”தியேட்டரில் பொதுக்கழிப்பிடம்தான்; கொரோனா யாரால் பரவுமென்றே தெரியாது” - டாக்டர் புகழேந்தி
தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது திரைத்துறையினர் மத்தியில் வரவேற்பை உண்டாக்கினாலும் காற்றோட்டமில்லாமல் மூடப்பட்ட தியேட்டர்களில் கூட்டமாக அமர்ந்து படம் பார்ப்பதால் அதிவேகமாக கொரோனா பரவும்’; என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் மருத்துவத்துறையினர்.
’அரசு வகுத்த விதிமுறைகளை கடைப்பிடித்தே தியேட்டர்களுக்குச் சென்றால்கூட கொரோனா தொற்று பரவுமா?’ என்று பிரபல மக்கள் மருத்துவர் டாக்டர் வீ.புகழேந்தியிடம் கேட்டோம். “நிச்சயம் பரவும்” என்று அதிர்ச்சியூட்டி பேசத்துவங்குகிறார்.
(டாக்டர் புகழேந்தி)
“தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதித்தது மிகப்பெரிய தவறான செயல். அரசு இதனை அறிவியல் ரீதியில் அணுகவில்லை. மாறாக, நடிகர்களின் நலனுக்காக பொதுமக்களின் உயிரோடு விளையாடும் அறிவிப்பாகத்தான் இதனை பார்க்கிறேன். கொரோனாவை பொறுத்தவரை கடற்கரை போன்ற திறந்தவெளி இடங்கள் பிரச்சனை இல்லை. காற்றோட்டமில்லாத மூடப்பட்ட உள் அரங்கங்கள்தான் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். திறந்தவெளி இடங்களில் காற்றோட்டமும் நல்ல இடைவெளியும் இருக்கிறது. எல்லோரும் இடைவெளி விட்டுதான் இருப்பார்கள். அதுவும், சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிடுவார்கள்.
ஆனால், உள் அரங்குகளாக உள்ள தியேட்டர்களில் எல்லா கதவுகளும் மூடப்பட்டு காற்றோட்டம் இல்லாமல், அதுவும் தொடர்ச்சியாக இரண்டரை மணிநேரம் கூட்டமாக அமர்ந்திருக்கவேண்டிய சூழல் இருக்கிறது. கொரோனா காற்றோட்டமான பகுதிகளிலேயே 6 அடி தாண்டி பரவும் என்பதால் மாஸ்க் அணிந்துகொள்ளச் சொல்கிறார்கள். காற்றோட்டமில்லாத உள் அரங்குகளில் 18 அடியிலிருந்து 20 அடிவரை கொரோனா பரவும் என்று ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, தியேட்டர்களில் காற்றோட்ட பகுதிகளில் கடைப்பிடிக்கச் சொல்லப்படும் 6 அடி இடைவெளியாவது விட்டு அமரும் இருக்கைகள் இருக்கிறதா? ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடைவெளி இல்லாமல் அல்லவா உள்ளன. இதனால், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்திருப்பதால் கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதுவரை, வெளியான கொரோனா பரிசோதனை மருத்துவ ஆய்வுகள் எல்லாமே ’கொரோனா பொதுவெளியில் அதிகம் பரவுவதை விட உள் அரங்குகளில்தான் விரைவாக பரவுகிறது’ என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் சீனாவின் உகானில் கொரோனா பரவியபோது பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று காட்டினார்கள். ஆனால், மருத்துவமனைகளிலிருந்துதான் அதிகம் பேருக்கு கொரோனா தொற்று பரவியது. எப்படி பரவியது என்று மருத்துவ வல்லுநர்கள் ஆராய்ந்தபோதுதான் கழிவறைகள் மூலம் பரவுவதைக் கண்டறிந்தார்கள்.
நல்ல வசதிப் படைத்தவர்கள் மருத்துவமனையில் சேரும்போது தனியாக பணம் செலுத்தி தனி அறையுடன் கூடிய கழிப்பறைகளை வாங்கிக் கொள்கிறார்கள். அதுவே, சாதாரண மக்களுக்கு முடியாத காரியம். உகான் மருத்துவமனைகளில் சாதாரண வார்டுகளில் இருந்த மக்கள் பொதுக் கழிவறைகளைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். தனியாக இருந்தவர்களைவிட பொது கழிவறைகள் இருந்த வார்டுகளில்தான் கொரோனா அதிகம் பேருக்கு பரவி இருக்கிறது. இதற்கு, பொதுக்கழிப்பறைகள் இருப்பதே காரணம் என்பதை கண்டறிந்து உலகிற்கு வெளிப்படுத்தினர்.
உள் அரங்கங்கள் எனப்படும் கட்டிடங்களில் இருக்கும் கழிவறைகள் காற்றோட்டமில்லாமல் மூடப்பட்டே இருக்கும். கொரோனா பாதித்த ஒருவர் டாய்லெட் சென்றால், அவரது கழிவுகள் மூலமும் கொரோனா வெளியாகி பரவும். அதற்கு, வெஸ்டர்ன் டாய்லெட்டாக இருந்தால் கழிவுகள் வெளியேறியபின் டாய்லெட் மூடியை மூடிவிட்டுத்தான் நீரை திறக்கவேண்டும். அப்படி மூடாமல் நீரை திறந்துவிட்டால் கொரோனா காற்றின் மூலம் கழிவறையில் பரவி மூடப்பட்ட கழிவறையிலேயே சுழன்றுகொண்டிருக்கும். அந்த இடத்திற்கு மற்றொருவர் டாய்லெட் போக வரும்போது அவருக்கும் கொரோனா பரவும் என்பதை கண்டுப்பிடித்தார்கள்.
எனவே, இதேபோல்தான் தியேட்டர்கள் மட்டுமல்லாமல் தியேட்டர்களில் இருக்கும் கழிவறைகளும் காற்றோட்டமில்லாமல் மூடப்பட்டிருக்கும். கொரோனா பாதித்த ஒருவர் பயன்படுத்திய டாய்லெட்டை மற்றவர் பயன்படுத்தினால் கட்டாயம் கொரோனா பரவும். தியேட்டர்களில் டாய்லெட்டும் தனிதனிக் கிடையாது. எல்லோருக்கும் பொதுவானதுதான். படத்தின் இடைவெளி சமயத்தில் எல்லோரும் டாய்லெட் செல்வார்கள். டாய்லெட்டை பயன்படுத்தும்போது அதன் மூடியை மூடிவிட்டுத்தான் நீரை விடவேண்டும் என்பது இவர்களுக்கு தெரியுமா? அதோடு, ஒருவர் பயன்படுத்தியபின் 5 நிமிடம் கழித்துதான் மற்றொருவர் செல்லவேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்களா? அப்படியே அதனை கடைப்பிடிப்பார்களா? இடைவேளையில் மீண்டும் படத்தை ஆரம்பித்துவிடுவார்கள் என்று அவசர அவசரமாகவல்லவா பயன்படுத்திவிட்டு ஓடுவார்கள்? இதனால், கொரோனா எளிதில் பரவ வாய்ப்புகள் அதிகம் தியேட்டரில் உள்ளன.
அதேபோல, தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கத்துவார்கள், தும்முவார்கள், விசிலடிப்பார்கள். கூட்டமாக நடனம் ஆடுவார்கள். இதுபோன்ற செயல்களால், கொரோனா வைரஸின் துகள்கள் வெளிவந்து கொண்டேதான் இருக்கும். அது அப்படியே சர்குலேட் ஆகி வெளியில் சென்றால் பரவாயில்லை. கதவுகள் மூடப்பட்டிருப்பதால் இரண்டரை மணி நேரம் ஒரே இடத்தில்தான் இருக்கும். தியேட்டர், ஜிம் போன்ற உள் அரங்குகளில்தான் நாம் மூச்சை இன்னும் இழுப்போம். காற்று அதிகம் தேவைப்படும். அப்படியொரு நிலையில் எளிதில் கொரோனா பரவிவிடும்.
அதேபோல, தியேட்டரில் ஏசி போட்டிருக்கும்போது குளிர்ந்த காற்றில் வைரஸ் மேலே செல்லாமல் கீழேயேதான் உயிர்ப்புடன் இருக்கும். அதுவே, காற்றோட்டமுள்ள பொதுவெளியில் வைரஸ் வெளியானால் சூட்டில் மேலே சென்றுவிடும். அதன் பரவும் தன்மை என்பது குறைவுதான். மேலும், பொதுவெளியில் சிறிதுநேரம் மாஸ்க் போட்டாலே கழட்டி மூச்சை நன்கு இழுத்து விடுகிறார்கள். மக்கள் தொடர்ச்சியாக இரண்டரை மணிநேரம் தியேட்டரில் மாஸ்க் போட்டிருப்பார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? தொடர்ச்சியாக இவர்கள் மாஸ்க் போட்டிருக்கிறார்கள் என்பதை யார் பார்த்துக் கொண்டிருப்பார்களா? இதுபோன்ற காரணங்களால் குளிந்த ஏசி காற்றில் கொரோனா கூடுதலாகத்தான் பரவும்.
சென்னை ஐ.ஐ.டியில் மாணவர்களுக்கு உள் அரங்கில்தான் கொத்தாக கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேபோலத்தான் ஐடிசி சோழா, லீலா பேலஸ் உள்ளிட்ட ஸ்டார் ஹோட்டல்களின் உள் அரங்குகளிலும் கொத்துக் கொத்தாக கொரோனா பரவியதை தமிழகமே அறியும். ஒரே இடத்தில் இப்படி கொத்தாக மக்கள் பாதிக்கப்படுவதை ’cluster’ என்பார்கள். அதேவகையில்தான், தற்போது தியேட்டரிலும் கொரோனா கண்டிப்பாக பரவும். லீலா பேலஸ், ஐடிசி கிராண்ட் சோழா பிரம்மாண்ட ஸ்டார் ஹோட்டல்கள் இடம் இல்லாமல் அடைத்துக்கொண்டா இருக்கிறது.
அங்கேயே, இப்படியென்றால் தியேட்டர்களில் கூட்டமாக அமர்ந்து படம் பார்க்கும்போது எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை தமிழக அரசும் கோரிக்கை வைத்த நடிகர்களும் அக்கறையுடன் யோசித்துப் பார்க்க வேண்டும். தியேட்டர் வருபவர்களுக்கு வெப்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்வார்களா? தியேட்டர் ஊழியர்கள் பார்ப்பார்களா? அப்படியே சாதாரணமாக காய்ச்சல் இருந்தால் வெளியே அனுப்பிவிடுவார்களா? இதுபோன்ற எதையும் இவர்கள் தெளிவுப்படுத்தவில்லை.
மிக முக்கியமாக, ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். பள்ளியில் ஒரு மாணவரால் மற்றொரு மாணவருக்கு கொரோனா பரவியது என்றால் யாரால்? எப்படி பரவியது? என்பது உடனே தெரிந்துவிடும். ஏனென்றால், அனைவருமே தெரிந்தவர்கள். ’நானும் அவனும் ஒன்னா விளையாடினோம் பரவியது’ என்பார்கள். ஆனால், தியேட்டரில் அப்படி யார் யாருடன் அருகில் உட்கார்ந்தார்கள்? யார் கழிவறைக்கு சென்று வந்தபின்பு யார் போனார்கள்? யார் இருமிக்கொண்டே இருந்தார்கள் என்பதை சொல்ல முடியுமா? எங்கிருந்தோ தொடர்பே இல்லாமல் இருப்பவர்கள்தான் கூடிப்படம் பார்க்கப் போகிறார்கள். கொரோனா இருந்தாலும் தெரியாமலோ மறைத்தோ தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள். யாரால் எப்படி பரவியது என்பதை கண்டுப்பிடிக்க முடியுமா? ஆக, இதுபோன்ற காரணங்களால் அரசின் இந்த அறிவிப்பு அறிவியல்பூர்வமாக சரியானது கிடையாது.
சென்னையில் கொரோனா அரசின் கட்டுக்குள் இருக்கிறது என்கிறார்கள். அது உண்மை கிடையாது. குறைவான மக்களுக்கு பரிசோதித்துவிட்டு கொரோனா குறைந்துவிட்டது என்கிறது அரசு. தற்போது உருமாறிய கொரோனா மீண்டும் பரவி மக்களை பயமுறுத்தி வருகிறது. 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க கோரிக்கை வைத்த தியேட்டர் உரிமையாளர்களும் விஜய் உட்பட அனைவருமே சுயநலவாதிகள். இவர்களுக்கு பொதுமக்கள் மீது எவ்வித அக்கறையும் கிடையாது. சில நடிகர்கள் பொது பிரச்சனை குறித்து பேசுகிறார்கள். ஆனால், இதற்கு மட்டும் ஏன் வாய் திறக்கவில்லை?” என்று கேள்வி எழுப்புகிறார், மருத்துவர் புகழேந்தி
- வினி சர்பனா