திட்டத்திற்காக அரசுக்கு பட்ஜெட் பற்றாக்குறை இருக்காது. இந்தத் திட்டத்துக்காக வருடத்துக்கு ரூ.11,000 கோடி செலவாகும் என்று தொடக்க மதிப்பீடு எடுத்துரைக்கிறது. ஆனால், பட்ஜெட்டில் ரூ.12,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால், விண்ணப்பங்கள் அதிகரிப்பு பற்றி கவலையில்லை. மேலும் இதற்காக ரூ.17,000 கோடி வரை நிதி ஒதுக்க அரசு ஆலோசித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

உறுதுணை செய்திக் கட்டுரை: The Federal

தமிழில்: மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com