நாள்தோறும் ஹெட்செட் சுமக்கும் காதுகளுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்? மருத்துவர் விளக்கம்!

நாள்தோறும் ஹெட்செட் சுமக்கும் காதுகளுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்? மருத்துவர் விளக்கம்!
நாள்தோறும் ஹெட்செட் சுமக்கும் காதுகளுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்? மருத்துவர் விளக்கம்!

கடந்த சில வருடங்களாகவே வயர்லெஸ் ஹெட்செட்ஸ் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ப்ளூடூத் ஹெட்செட்ஸ்களான அவற்றை, ஏர்-பாட்ஸ் (Air pods) வகைகளில் உபயோகப்படுத்த பலர் விரும்புகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும், ஆப்பிள் நிறுவனம் சார்பில் மட்டும் ஏறத்தாழ 100 மில்லியன் ஏர்-பாட் செட்ஸ் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹெட்செட்டை பயன்படுத்த, செல்போனோடு அதை மாட்டிக்கொண்டே இருக்க வேண்டாமென்பதால், பலரும் இதற்கு முன்னுரிமை கொடுத்து வாங்குகிறார்கள்.

ஆனால் இந்த வகை ஹெட்செட்ஸ், ப்ளூடூத் வகை என்பதால், ஒருமுறை இதை கழற்றினால் மீண்டும் முதலிருந்து ஃபோனுடன் அதை கனெக்ட் செய்ய வேண்டும் - அதற்கு அதிக நேரம் எடுக்கும்... அதிலும் குறிப்பாக ஏர்-பாட் ஹெட்செட் எனில் அது அளவில் சின்னதாக இருப்பதால் மறதியில் அதை எங்காவது வைத்துவிட்டு பின் தொலைத்துவிடுவோம் என நினைத்து அதை காதிலேயே மாட்டியிருக்கின்றனர். இப்படி காதிலிருந்து ஹெட்செட்டை கழற்றாமலேயே இருந்தால், சில மணி நேரத்துக்குப் பின் காதிலிருந்து மெழுகு போல ஏதேனும் திரவம் வெளிவருவதை நம்மால் உணர முடியும். இப்படி வெளியேறும் திரவத்தை காணும்போது, இதனால் காதுகளுக்கோ செவித்திறனுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா - எதனால் இப்படி வருகிறது என்றெல்லாம் நம்மில் பலருக்கும் சந்தேகம் எழும்; ஐயமும் எழும். ஆனாலும்கூட அடுத்தடுத்த முறைகளில் மீண்டும் மீண்டும் அதை உபயோகப்படுத்தவே செய்வோம்! ஆனால் இந்த சந்தேகத்தை தீர்த்துக்கொள்வது முக்கியம்தானே!?

அதனால்தான் ‘இந்த திரவம் வெளியேறுவது ஏன், அத்திரவம் காது பாதிப்புக்கான அறிகுறியா? ஹெட்செட் அணிந்துக்கொண்டே இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்ன மாதிரியான அறிகுறிகளை வைத்து அதீதமாக நாம் ஹெட்செட் அணிகிறோம் என்பதை அறிவது?’ போன்ற நமது அடிப்படை சந்தேகங்கள் குறித்து காது, மூக்கு, தொண்டை நல நிபுணர் வேலுமணியிடம் கேட்டோம். விரிவாக விளக்கினார் அவர்.

“காதிலிருந்து வரும் அந்த திரவத்தை செருமென் என குறிப்பிடுவோம். காதுகளின் துவாரத்தின் அருகே, மெலிதாக மெழுகு போன்றதொரு பகுதி, சற்றே ஈரப்பசையுடன் இருக்கும். இதிலிருந்துதான் அந்தத் திரவம் சுரக்கும். இது ஹெட்செட் அணியும்போது என்றில்லை... எல்லா நேரமும் சுரந்துக்கொண்டேதான் இருக்கும். ஹெட்செட் அணியாத நேரங்களில், இயற்கையாகவே அவை காதிலிருந்து வெளியேறுவிடும் என்பதால் அப்போது நமக்கு தெரிவதில்லை.

இந்தத் திரவம் காதில் இருப்பதால்தான், காது சார்ந்த தொற்றுநோய் பாதிப்புகள் - பூச்சிகளால் தாக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் - தண்ணீர் காதுக்குள் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவையாவும் தடுக்கப்படுகிறது. இது ப்ரௌன் கலரில், சற்றே பிசுபிசுப்பாக இருக்கும். சில நேரம் வெள்ளை நிறத்திலும் இருக்கலாம். வெகுநேரம் ஹெட்செட் உபயோகப்படுத்தும்போது, இயற்கையாக இது வெளியேறுவது தடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்கும் மேலாக உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு வெளியேற்றம் தடுக்கப்படும்போது, அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவது வழக்கம். அப்படித்தான் இதனாலும் பிரச்னை ஏற்படுகிறது.

தொடர்ச்சியாக பல மணி நேரங்களுக்கு ஹெட்செட் உபயோகிப்போருக்கு, இந்த மெழுகு போன்ற ஈரப்பசை அவர்களின் ஹெட்செட்டில் ஒட்டிக்கொள்ளும். இந்த ஈரப்பசை இயற்கையானதுதான் என்பதால் பயப்படவேண்டாம்தான்... ஆனாலும் அதிக நேரம் இப்படி இந்த திரவம் ஹெட்செட்டிலேயே தேங்கி காதுக்குள்ளேயே இருக்கும்போது, அதனால் பின்விளைவுகள் பல ஏற்படும். குறிப்பாக வெகு நேரம் ஒருவர் ஹெட்செட் அணிந்துள்ளார் என்றால், அவரின் காதில் அந்த மெழுகு போன்ற திரவம் அப்படியே இருக்கும். அவர் ஹெட்செட்டை கழற்றவே இல்லை - கழற்றினாலும் சுத்தப்படுத்தாமல் மீண்டும் அணிகிறார் என்றால், அந்த திரவம் அப்படியே அங்கேயே தேங்கி நிற்கும். இவை நாளடையும்போது காதில் அது கட்டிபோல உருவாகி ஒவ்வாமை, சீல் பிடித்தல், வீங்குதல், செப்டிக் ஆகுதல் போன்றவை ஏற்பட்டு தொற்றுநோய் சிக்கல்கள் உள்ளிற்றவற்றை ஏற்படுத்தும். இப்படி ஏற்படுபவர்களுக்கு முதல்நிலை அறிகுறிகளாக காது இரைச்சல், காது வலி போன்றவை கடுமையாக ஏற்படும். அப்போதே சுதாரித்துக்கொண்டு ஹெட்செட் உபயோகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். தவிர்ப்பது இன்னும் நல்லது.

பலரும் ஈரப்பசை வெளியேறுகையில், அதை அழுக்கெனக்கூறி பட்ஸ் உபயோகித்து வெளியேற்றுவர். ஆனால் பட்ஸ் என்பது, அந்த ஈரப்பசையை உள்ளே தள்ளி தள்ளி மேலும் கூடுதல் பிரச்னையையே உருவாக்கும். இந்த ஈரப்பசையை துணிவைத்து வெளிப்புறமாக துடைப்பதோடு நிறுத்திக்கொண்டால் போதும். மற்றபடி, பட்ஸெல்லாம் பயன்படுத்தவேண்டாம். இந்த விவகாரம் என்றில்லை. எப்போதுமே, காதுகளுக்கு பட்ஸ் பயன்படுத்தக்கூடாது. பட்ஸ், தீங்கென்பதை மக்கள் உணர்வது அவசியம்.

இந்த திரவத்தால் ஏற்படும் சிக்கலை தாண்டி யோசிக்கையில், சில விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். ஹெட்செட் பயன்படுத்துகையில், அதிகப்படியான சத்தம் காதுக்கு மிக அருகிலேயே வைத்து கேட்க வைக்கப்படுகிறது. இப்படி காது ஜவ்வுக்கு மிக அருகில் சத்தம் அதிகமாக வைத்து அதை கேட்போருக்கு, வயதானபிறகு கேள்வித்திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். அதாவது செவித்திறன் குறைவு. Noise induced hearing loss என்று இதை ஆங்கிலத்தில் சொல்வோம். 40, 50 வயதுக்கு மேல் இதன் பாதிப்பு அதிகமாக தெரியும். 

நான் கூறிய இவையாவும், அனைத்து வகை ஹெட்செட் பயனாளர்களுக்கும் பொருந்தும். ஹெட்செட் பயனாளர்களிலேயே கூடுதல் சிக்கலுடையவர்கள் ஏர்-பாட்ஸ் பயன்படுத்துவோர் தான். ஏனெனில் அவர்கள்தான் கீழே வைத்தால் தொலைத்துவிடுவேனோ என்ற அச்சத்தில் அதை காதிலிருந்து கழற்றாமலேயே இருப்பார்கள். எவ்வித சத்தமும் அதில் வைக்கவில்லை என்றாலும்கூட, தொலையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதை காதிலேயே வைத்திருப்பார்கள். இப்படி வைத்திருப்பதால், சுவாசப்பிரச்னைகள் உருவாகும். காதென்பது, மூக்கு மற்றும் தொண்டைக்கு நெருங்கிய தொடர்புடைய இரு துவாரங்கள் கொண்ட ஒரு பகுதி. அதனால், அந்த காது வழியாகவும் சுவாசத்தின் பங்கு இருக்கும். காது முழுமையாக அடைபட்டு போகையில், அந்த சுவாச சுழற்சியில் மாறுதல்கள் உருவாகி சிக்கல்கள் உருவாகும். காது, தன்னால் சுவாசிக்க முடியாமல் போகும்போது மேற்குறிப்பிட்ட ஈரப்பசையை உள்ளுக்குள் சேர்த்து வைத்து பிரச்னையை உண்டாக்கும்.

இது மட்டுமன்றி பொதுவாக ஹெட்செட் அணிவோருக்கு, அதை அணிந்தபிறகு வெளிப்புற சத்தமானது சில டெசிபெல்கள் குறைந்தே கேட்கும். நீங்கள் ஹெட்செட் உபயோகிப்பவர் எனில், உங்களால் இதை புரிந்துக்கொள்ள முடியும். (ஹெட்செட் அணிந்துக்கொண்ட பின், நீங்கள் பாட்டே கேட்கவில்லை என்றாலும்கூட, உங்களுக்கு அருகிலிருந்து பேசுவோர் சற்று குரலை உயர்த்தி சத்தமாகவே பேசவேண்டியிருக்கும். அதையே வெளிப்புற சத்த டெசிபெல் குறைகிறது என்கிறார் மருத்துவர்.) தொடர்ச்சியாக இப்படி டெசிபெல் குறைந்துபேசும்போது, நீங்கள் சத்தமாக பேசத் தொடங்குவீர்கள். இந்த இடத்தில், உங்களுக்கு கேள்வித்திறன் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை உங்களால் உணர முடியாது; மாறாக உங்களுடன் இருப்பவர்களால்தான் உணரமுடியும். ‘இயல்பான சத்தத்துக்கு அதிகமாக கூப்பிட்டால்தான் திரும்புகின்றீர்கள்; பக்கத்திலிருப்பவரிடம் பேசுகையில்கூட சத்தமாக பேசுகின்றீர்கள்’ என்றெல்லாம் சொல்லி அவர்கள் இதை குறிப்பிடுவர். 40, 50 வயதுவரை இப்படி இருந்தால், அதன்பின் காதில் கேட்கும் திறன் இயந்திரத்தை பயன்படுத்தியே பிரச்னையை சரிசெய்ய வெண்டியிருக்கும். இளவயதிலேயே மருத்துவரை அணுகி, ஆலோசனைப்பெற்று மருத்துவ உதவியுடன் ஹெட்செட் பயன்பாட்டை குறைத்துக்கொண்டால், விரைந்து இயல்புக்கு திரும்பலாம்” என்றார் மருத்துவர் வேலுமணி.

இந்தக் கட்டுரையை வாசிக்கும் இந்த நேரத்தில், உங்கள் காதுகளில் ஹெட்செட் உள்ளதென்றால் அதை கழற்றி ஓரமாக வைத்துவிட்டு சற்று உங்கள் காதுகளை இயற்கை காற்றை சுவாசிக்க விடுங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com