“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”

“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”

“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”
Published on

2016-17 பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி “10 பொது மற்றும் 10 தனியார் நிறுவங்கள் உலகளாவிய கல்வியை கற்பிக்கும் மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களாக உருவெடுக்க செயல்பாட்டு ஒழுங்குமுறை கட்டமைக்கப்படும்" என அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்கான காரணம் உலக பல்கலைக்கழகங்களின் வரிசைப்பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் முதல் 100 பல்கலைக்கழகங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம்பெறுவது இல்லை. பல ஆண்டுகளில் முதல் 200 இடங்களைக் கூட இந்தியாவை சேர்ந்த எந்தப் பல்கலைக்கழகத்தாலும் ஈட்ட முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் அந்தத் தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற அவர்களை அரசாங்க பிடியில் இருந்து சற்றே தளர்த்தி சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என அரசு தீர்மானித்தது. இதற்காக "இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்"(Institute of Eminence) என்ற கொள்கையை வகுத்தது மத்திய மோடி அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்.

இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் குறித்த விதிகள் ஆகஸ்ட் 29, 2017 அன்று அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இந்த விதிகளின் கீழ் தேர்வு செய்யப்படும் பல்கலைக்கழகங்கள் கட்டணங்களை நிர்ணயிப்பது மற்றும் புதிய படிப்புகளை துவங்குவது உள்ளிட்டவைகளுக்கு பல்கலைக்கழக மானிய குழுவால்(University Grant Commission) தடை உண்டாக்க இயலாது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் UGC யின் கண்காணிப்புக்கு கீழ்படிய வேண்டியதுமில்லை. இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இவை அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொறு 15 ஆண்டிற்கும் அரசு ஒப்புதல் பெற்ற திட்டத்தை வகுக்க வேண்டும்.

ஆகஸ்ட் 2017 விதிகள் சில அளவுருக்களை(parameters)நிர்ணயித்துள்ளது, அதன் மூலம் இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்த்தை பெற பல்கலைக்கழகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மூன்று வகையான பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்கலாம் என தெளிவாக கூறப்பட்டிருந்தது. பொது, தனியார் மற்றும் பசுமைவெளி(Greenfield) இந்த மூன்று பிரிவுகளில் தேர்வு செய்யப்படவுள்ள பத்து அரசு பொது பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் ரூபாய் ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும், தனியார் மற்றும் பசுமைவெளி(Greenfield) வகையில் தேர்வு செய்யப்படவுள்ள 10 நிறுவனங்கள் அரசிடமிருந்து எந்த நிதியையும் பெற முடியாது, அவர்களுக்கான நிதியை அவர்களே தான் சொந்தமாக திரட்ட வேண்டும். மூன்றாவது வகையான பசுமைவெளி(Greenfield)வகையின் கீழ் இன்னும் நிறுவப்படாத கல்வி நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

விதிகளை கவனத்தில் கொண்டு பார்க்கின்ற போதும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்கிற போதும் தற்போது நடப்பிலுள்ள பல்கலைக்கழகங்கள், அவர்களின் நடப்பு செயல்பாடுகள் குறித்த தகவல் அறிக்கையையும் அதற்கான சான்றுகளுடன் மேலும்  தங்கள் நிறுவனத்தை வளர்ப்பதற்கான அடுத்த 15 ஆண்டு திட்டம் என்ன என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும். பசுமைவெளியை(Greenfield) ஊக்கப்படுத்துபவர்கள் அவர்களின் வருங்கால திட்டங்களை மிக விரிவாக சமர்பிக்க வேண்டும் என விதிகள் கோரியிருந்தன.
இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் பட்டியலில் இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8 மாதங்கள் முன்பே வரவேற்கப்பட்டது. மொத்தம் 114 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தனியார் பிரிவின் கீழ் பெறப்பட்ட 40 விண்ணப்பங்களில் 11 நிறுவனங்கள் இன்னும் தொடங்கப்படாத பசுமைவெளி(Greenfield) பிரிவில் விண்ணப்பித்து இருந்தன. இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்த்தை வழங்க மத்திய அரசிடன் பரிந்துரைக்க முன்னாள் தேர்தல் கமிஷனரான திரு.N.கோபால்சாமி அவர்களின் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இவை அனைத்தும் முடிந்தும்,கடந்த வாரம் மத்திய அரசு இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்த்துக்கு தேர்ச்சி பெற்ற நிறுவனங்களின் முதற்கட்ட பட்டியலை அறிவித்தது. இதில் பொது பிரிவில் மூன்று நிறுவனங்களும்(ஐஐடி டெல்லி, ஐஐடி பம்பாய், ஐஐஎஸ்சி பெங்களூரு) தனியார் பிரிவில் இரண்டு நிறுவனங்களும் (பிட்ஸ் பிலானி, மணிப்பால் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன்) பசுமைவெளி(Greenfield) பிரிவில் ஒரு நிறுவனமும் (ஜியோ இன்ஸ்டிடியூட்) இடம்பெற்றது. பசுமைவெளி(Greenfield) பிரிவில் இடம்பெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட் மட்டும் தற்போது கடுமையான விவாதங்களுக்கு ஆளாகியுள்ளது. மேலே குறிப்பிட்டது போல ஆகஸ்ட் 2017-ல் மத்திய அரசால் வகுக்கப்பட்ட விதிகளின் கீழ் இருந்த பசுமைவெளி(Greenfield) பிரிவில் இன்னும் தொடங்கப்படாத 11 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. இந்தப் பதினொன்றில் ஒன்றாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பசுமைவெளி(Greenfield) பிரிவின் கீழ் விண்ணப்பித்து போட்டியில் இருந்த வேறு சில நிறுவனங்கள் வேதாந்தா, பாரதி ஏர்டெல், கிரேயா பவுண்டேஷன் ஆகியவை.

பசுமைவெளி(Greenfield) பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு நிபந்தனையுடனான கடிதம் (Letter of Intent) மட்டுமே வழங்கப்படும். சரியான கட்டுமானம், வளாகம், வசதிகள் ஆகியவை 3 ஆண்டுகளுள் நிர்மாணிக்கப்பட்டு கல்வி பணிகள் துவங்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கும் பின்னரே அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஜியோ இன்ஸ்டிடியூட் தேர்வு செய்யப்பட்டது எதன் அடிப்படையில்?

ஆகஸ்ட் 2017 விதிகளின் படி விண்ணபித்திருக்கும் நிறுவனம் அதன் குழுவில் இருக்கும் உறுப்பினர்களால் எதிர்பார்க்கப்படும் உயர்ந்த கல்வி தரநிலைகளை எட்டி “சர்வதேச கல்வி நிறுவனம்” என்ற இடத்திற்கு அந்நிறுவனத்தை உயர்த்த உதவ முடியும் என்பதை நிருபிக்க வேண்டும். மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஜூலை 9 அன்று அளித்த விளக்கத்தின் படி ஓர் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான போதிய இடத்தை அல்லது நிலத்தை வைத்திருப்பது  ஜியோ பல்கலைகழகத்தை தேர்வு செய்வதற்கான காரணங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஜியோவிடம் மட்டுமே உடனடியாக இயங்குவதற்கான ஆயத்தம், தயாரான நிலம், செயல்முறைப்படுத்தும் முறைகள், போதுமான நிதி, தேவைப்படும் மற்ற அம்சங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்ததாக” நிபுணர் குழுவின் தலைவர் திரு.N.கோபால்சாமி தெரிவித்துள்ளார்.

அது போக, இரண்டு குறிப்பிட்ட விதிகள் ரிலையன்ஸ் குழுமத்திற்கு இந்த வாய்ப்பினை பெற்று தர பெருமளவு உதவியிருக்கிறது எனலாம். அதில் ஒன்று, மொழியப்பட்ட பல்கலைகழகத்தின் “நிதி வழங்கும் நிறுவனத்தை” சார்ந்த தனிநபரின் கூட்டு நிகர மதிப்பு 50 பில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற விதி. மற்றொரு விதி, முன்மொழியப்பட்ட குழுமம் இதற்கு முன் “அவர்களின் திட்டங்களை எந்தத் துறையிலேனும் (உயர்கல்வித்துறையை சார்ந்ததாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் இருக்கும் பட்சத்தில் அது கணக்கில் கொள்ளப்படும்) நிதர்சனமாக கட்டமைத்ததற்கான நிரூபிக்கப்பட்ட தரவுகள் இருக்க வேண்டும் என்பது.

ஆக, ஆகஸ்ட் 29, 2017 விதிகள் படி பசுமைவெளி(Greenfield) நிறுவன பட்டியலில் இணைய மத்திய அரசு வகுத்த விதிகள். 

·இந்நிறுவனத்தை ஊக்குவிக்க இருக்கும் தனிநபரின் கூட்டு நிகர மதிப்பு 50 மில்லியனுக்கும் அதிகமானதாக இருக்க வேண்டும். 

·களத்தில் இயங்கி சாதனைகள் புரிந்ததற்கான தரவுகள், சான்றுகள் இருக்க வேண்டும். 

இவை இரண்டையும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட் பூர்த்தி செய்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க வாய்ப்பு இல்லை.

ஜியோவின் திட்ட வரைவில், இதற்கு முன் இந்தியாவின் முக்கிய துறைகளில் அவர்கள் திட்டத்தை செயல்படுத்திய விதத்தின் தாக்கம், ஆய்வுகளுக்காக கடந்த ஐந்தாண்டில் அவர்கள் செலவழித்திருக்கும் 6000 கோடி மற்றும் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களுடனான அவர்களின் உறவு ஆகியவை கருத்தில் கொண்டுள்ளது நிபுணர் குழு. கல்வித்துறையில் அவர்களுக்கு இருந்த அனுபவமும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி, 13,000 மாணவர்களை கொண்ட ரிலையன்ஸ் பவுண்டேசனின் 13 பள்ளிகள். திருபாய் அம்பானி இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் அன்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, பண்டிட் தீன் தயால் பெட்ரோலியம் பல்கலைக்கழகம் மற்றும் முகேஷ் அம்பானி சொந்த பங்காற்றி வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மானேஜ்மென்ட், பெங்களூரூ (இதன் தலைவராக இருந்தவர் முகேஷ் அம்பானி) ஆகியவையை கணக்கில் கொண்டுள்ளனர். 

நிபுணர் குழுவின் அறிக்கைப்படி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 11 பசுமைவெளி(Greenfield) விண்ணப்பங்களுள் பல அடிப்படை விதிகளையே உடைப்பதாக இருந்துள்ளது. சிலரிடம் பலவீனமான பொருளாதார நிலைபாடும் மற்றொன்றில் அவர்கள் குறிப்பிட்டுள்ள நிலம் சட்ட ரீதியான பிரச்னைகளை சந்திப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே சிறந்த தலைமைப்பண்பின் மீதான நன்மதிப்பை தாண்டி, அதன் பொருளாதார நிலைபாடு மற்றும் கட்டுமானம் நிதி ஆகியவை குறித்த உறுதியான வாக்குறுதி ஆகியவை கணக்கில் கொண்டு பரிசீலிக்கப்பட்டுள்ளன. 

ஜியோ நிறுவனத்தை இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் பட்டியலில் இணைத்த அரசின் செயல்பாடுகளும் எழும் விமர்சனங்களை எதிர்கொண்டு பேசிய நிபுணர் குழு தலைவர் திரு.கோபாலசாமி “ஏன்னிடம் யாராவது, எதற்கான ஜியோவை தேர்வு செய்தீர்கள் என கேட்டால், ஏன் ஜியோவை தேர்வு செய்யக்கூடாது என நான் திரும்ப கேட்பேன்” என்றும் பசுமைவெளி(Greenfield) பல்கலைக்கழகத்திற்கு தேவையான அனைத்து விதிமுறைகளையும் அது எட்டியிருப்பதாகவும் கருத்து தெரிவித்தார். இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் தேர்வு நேர்காணலின் முகேஷ் அம்பானி தலைமையில் எட்டு பேர் கொண்ட ஜியோ குழுத் திட்ட விளக்கத்தை முன்னாள் தேர்தல் கமிஷனரான திரு.N கோபல்சாமி அவர்களின் தலைமையிலான அதிகாரங்கள் நிறைந்த நிபுணர் குழுவின் முன் விளக்கினர். 

இந்த ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகமானது மஹாராஸ்ட்ராவின், கஜ்ராத் பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவிலான வளாகமாக அமையவுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் Reliance Foundation Institution of Education Research (RFIER) என்கிற நிறுவனம் மூலம் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது. இதில்  நீத்தா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் முதல் இரண்டு நிறுவன குழு உறுப்பினர்களாக(Directors) உள்ளனர். விதிகளை பின்பற்றி துவங்கவிருக்கும் நிறுவனத்திற்கு அரசியல் சாயம் பூசாமல் தகுந்த ஆதாரங்களுடன் எதிர்வினை ஆற்றுவதே அறிவாந்தவர்கள் அணுகும் முறையாக இருக்க முடியும்

குறிப்பு : இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் தமிழக பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் சூர்யா அவர்களையே சாரும். புதிய தலைமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com