"கிரண்பேடி அணுகுமுறை வேறு; என்னுடைய அணுகுமுறை வேறு" - தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு பேட்டி

"கிரண்பேடி அணுகுமுறை வேறு; என்னுடைய அணுகுமுறை வேறு" - தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு பேட்டி
"கிரண்பேடி அணுகுமுறை வேறு; என்னுடைய அணுகுமுறை வேறு" - தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு பேட்டி

புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டு புதிய துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றிருக்கிறார், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.

தமிழில் பதவியேற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தது… கிரண்பேடியால் போடப்பட்டிருந்த தடைகளை அகற்றி உத்தரவிட்டது என்று அதிரடி ஆளுநராக வலம் வரும் தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று சில நாள்கள்தான் ஆகிறது. அதற்குள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி செயல் புயலாக சுழன்றுகொண்டிருக்கிறார். அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம், அதே டைமிங்… அதே ரைமிங்கில் பேசினார்.

தமிழ் பேசும் மாநிலத்துக்கு ஆளுநரானது எப்படி இருக்கிறது?

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய சரித்திரத்தில் தமிழில் ஆளுநராக பதவியேற்கும் வாய்ப்பு எத்தனைப் பேருக்கு கிடைத்திருக்கும் என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து தமிழிசையாக வளர்ந்து தமிழில் ஆளுநராக உறுதிமொழி எடுத்துக்கொண்டதை மிகப்பெரிய பேராக நினைக்கிறேன். இந்தப் பாக்கியத்தைக் கொடுத்த ஆண்டவருக்கும் மத்தியில் ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி அரசியலில் இதுவரை ஆளுநருக்கும் முதல்வருக்கும் இருந்த மோதல் போக்கு இனிமேல் எப்படி இருக்கும்?

நான் எப்போதும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்வேன். ஏற்கெனவே, ஆக்கப்பூர்வமாக அணுகிதான் ஒன்றரை வருடமாக தெலங்கானாவில் சிறப்பாக பணியாற்றினேன். தெலங்கானா மத்தியை ஆளும் கட்சிக்கு எதிரான மாநிலம். ஆனால், அந்த மாநிலத்திலேயே எந்த பிரச்னையும் இல்லை. எந்தவித எதிர்வினையும் இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் சார்ந்தே என் பணி இருக்கும். அரசியல் சார்ந்தோ ஈகோ சார்ந்தோ இருக்காது. அதேசமயம், யாரையும் எதிர்கொள்ளும் திறன் எனக்கு எப்போதும் உண்டு. அதில் எந்தவித மாற்றுக்கருத்து இல்லை. சட்டத்திற்கு உட்பட்டு எனது வரம்பிற்குட்பட்டு நடந்துகொள்வேன்.

 இரண்டு மாநில ஆளுநர் என்பது கூடுதல் பணிச்சுமை இல்லையா?

தெலங்கானா ஆளுநராக பதவியேற்றபோது சவால்கள் நிறைந்த மாநிலத்தை எப்படி சாமாளிக்கப்போகிறார் என்று விமர்சனங்கள் வந்தன. ’நான் ஒரு மகப்பேறு  மருத்துவர். புதிதாகப் பிறந்த குழந்தையை கையாள்வதில் எனக்கு அனுபவம் இருக்கிறது. அதனால், புதிதாக பிறந்த தெலங்கானாவை நான் சிறப்பாக கையாள்வேன்’ என்றேன். அப்படியே, கொரோனா போன்ற சவாலான சூழலிலும் சிறப்பாக பணியாற்றி நிரூபித்தும் காட்டினேன். புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகப் பொறுப்பேற்றாலும் தெலங்கானா பணிகள் தொய்வடையக்கூடாது என்பதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் அதிகாரிகளுடன் பணிகளை மேற்கொண்டேன். மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் நிர்வகிக்கக்கூடிய திறமையும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தால், எத்தனை மாநிலங்களை வேண்டுமென்றாலும் நிர்வகிக்கலாம்.

கிரண்பேடி புதுச்சேரி மக்களுக்கு நலத்திட்டங்களை செய்யவிடவில்லை என்றக் குற்றச்சாட்டு இருக்கிறதே? அதே குற்றச்ச்சாட்டு உங்களுக்கும் வந்தால் எப்படி எதிர்கொள்வீர்கள்?

என்மீது அப்படியொரு குற்றச்சாட்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழிசை மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாக இருக்கிறார் என்று யாராலும் சொல்ல முடியாது. புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்றவுடனேயே ராஜ்பவன் முன்பு போடப்பட்டிருந்த தடைகளை அகற்ற உத்தரவிட்டேன். பாரதி சிலையை சுற்றி மக்கள் வரமுடியாத அளவிற்கு போடப்பட்டிருந்த ஆறடுக்கு பாதுகாப்பு அரணையும் நீக்கினேன். மக்களிடம் பழகும் அணுகுமுறையில் மாற்றம்  இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்னை ஆளுநராக நியமித்தார்கள். அதற்காக, இதற்கு முன்பு இருந்த கிரண்பேடியின் நிர்வாகம் தவறு என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு செயல்முறை, ஒரு அணுகுமுறை, ஒரு அனுபவம் இருக்கும். கிரண்பேடி காவல்துறை அதிகாரியாக இருந்ததால் சில நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம். நான் மக்களோடு பழகும் அரசியல் பின்னணியில் வளர்ந்த ஒரு நபர் என்பதால் என்னுடைய அணுகுமுறை வேறு மாதிரி இருந்திருக்கலாம். இவர் இப்படி, அப்படி என்று நியாயப்படுத்துவது அநியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல. அதனால், தமிழிசை மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் குறுக்கே வருவார் என்பதற்கு வாய்ப்பே இல்லை. மக்கள் நலனைச் சார்ந்துதான் இருப்பேனே தவிர எதிர்ப்பாக இருக்கமாட்டேன். பதவியேற்று 48 மணிநேரம்தான் ஆகிறது. அதற்குள், புதுச்சேரியின்  நான்கு மாவட்டங்களுக்கும் ஓய்வில்லாமல் சென்று மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், மீனவர்கள் என்று அனைத்து தரப்பினரையும் சந்தித்து வருகின்றேன். நிச்சயம் குறுகிய காலக்கட்டத்திற்குள் சிறப்பான பணியை வழங்குவேன்.

 அப்படியென்றால், புதுச்சேரி மக்களுக்கு இனிமேல் விடிவுகாலம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

(சிரிக்கிறார்)  விடிவு காலம் என்பதைவிட நல்லகாலம் என்று எடுத்துக்கொள்ளலாம். முதல் கையெழுத்தே ஒடுக்கப்பட்ட மக்களை முன்னேற்றிவிடும் கையெழுத்தாக இருக்கவேண்டும் என்பதற்காக பட்டியல் இன மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை கொடுக்கும் கோப்பில்தான் போட்டேன்.  மருத்துவர் என்ற முறையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் கோப்புதான் இரண்டாவது போட்டக் கையெழுத்து. நான் போட்ட இரண்டு கையெழுத்துமே புதுச்சேரி மக்களின் தலையெழுத்தை மாற்றக்கூடியதாக இருந்தது. இனிமேலும் இருக்கும்.

ஆட்சி முடியும் நேரத்தில், அதுவும் பெரும்பான்மையை இழக்கும்போது உங்களை ஆளுநராக நியமித்துள்ளதை ’பாஜகவுக்கு வெறுப்பு ஏற்படுவதை தவிர்க்கத்தான் தமிழ் தெரிந்த முகத்தை ஆளுநராக போட்டுள்ளார்கள்’ என்று சொல்லப்படுகிறதே? பாஜக உங்களை பயன்படுத்திக்கொண்டதா?

மக்கள் பலன் பெறுவார்கள்; பயன்பெறுவார்கள் என்பதற்காகத்தான் என்னை ஆளுநர் பணிக்கு அனுப்பி இருகிறார்கள். அப்படியே பயன்படுத்திக்கொள்ளத்தான் அனுப்பியிருக்கிறார்கள் என்றால், நான் மகிழத்தான் செய்வேன். இதே முதல்வர் நாராயணசாமிதான் கிரண்பேடியை மாற்றவேண்டும் என்றார். தற்போது, மாற்றியவுடன் ஏன் இவங்களைப் போட்டாங்க என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது?

மேலும், ஆளுநருக்கென்று ஒரு கால அவகாசம் இருக்கிறது. கோரிக்கைகள் பல நாட்கள் வந்திருக்கலாம். மொழி தெரிந்த ஆளுநராக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம். அதோடு, எனக்கும் ஒன்றரை வருட ஆளுநர் அனுபவம் இருக்கிறது என்பதாலும் போட்டிருக்கலாம். நான் தமிழ் தெரிந்த ஆளுநர். 20 வருடமாக தமிழ் மக்களின் வாழ்க்கை முறை தெரியும். தமிழக மக்கள் மற்றும் புதுச்சேரி மக்களின் வாழ்க்கை முறை ஒன்றுதான். மக்களை புரிந்துகொள்ளக்கூடிய திறமை இருக்கிறது. அதனால், பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்து என்மீது நம்பிக்கை வைத்து கொடுத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை சிறிதுகூட சிதறடிக்கமாட்டேன். அதற்கான, முழுப் பணியை செய்வேன். இரண்டு மாநில மக்களுக்காகவும் 24 மணிநேரமும் உழைக்க தயாராக இருக்கிறேன்.

புதுசேரியில் ஆளுநர் ஆட்சி வரப்போகிறது என்கிறார்களே?

யூகங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அரசியல் சட்டத் திட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றுவேன். எதிர்கட்சிகள் ஆதாரப்பூர்வமாக கடிதம் கொடுத்ததால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கச் சொல்லியுள்ளேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் முடிவு என்ன வரப்போகிறதோ அதையொட்டியே, அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும்.

’நியமன எம்.எல்,ஏக்களையும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்களுடன்  சேர்த்து தமிழிசை செளந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்துவிட்டார்’ என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே?

இதற்கு நான் அரசியல்வாதி மாதிரி பதில் சொல்ல விரும்பவில்லை. ரங்கசாமி கொடுத்த கடிதத்தில் இருந்ததற்கு பதில் கூறுங்கள் என்று கூறியிருக்கிறேன். எனக்கும் அரசியல் தெரியும். தமிழில் ஆளுநராகப் பதவியேற்று வரலாற்றில் சரித்திரம் படைத்திருக்கிறேனே  தவிர வரலாற்று பிழை செய்யும் நபர் நான் கிடையாது.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பம்.  தமிழகத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறதே…எப்படி இருக்கிறது உங்கள் மனநிலை?

ஆளுநராக இருப்பதால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. ஆளுநராகவும் இருந்து மக்களுக்கு செய்யமுடியும் என்பதை நிரூபித்தும் வருகின்றேன். ஆளுநரை விட துணைநிலை ஆளுநருக்கு பொறுப்புகள் அதிகம். ஆளுநர் சில நடவடிக்கைகளை நேரடியாக எடுக்க முடியாது. ஆனால், துணை நிலை ஆளுநர் எடுக்கலாம். அங்கன்வாடிகளில் கடலைமிட்டாய், முட்டை போடுவது எனது ஆளுமைக்கு உட்பட்டு செய்யவிருக்கிறேன். துணைநிலை ஆளுநராக இருந்தாலும் மக்களுக்குத் துணை புரிவதற்காகத்தான் புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன். பேரே புதுச்சேரி. மக்கள் சேவை மூலம் பல புதுமைகள் படைப்பேன்.

நியமன எம்.எல்.ஏக்கள் ஓட்டு செல்லாது என்று கூறப்படுகிறதே?

நியமன எம்.எல்.ஏக்களும் பாஜக எம்.எல்.ஏக்கள்தான். நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கலாம், அவர்களின் வாக்கும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். அதனால், அவர்களின் வாக்கு செல்லாது என்பதே தவறு. உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல்  பொய் சொல்வதுதான் வரலாற்றுப்பிழை.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com